ஒகேனக்கல்: `கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் பருவமழை!’ - காவிரியில் வெள்ளப்பெருக்கு

குடகு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் ஹாரங்கி, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை 113 அடி உயரத்தைத் தாண்டியது. கபினி அணையின் முழு கொள்ளளவான 84 அடி நிரம்பிவிட்டது.

Published:Updated:
ஒகேனக்கல்
ஒகேனக்கல்
0Comments
Share

கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன. அதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி அணையிலிருந்து உபரி நீர் கூடுதலாகக் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. அதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதித்த நிலையில், தற்போது காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட கர்நாடகாவில் உள்ள பெல்காம், பீஜப்பூர், பாகல்கோட், தார்வாட், கதக் போன்ற மாவட்டங்களிலும், மங்களூர், உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா போன்ற கடலோர மாவட்டங்களிலும், ஹாசன், குடகு, சிக்மங்களூர், ஷிமோகா போன்ற மலைநாடு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கிறது.

இம்மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளக் காடுகளாகக் காட்சியளிப்பதோடு மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவாகி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஹாரங்கி, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

கிருஷ்ணராஜசாகர் அணை 113 அடி உயரத்தைத் தாண்டி வருகிறது. இதன் முழு கொள்ளளவான 124.8 அடியை ஒரு வாரத்துக்குள் நிரம்பிவிடும். கபினி அணையின் முழு கொள்ளளவான 84 அடி நிரம்பிவிட்டது. அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,000 கன அடி உபரி நீரும், கபினி அணையிலிருந்து 50,000 கன அடி உபரி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 30,000 கன அடி நீர் தமிழகத்துக்கு வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 40,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

இனி தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அதிகரிப்பதோடு மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடு கிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ``பருவத்தில் பயிர் செய் என்பதைப் போல தமிழகத்துக்கு வரும் தண்ணீரை பாதுகாத்திடவும் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்'' என்கிறார்கள் விவசாயிகள்.