`மொத்தம் 17 நிமிடங்கள்!’ - சசிகலா, ரஜினிகாந்த் சந்திப்பின் பின்னணி என்ன?

அண்மையில் ரஜினிக்கு உடல் நல பாதிப்பு, அவருக்கு மத்திய அரசு விருது கொடுத்தது என இந்த இரண்டு விஷயங்களுக்காக நேரில் வந்து பார்க்க விரும்புகிறேன் என்றாராம் சசிகலா.

Published:Updated:
ரஜினி - சசிகலா சந்திப்பு
ரஜினி - சசிகலா சந்திப்பு
0Comments
Share

சசிகலா இப்போதெல்லாம் அடிக்கடி , போயஸ்கார்டன் பக்கம் வந்து போகிறார். அவர் தொடர்புள்ள இடம் ஒன்றில் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. அதை பார்க்க அடிக்கடி வருகிறார். கட்டடம் கட்டுவது பற்றி ஆலோசனை சொல்லிவிட்டுப் போகிறார். வேதா நிலையம் இல்லத்தின் பின்பக்கம் ஈஸ்வரன் கோவில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பிரதோஷ நேரத்தில் சசிகலா வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறாராம்.

சசிகலா
சசிகலா

இப்படி அடிக்கடி போயஸ்கார்டன் பக்கம் வந்துபோன சசிகலா இந்த முறை வருவதற்கு முன்பு, லதா ரஜினியிடம் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலா இருந்துவிட்டு ரிலீஸ் ஆகும்போது கொரோனா பாதிப்புக்கு ஆளானார். இதை கேள்விப்பட்ட ரஜினி, சசிகலாவின் உடல்நிலைப்பற்றி டி.டி.வி. தினகரனுக்கு போன் பண்ணி நலம் விசாரித்தார். இந்த சம்பவத்தை லதாவிடம் நினைவுப்படுத்திய சசிகலா, அண்மையில் ரஜினிக்கு உடல் நல பாதிப்பு, அவருக்கு மத்திய அரசு விருது கொடுத்தது என இந்த இரண்டு விஷயங்களுக்காக நேரில் வந்து பார்க்க விரும்புகிறேன் என்றாராம்.

இதை லதா, உடனே ரஜினியிடம் சொல்ல, அவர் யோசித்தாராம். 'நான் யாரையும் நேரில் சந்திப்பதில்லை. இவரை சந்தித்தால் அரசியல் விமர்சனங்கள் கிளம்பும். பா.ஜ.க-வுக்கு என்னிடம் சொல்லி சசிகலா தூதுவிட்டதாக சிலர் பேசுவார்கள். தேவையா? ' என்று தவிர்க்கப்பார்த்தாராம். அதற்கு விளக்கம் சொன்ன லதா, 'இது முழுக்க முழுக்க அரசியலுக்கு அப்பாற்பட்ட விசிட். அரசியலில் சசிகலா மேலும் தீவிரமாக இறங்கப்போகிறார். அப்படி அவர் இறங்கிவிட்ட பிறகு, சந்தித்தால்தான் வேறு மாதிரி சொல்லுவார்கள். இந்த கட்டத்தில் அவர் சந்திப்பு மரியாதையின் நிமித்தமாகதான் இருக்கும்’ என்று ரஜினியை சமாதானம் செய்தாராம்.

ரஜினி - சசிகலா சந்திப்பு
ரஜினி - சசிகலா சந்திப்பு

ரஜினி தரப்பில் அரைமனதுடன் ஒ.கே. சொன்னபிறகுதான், சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். மொத்தம் 17 நிமிடங்கள் ரஜினியை அவரின் வீட்டில் சசிகலா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது லதாவும் உடன் இருந்தாராம். பொதுவாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதிமுக-வில் தற்போது நடந்து வரும் மோதல் காட்சிகளை சொன்னாராம் சசிகலா. அதையெல்லாம் கவனமாக கேட்டுக்கொண்டாராம் ரஜினி. எதை எதிர்பார்த்து இப்போது வந்தார் சசிகலா? என்று புரியாமல் தவித்தாராம் ரஜினி.

தனக்கென ஒரு லாபி உருவாகவேண்டும் என்பதில் படு தீவிரமாக களம் இறங்கியிருக்கிறார் சசிகலா. ஆனால், இவர் வெளியே வந்ததும், பா.ஜ.க-வுக்கு ரஜினி மூலம் தூது சொல்ல சந்தித்தார் என்று சசிகலா கோஷ்டியினர் செய்திகளை பரப்பினர். ஆனால், ரஜினி தரப்பில் இந்த சந்திப்பு பற்றிய எந்த செய்தியையும் மீடியாக்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால், சந்திப்புக்கு மறுநாள் சசிகலா தரப்பினர் மூலம் சந்திப்பு பற்றிய செய்தி கசிந்ததது. ரஜினி - சசிகலா சந்திப்பை பாரதிய ஜனதா கட்சியினர்தான் உன்னிப்பகாக கவனித்து வருகிறார்களாம். ஆனால், லதா தரப்பில் சசிகலாவுடன் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கில் இருப்பதை கவலையோடு பார்கிறார்களாம் ரஜினி விசுவாசிகள்.