இதுவரை 300 மேடைகள்... 8 வயதில் ஆன்மிகச் சொற்பொழிவில் அசத்தும் பூஜிதா!

எட்டு வயதிலேயே `இலக்கியச்செல்வி', `முத்தமிழ்ச்செல்வி', `தமிழமுது', `மக்கள் பேச்சாளர்'... எனப் பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர் பூஜிதா

Published:Updated:
இதுவரை 300 மேடைகள்... 8 வயதில் ஆன்மிகச் சொற்பொழிவில் அசத்தும் பூஜிதா!
இதுவரை 300 மேடைகள்... 8 வயதில் ஆன்மிகச் சொற்பொழிவில் அசத்தும் பூஜிதா!
0Comments
Share

காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் சிறுமி பூஜிதாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆன்மிகச் சொற்பொழிவுகள், இலக்கியக் கூட்டங்கள், முற்போக்கு மேடைகள், பள்ளி - கல்லூரி விழாக்கள், சமூக சேவை சங்கங்களின் கூட்டங்கள்... எனப் பல மேடைகளிலும் கலக்கிவருகிற சுட்டிப் பெண் பூஜிதா. கொஞ்சும் குரலில் இவர் பேசும் ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு, செட்டிநாட்டு மண்ணில் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். எல்.கே.ஜி படிக்கும்போது மேடையேறிய பூஜிதா, இதுவரை சுமார் 300 மேடைகளில் பேசியிருக்கிறார். பூஜிதா அமர்ந்திருக்கும் மேடையைப் புதிதாகப் பார்ப்பவர்கள், `ஏதோ சிறப்பு விருந்தினர்களின் குழந்தைபோல. அதனால்தான் மேடையில் உட்கார வைத்திருக்கிறார்கள்’ என்று நினைப்பார்கள். சிறுமி பூஜிதா மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்ததும், மெய்மறந்து போவார்கள். அந்த அளவுக்குச் சொக்கவைக்கும் பேச்சு இவருடையது.

காரைக்குடிப் பகுதிகளில் மட்டுமல்ல... தமிழ்நாடு முழுக்கவே பேசிவருகிறார் பூஜிதா. இவரின் அபாரமான நினைவாற்றலைக் கண்ட ஒரு தனியார் பள்ளி, ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே இவரைத் தத்தெடுத்துக்கொண்டது. பன்னிரண்டாம் வகுப்புவரை பூஜிதாவுக்கு அந்தப் பள்ளியில் எந்தக் கட்டணமும் இல்லை. எட்டு வயதிலேயே `இலக்கியச்செல்வி', `முத்தமிழ்ச்செல்வி', `தமிழமுது', `மக்கள் பேச்சாளர்'... எனப் பல பட்டங்களுக்குச் சொந்தக்காரராகிவிட்டார் பூஜிதா. இந்தக் குட்டிப் பெண் ஆசனங்கள் செய்திலும் கில்லி! மாறுவேடப்போட்டியில் கலந்துகொண்டால், இவருக்குத்தான் முதல் பரிசு.

நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார் பூஜிதா. இந்தச் சின்னஞ்சிறு வயதில் இது எப்படிச் சாத்தியம்? பெற்றோரின் உதவியில்லாமல் கண்டிப்பாகச் சாத்தியமில்லை. அதே நேரத்தில், பூஜிதாவின் அபாரமான நினைவாற்றலை, பேச்சாற்றலை அறிந்துகொண்டது எப்போது? - பூஜிதாவின் தந்தை கணேஷிடம் பேசினோம்...

`` அப்போ பாப்பா பேச ஆரம்பிச்சு, கொஞ்ச நாள்தான் ஆகியிருந்துச்சு. டி.வி-யில எந்தப் பாட்டைக் கேட்டாலும், வசனத்தைக் கேட்டாலும் அப்படியே திருப்பிப் பாடுவா, பேசுவா. நமக்குக்கூட சில நேரத்துல வரிகள் மறந்துடும். ஆனா, அவ வார்த்தைகள் மாறிடாம ரொம்பச் சரியாப் பாடுவா. என் மனைவி இளவரசிதான் இதை முதல்ல கவனிச்சாங்க. அதுக்கப்புறம் பூஜிதாவோட நினைவாற்றலைச் சரியாகப் பயன்படுத்தணும்னு முடிவு பண்ணினோம். அவளுக்கு முதல்ல திருக்குறளைத்தான் சொல்லிக் கொடுத்தோம்.

முதன்முதல்ல அவ ஏறினது திருக்குறள் ஒப்புவிக்கிற மேடையில. மூணேகால் வயசுலேயே, எங்க ஊர்ல நடந்த கலை இலக்கிய இரவு மேடையில 110 திருக்குறள்களை ஒரு தப்பும் இல்லாம சொன்னா. அடுத்ததா, திருப்பாவை, அபிராமி அந்தாதி சொல்லிக் கொடுத்தோம். இவளைவிட வயசுல பெரிய குழந்தைங்க கலந்துக்கிட்ட மேடையில, திருப்பாவையில 20 பாடல்களைச் சரியாகச் சொல்லி முதல் பரிசு வாங்கினா.

எங்க ஊர் தேவகோட்டையில வருஷா வருஷம் கந்தசஷ்டி விழா நடக்கும். கடந்த நான்கு வருஷமா அந்த விழா மேடையில பேசிக்கிட்டு இருக்கா. எங்க ஊர்ல மட்டுமல்ல... எங்க பக்கத்து ஊரான காரைக்குடி, திருப்பத்தூர், குன்றக்குடி, பிள்ளையார்பட்டினு எங்கே கந்தசஷ்டி விழா, ஆன்மிக விழாக்கள் நடந்தாலும் இவளைச் சிறப்பு விருந்தினராக் கூப்பிடுவாங்க. அங்கே போய் பேசிட்டு வருவா.

ஆன்மிகம் மட்டுமில்ல... சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றியும், சமூகப் பிரச்னைகள் குறித்தும் பல மேடைகள்ல பேசியிருக்கா. மாறுவேடப் போட்டிகள்லயும் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கா. கோயில்கள் மட்டுமல்ல... சில பள்ளிகள், கல்லூரிகள்லயும் சிறப்பு விருந்தினராக் கூப்பிடுவாங்க. அங்கே போய் சமூகம் சார்ந்த பிரச்னைகளையெல்லாம் பேசுவா. என் மனைவியும் நானும் அவளுக்கு உதவி செய்வோம். அதைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு உள்வாங்கிக்குவா.

என் மனைவி பல வருஷமா யோகா செஞ்சிட்டு வர்றாங்க. அவங்ககூட சேர்ந்து இவளும் பண்ண ஆரம்பிச்சா. அப்படியே தியானம் செய்யவும் கத்துக்கிட்டா. இப்போவரைக்கும் யோகா, தியானமெல்லாம் தொடர்ந்து செஞ்சுகிட்டு வர்றா. எங்க வீட்டுல டி.வி இல்லை. அதனால, சுட்டிவிகடன், சிறுவர் மலர் போன்ற புத்தகங்களைத்தாம் படிச்சுட்டு இருப்பா.

இயற்கை வளங்கள் குறித்து அக்கறை அவளுக்கு அதிகமா இருக்கு. நாங்க பேசுறதை உன்னிப்பாக் கவனிப்பா. ஏராளமான சந்தேகங்கள் கேட்பா. அப்படியே நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டா. வரும் 14-ம் தேதி எங்க ஊர்ல நடக்குற கலை இலக்கிய இரவுல, நீர் மேலாண்மை பத்திப் பேசி இருக்கா.

தேவகோட்டை லயன்ஸ் கிளப் சார்பாக அவளுக்கு `இலக்கியச் செல்வி' பட்டம் கொடுத்தாங்க. தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பாக `தமிழமுது' பட்டமும், ஒரு தனியார் கல்லூரியின் சார்பாக `முத்தமிழ்ச்செல்வி' பட்டமும், `தமிழன்’ தொலைக்காட்சியின் சார்பாக இந்த வருஷம் 'மக்கள் பேச்சாளர்' பட்டமும் கொடுத்திருக்காங்க. பூஜிதா பிறந்ததுக்கு அப்புறம், எங்க வாழ்க்கையே அர்த்தமுள்ளதா மாறிடுச்சுங்க’’ என்கிறார் கணேஷ் நெகிழ்ச்சியோடு.

சிறுமி பூஜிதாவிடம் பேசினோம்... ``எங்க அப்பா, அம்மாதான் எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுப்பாங்க. எனக்கும் பேசுறது ரொம்பப் பிடிக்கும். என்ன சொல்லிக் கொடுத்தாலும் அப்படியே கேட்டுட்டுப் பேசிடுவேன். எனக்கு அப்துல் கலாமை ரொம்பப் பிடிக்கும். பெரிய சயின்டிஸ்ட் ஆகணும்... அதுதான் என்னோட லட்சியம்’’ தெளிவாக, சுருக்கமாகப் பேசுகிற பூஜிதா, திருப்பாவையிலிருந்து ஒரு பாடலைச் சொல்கிறார். கேட்க கேட்க பரவசத்தில் உருகிப் போகிறது உள்ளம்.

இந்தச் சிறிய வயதிலேயே இவ்வளவு நினைவாற்றலும் அறிவாற்றலும் கொண்ட பூஜிதா, எதிர்காலத்தில் மிகப்பெரிய உயரத்தை எட்டிப் பிடிப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.