`ஒரு நாளில் 87 வழக்குகள்; முதல் இடத்தில் உ.பி' - இந்தியாவில் அதிகரித்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், ஒரே ஆண்டில் 59,853 சம்பவங்களுடன் உத்தரப்பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது.

Published:Updated:
Yogi Adityanath
Yogi Adityanath ( Twitter / myogiadityanath )
0Comments
Share

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வயலில் வேலை செய்துகொண்டிருக்கும்போது நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை செய்தவர்களை எதிர்த்துப் போராடிய அந்த பெண்ணின் மீது செலுத்திய அழுத்தத்தால் தனது நாக்கைக் கடுமையாகக் கடித்துள்ளார். இதில் நாக்கு வெட்டுப்பட்டுள்ளது. மேலும் அவரது முதுகுத் தண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உ.பி பெண்
உ.பி பெண்

அங்கு ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த திங்கள் கிழமை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் (Safdarjung) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் அந்த இளம் பெண். இவரது மரணம் உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது மொத்த இந்தியாவைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த கொடூரக் குற்றம் செய்த நான்கு பேரையும் உ.பி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இதற்கிடையில் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் இன்று அதிகாலையிலேயே வேக வேகமாகத் தகனம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இதே போன்ற பெண்களுக்கு எதிரான தொடர் குற்றச்சம்பவங்கள் நடப்பதால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் தேசிய குற்றவியல் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு 87 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மொத்தமாக ஆண்டு முழுவதும் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 7% அதிகமாக உள்ளது. அதேபோல் 2019-ம் ஆண்டில் நாடு முழுவதும் 32,033 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணவர் அல்லது உறவினர்களால் கொடுமை செய்யப்பட்ட வழக்கு 30.9%, பெண்கள் மீதான தாக்குதல் 21.8% மற்றும் பெண்கள் கடத்தல் வழக்கு 17.9% என பதிவாகியுள்ளன.

வன்கொடுமை
வன்கொடுமை

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், ஒரே ஆண்டில் 59,853 சம்பவங்களுடன் உத்தரப்பிரதேசம்தான் முதல் இடத்தில் உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உத்தரப்பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆசிட் தாக்குதலிலும் பாலியல் வன்கொடுமை முயற்சிகளின் எண்ணிக்கையிலும் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

மேலும் போக்ஸோ சட்டத்தின் கீழ், 7,444 வழக்குகளுடன் உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும் மூன்றாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும் உள்ளன. நிர்பயா, கத்துவா சிறுமி, ஹைதராபாத் பெண் மருத்துவர், உன்னாவ் சிறுமி என நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. ஆனால் இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு சொற்பமாகவே தண்டனை கிடைத்துள்ளதாக கண்டனப் பதிவுகள் சமூக வலைதளங்கள் முழுக்க விவாதிக்கப்பட்டு வருகின்றன.