OIS... EIS... PDAF... உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா இதில் எந்த டெக்னாலஜி?

OIS... EIS... PDAF... உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா இதில் எந்த டெக்னாலஜி?

Published:Updated:
OIS... EIS... PDAF... உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா இதில் எந்த டெக்னாலஜி?
OIS... EIS... PDAF... உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா இதில் எந்த டெக்னாலஜி?
0Comments
Share

DSLR கேமராவுக்கு இணையாக புகைப்படங்கள் எடுப்பது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் அசத்துகின்றன ஸ்மார்ட்போன் கேமராக்கள். ஆப்பிள் முதல் சாம்சங் வரை மொபைல் நிறுவனங்கள், நல்ல புகைப்படங்களுக்காக தங்கள் ஸ்மார்ட்போன்களில்  பயன்படுத்தும் கேமரா தொழில்நுட்பங்கள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்.

Optical Image Stabilization (OIS)

ஸ்மார்ட்போனில் ஒரு போட்டோவை எடுக்கும்பொழுது கைகளை அசையாமல் வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எப்படியாவது ஒரு சிறு அசைவு ஏற்படத்தான் செய்யும். அந்த சிறிய அசைவு புகைப்படத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு சில நேரங்களில் ஓடும்பொழுதோ அல்லது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும்பொழுதோ வீடியோக்கள் எடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயங்களில் கேமராவை பயன்படுத்துவதில் இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் Image Stabilization தொழில்நுட்பங்கள். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுவது OIS. இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் கேமராக்களின் லென்ஸ் அமைப்பு நிலையாக பொறுத்தப்படாமல் சற்று அசையும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Gyro-sensorகள் மொபைல் அசையும்பொழுது லென்ஸ் அமைப்பை சரி செய்து ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக மொபைலை அசைத்தாலும் புகைப்படங்களை சரியாக எடுக்கலாம்.

Electronic image stabilization (EIS)

OIS தொழில்நுட்பம் என்பது கேமரா லென்ஸை சரிசெய்து இயங்குகிறது. அதற்குப் பதிலாக EIS தொழில்நுட்பத்தில் எடுத்த புகைப்படம் டிஜிட்டலாக மாற்றப்படும். அதன்பின்னர் EIS தொழில்நுட்பம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆராய்ந்து அதில் இருக்கும் தேவையற்ற அசைவு ஏற்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து அதை சரி செய்யும். இதுவும் ஒரு சில ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டாலும், OIS மற்றும் EIS இரண்டையும் ஒப்பிடுகையில் OIS தொழில்நுட்பமே சிறந்தது.

ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பங்கள்.

ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பம் என்பது கேமராவுக்கு முன்னால் இருப்பதைக் கைகளை பயன்படுத்தாமல் ஃபோகஸ் செய்ய உதவுவது. அதில் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவது PDAF மற்றும் Laser Auto Focus.

Phase Detection Technology (PDAF)

ஆப்பிள் முதல் ரெட்மி வரை  PDAF தொழில்நுட்பத்தையே பெரும்பாலான மொபைல் நிறுவங்கள் தங்களது மொபைல் கேமராக்களில் பயன்படுத்துகின்றன. ஐபோன்10 ல் இருக்கும் கேமராவிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

PDAF சென்சார் ஒரு லென்ஸ் வழியாக வரும் ஒரு காட்சியை இரண்டாக பிரித்து ஆராய்ந்து அதற்கேற்றவாறு லென்ஸை சரிப்படுத்தி ஃபோகஸ் செய்யும். ஒரு காட்சியை இரண்டாக பிரித்து ஆராய்வதால் பொருள் இருக்கும் இடத்தை விரைவாக ஃபோகஸ் செய்ய முடிகிறது

Laser Auto Focus

ஒரு சில ஸ்மார்ட்போனை கேமராக்களின் ஃபிளாஷ் லைட்டின் அருகே மற்றொரு அமைப்பு இருப்பதைப் பார்க்க முடியும். Asus நிறுவனத்தின் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த Laser Auto Focus தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது செயல்படும் விதம் மிக எளிமையானது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு infrared laser ஒளிக்கற்றை கேமரா அருகே இருக்கும் சிறிய IR டிரான்ஸ்மீட்டர் மூலம் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். அந்த ஒளிக்கற்றை எதிரில் இருக்கும் பொருளின்மீது பட்டு திரும்பும் நேரத்தை கணக்கிட்டு கேமரா லென்ஸ் ஃபோகஸ் செய்யும். ஒளி குறைவான இடத்தில் கூட சிறப்பாக செயல்படுவது  Laser Auto Focus ன் சிறப்பு. ஆனால் சற்று தூரமாக இருக்கும் பொருளை இதன்மூலமாக போகஸ் செய்வது கடினம் என்பது இதன் குறை.