புதுச்சேரி: `மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு’ - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி
0Comments
Share

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் மத்திய அரசின் ஊரடங்கு தற்போதும் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 6 மணி வரை நீடிக்கிறது. பண்டிகைக் காலமாக இருப்பதால், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உலக மருத்துவக் கழகத்தின் கூற்றுப்படி, மீண்டும் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும். பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இரண்டாது கொரோனா அலை வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு மூட்டுவலி, இதயநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகள் பெரிய அளவில் ஏற்படுகின்றன. இதனால் குணமடைந்தவர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டிருக்கிறேன்.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு தருவதற்கு அமைச்சரவையில் முடிவு செய்திருக்கிறோம். புதுவையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 48,260 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 88,000 மாணவர்களும் படிக்கின்றனர். நீட் தேர்வில் 2018-19 கல்வியாண்டில் 94 அரசுப் பள்ளி மாணவர்களும், 346 தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அரசுப் பள்ளியில் படித்த 16 மாணவர்களுக்கு மட்டும்தான் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 243 மாணவர்கள் மருத்துவத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிலும் ஏனாம் பிராந்தியத்தில் ஒரு மாணவர்கூட மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பைப் பெறவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவக்கல்வி வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் உள் ஒதுக்கீடு கொண்டுவருகிறோம். அதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த உள் ஒதுக்கீட்டைச் சட்டமாக கொண்டு வராமல் ஆணையாக வெளியிட முடிவு செய்திருக்கிறோம். அதற்கு கவர்னர் அனுமதி தராவிட்டால், அதை எதிர்த்துப் போராடவும் தயாராக இருக்கிறோம்.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியாகிவிட்டது. புதுவையைப் பொறுத்தவரை மாநில அரசின் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கிறோம். மத்திய தொகுப்பிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துகிறோம்.

சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இந்தக் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதி. நீட் முடிவுகள் வெளியாகி தற்போதுதான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த அதிக வாய்ப்புகள் இருந்தும், பா.ஜனதா அரசும், இந்திய மருத்துவக் கழகமும் அதற்கு எதிராகச் செயல்படுகின்றன.

இதை ஏற்க முடியாது. பிரதமர் மோடி தலையிட்டு இட ஒதுக்கீடு கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இது தொடர்பாக நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். மத்திய அரசு ஜனநாயகப் படுகொலை செய்துவருகிறது. எதிர்க்கட்சிகள் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்வது, அமலாக்கத்துறையை ஏவுவது, போதைப்பொருள் வைத்திருப்பதாகப் பொய் வழக்கு போடுவது எல்லாம் நடக்கின்றன. இதன் மூலம் ஜனநாயகக் குரல்வளையை மத்திய அரசு நெரிக்கிறது. மாநில அரசின் விசாரணை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுகின்றனர்" என்றார்.