தாம்பத்ய வாழ்க்கை இனிக்க ஐ லவ் யூ வேண்டாம்... ஆனால்..?!

தாம்பத்ய வாழ்க்கை இனிக்க ஐ லவ் யூ வேண்டாம்... ஆனால்..?!

Published:Updated:
தாம்பத்ய வாழ்க்கை இனிக்க ஐ லவ் யூ வேண்டாம்... ஆனால்..?!
தாம்பத்ய வாழ்க்கை இனிக்க ஐ லவ் யூ வேண்டாம்... ஆனால்..?!
0Comments
Share

ல்லாக் காலத்திலும் தாம்பத்யம் என்பது, நான்கு கரங்களில் இருக்கும் ஒற்றைக் கண்ணாடிப் பாத்திரம்தான். ஒரு கரம் பலவீனமானாலும் தாம்பத்யம் தள்ளாட ஆரம்பித்துவிடும். கொஞ்சம் ஏமாந்தாலும் தரையில் விழுந்து சுக்குநூறாகிவிடும். சரி, தாம்பத்யம் உடையாமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் தம்பதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

``சின்னச் சின்ன விஷயங்கள்தாம் தாம்பத்யத்தை உடைக்கும் வில்லன்கள் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, சின்னச் சின்ன விஷயங்களே ஒரு தாம்பத்யத்தைக் காப்பாற்ற போதும் என்பதும்'' என்கிற உளவியல் நிபுணர் டி.வி. அசோகன் சொல்வதைக் கேளுங்கள்.

* `நான்', `எனது', `என்னுடைய', `தனித்தன்மை' என இருப்பவர்களைவிட `ஒருவனுக்கு ஒருத்தி', `கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் என் வாழ்க்கைத் துணை' போன்ற பழைய சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் தாம்பத்யம், அவ்வளவு எளிதில் உடைவதில்லை என்கிறது ஓர் ஆராய்ச்சி. இந்தக் காலத்துப் பெண்கள் தனித்தன்மையுடன் எல்லாவற்றிலும் ஜெயித்துக்கொண்டிருப்பது தவறு என்று சொல்லவில்லை. அதனுடன், உங்கள் பெற்றோர்களின் தாம்பத்திய வெற்றி சூத்திரத்தையும் பின்பற்றுங்கள். உங்கள் தாம்பத்ய பில்டிங்கின் பேஸ்மென்ட்டும் வலுவாக இருக்கும். 

* பல ஆளுமைப் பண்புகள் இணைந்துதான் ஒரு பர்சனாலிட்டி உருவாகும். பதற்றம் என்பதும் ஓர் ஆளுமை, சந்தேகம் நிறைய இருந்தால் சந்தேக ஆளுமை, சார்புநிலை ஆளுமை, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆளுமை, இரக்க ஆளுமை, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பயப்படும் ஆளுமை என்று ஒருவருக்குள்ளேயே பல ஆளுமைகள் அடங்கியிருக்கும். இதில், தைரியமான ஆளுமை பயந்த ஆளுமையை விரும்பலாம். அதுபோலவே, பயந்த ஆளுமை இன்னொரு பயந்த ஆளுமையையும் விரும்பும். கோபம் அமைதியை லவ் பண்ணும்; கோபத்தைக் கோபமும் லவ் பண்ணும். உங்களுடைய ஆளுமை எது, உங்கள் துணையின் ஆளுமை எது என்பதைத் தெரிந்துகொள்வதும் தாம்பத்யத்தைத் தாங்கிப்பிடிக்கும் ஒரு டிரிக். 

* பத்துக்கு ஏழு பொருத்தம் இருந்தால், கல்யாணம் பண்ணலாம் என்பார்கள். உளவியலைப் பொறுத்தவரை மனைவிக்கு இருக்கும் 10 விருப்பங்களில் 7 விருப்பங்கள் கணவருக்கு இருந்துவிட்டாலே அங்கே ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். `எனக்கு எதிலும் பெருசா ஈடுபாடு கிடையாது' என்கிற ரசனையற்ற அல்லது விட்டேற்றியான மனப்பான்மை தாம்பத்தியத்தை ருசியற்றதாக்கிவிடும்  

*  ஒரு காலத்தில் குழந்தைகள்தாம் தாம்பத்யத்தைப் பிடித்துவைத்திருந்தார்கள். தற்போது, `என் மனைவியை நம்பலாம்', `என் கணவனை நம்பலாம்' என்கிற நம்பிக்கை உணர்வு மட்டுமே குடும்ப வண்டியை ஓடவைக்கும் அச்சாணியாக இருக்கிறது. 

*  ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது... இதை, பொருளாதார ரீதியாகச் சொல்லவில்லை. `இவரில்லாமல் நானில்லை', `இவள் அருகில் இல்லாமல் எனக்கு நிம்மதியில்லை' என்பது போன்ற மனதளவிலான சார்பு நிலை, கணவன் மனைவிக்கிடையே வரும் பிரச்னைகளை இரும்புக்கரத்தால் அடக்கிவிடும்.

* தம்பதிகளுக்கு ஒரு வார்த்தை, உங்கள் தவறுகளைச் சரியாக்க வாழ்க்கை துணையுடன் சண்டைப் போடாதீர்கள். பிறகு, கல்யாண வாழ்க்கை கரும்பின் நுனிபோல ஆகிவிடும். தவறுகளை ஒத்துக்கொண்டு பாருங்கள், அடிக்கரும்பாக இனிக்கும்.

* வாழ்க்கை துணை சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். இந்த இயல்பு பொதுவாகவே பெண்களிடம் உண்டு. ஆண்களுக்கு 50 வயதுகளில்தாம் வருகிறது. ஒருவருக்கொருவர் காது கொடுப்பது தாம்பத்தியத்துக்கு நல்லது.  

* எல்லோரிடமும் பாசிட்டிவ் ஃபேக்டர், நெகட்டிவ் ஃபேக்டர் இருக்கும். இதில், நெகட்டிவ் குணத்துக்காக தன் லைஃப் பார்ட்னரைவிட்டு யாரும் பிரிவதில்லை. தன் லைஃப் பார்ட்னரிடம் பாசிட்டிவ் குணங்களே இல்லாதபோதுதான் தாம்பத்யம் பிளவுபடுகிறது. காலங்காலமாகத் தவறு செய்கிற பல கணவன்மார்களை, மனைவிகள் மன்னித்துக் குடும்பம் நடத்தியதற்குக் காரணம், பொருளாதார ரீதியாகக் கணவனைச் சார்ந்து இருந்தது மட்டுமல்ல; கணவர்களிடம் இருக்கும் பாசிட்டிவ் குணத்துக்காகவும்தான். 

* மனதுக்குள் நீங்கள் சந்தோஷமாக இருந்த நினைவுகளைச் சேமித்துவையுங்கள். பிரச்னை வரும் நேரம், இவை உங்கள் திருமண வாழ்வைக் காப்பாற்றிவிடும். 

* நிறையப் பேசுங்கள். எதிர்காலத்துக்கு என்ன செய்யப்போகிறோம், குழந்தைகளுக்கு என்ன சேமித்துவைத்திருக்கிறோம் என்பதைத் தாண்டி, வெட்டியாகப் பேசுவதற்கு உங்கள் இருவரிடமும் நிறைய கதைகள் இருக்கின்றன என்றால், உங்கள் தாம்பத்யத்தை சீரியல் வில்லிகளே வந்தாலும் அசைக்க முடியாது.  

* காதல், காமம் இரண்டையும்விட நட்பாக இருங்கள். 

* ஹோட்டல் சர்வர் மாதிரி வாழ்க்கை துணைக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் பரிமாறுங்கள். 

* மூன்றாவது மனிதர்களைத் தலையிட விடாதீர்கள். இந்த உலகத்தில் எப்போதும் அடுத்தவன் கதை அல்வா மாதிரிதான். மற்றவர்களை உங்கள் பிரச்னைகளின் நீதிபதிகளாக ஆக்கிவிடாதீர்கள்.  

* மொபைலை டேபிளின் மேல் வைத்துவிட்டு தைரியமாக ரெஸ்ட்ரூம் போகமுடிகிறது என்றால், உங்கள் தாம்பத்யம் படு சேஃபாக இருக்கிறது. போன் வந்தவுடன் பால்கனி போய் குசுகுசுவென்று பேசுகிறீர்கள் என்றால், உங்கள் இல்லற வாழ்க்கை படு பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

* பெட்ரூமுக்குள் டிவி. இருப்பதும் உறவைக் கெடுக்கும் வில்லன்தான் தம்பதிகளே.

* தாம்பத்யத்தைக் காப்பாற்ற, `ஐ லவ் யூ' சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தவறு நேர்கிற இடங்களில் `ஸாரி' சொல்லிப் பழகினாலே தாம்பத்யம் இனிக்கும்.