`அவலாஞ்சியைப் பின்னுக்குத் தள்ளிய தேவாலா!' - பெருமழையில் தத்தளிக்கும் நீலகிரி

அவலாஞ்சியைவிட தேவாலா, கூடலூரில் அதிக மழை பெய்துள்ளது. மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் பாதிப்புகளும் பெருமளவுக்கு அதிகரித்துள்ளன.

Published:Updated:
நீலகிரி - மழையால் நிலச்சரிவு
நீலகிரி - மழையால் நிலச்சரிவு
0Comments
Share

நீலகிரியில் 6-வது நாளாக இன்றும் இடைவிடாது பெருமழை பெய்து வருகிறது. காற்றுடன் பெய்துவரும் ‌இந்த மழையில் மாவட்டம் முழுவதும் சுமார் 300-க்கும் அதிகமான மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்து அகற்றப்பட்டு வருகின்றன. மரம் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர் மேலும், மூன்று தோடர் வளர்ப்பு எருமைகளும் உடல் நசுங்கி உயிரிழந்தன. இடைவிடாது கொட்டிக் தீர்க்கும் இந்த மழையில் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புத்தூர் வயல், காலம்புழா, புறமனவயல், பாடந்துரை உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளையும் விளை நிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்தன.

நீலகிரி மழை
நீலகிரி மழை

ஊட்டி கூடலூர் சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் இந்தச் சாலையில் மூன்றாவது நாளாகப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஊட்டி தலைக்குந்தா பகுதியில் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை நடுவட்டம் அருகில் சாலையில் ஏற்பட்ட மண்சரிவால் ராட்சத பாறைகளும் மரங்களும் சாலையில் சரிந்து விழுந்துள்ளன. மீட்புக் குழுவினர்‌ சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாகத் தேவாலாவில் 360 மி.மீ, கூடலூரில் 349 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 346 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 3,820 மி‌.மீ மழை பதிவாகியுள்ளது. மழை அளவில் அவலாஞ்சியை பின்னுக்குத் தள்ளி தேவாலா, கூடலூரில் அதிக மழை பெய்துள்ளது. நான்காவது நாளாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.

நீலகிரி மழை
நீலகிரி மழை

பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதிலும், மண் சரிவு மற்றும் மரங்களை அகற்றுவதிலும் அரசுத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் மண் சரிவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

கூடலூர் மழை குறித்து மீட்புக் குழுவினர்,``அவலாஞ்சியைப் பொறுத்தவரை புல்வெளிகள் அதிகம் உள்ளன. அதே சமயம் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியாக உள்ளது. அதனால் எவ்வளவு மழை பெய்தாலும் பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. ஆனால், இன்றைக்கு அவலாஞ்சியைவிட தேவாலா, கூடலூரில் அதிக மழை பெய்துள்ளது. மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் பாதிப்புகளும் அதிகளவு ஏற்பட்டுள்ளன" என்றனர்.