நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குறுக்குத்துறை முருகன் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்!

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம்
0Comments
Share

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பி வழிகின்றன.

மணிமுத்தாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர்
மணிமுத்தாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர்

மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருக்கிறது. அதனால் அணைகளிலிருந்து சுமார் 40,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து பெய்யும் மழை
தொடர்ந்து பெய்யும் மழை

ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்ல வேண்டாம் என்றும் செல்ஃபி எடுக்க ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு எச்சரித்திருக்கிறார்.

நெல்லையில் தாமிரபரணி ஆற்றிலுள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. ஏற்கெனவே கோயிலிலிருந்த மூலவர் சிலை பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, அருகிலிருக்கும் கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆற்றுக்குள் இருக்கும் முருகன் கோயில், பழங்கால கட்டுமானத்தின்படி கட்டப்பட்டிருப்பதால் பெரு வெள்ளத்தையும் தாங்கி நிற்கிறது.

குறுக்குத்துறை கோயிலின் படகு வடிவிலான கட்டுமானம்
குறுக்குத்துறை கோயிலின் படகு வடிவிலான கட்டுமானம்

குறுக்குத்துறை கோயிலின் கட்டுமானம், படகு வடிவில் அமைந்திருக்கிறது. அதனால் ஆற்றில் வெள்ளம் வரும்போது கோயிலின் சுவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலிருக்கிறது. இந்தக் கோயில் ஆற்றுக்குள் இருந்தபோதிலும் வெள்ளத்தைச் சமாளிக்கும் கட்டமைப்புடன் இருப்பதால் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய வரலாற்றைச் சுமந்தபடி உறுதி குலையாமல் இருக்கிறது.

இதற்கிடையே, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் அரக்கோணத்திலிருந்து 50 பேர் கொண்ட இரு குழுக்களாக தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் நெல்லைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.