குமரி: தி.மு.க நிர்வாகி தற்கொலைக்கு போலீஸ் டி.எஸ்.பி காரணமா?! - கடிதம் கொண்டு விசாரணை

`நீயெல்லாம் ஏன் உயிரோடு இருக்கிறாய்... என்று டி.எஸ்.பி பாஸ்கரும் அவரோடு வந்த ஒரு போலீஸ்காரரும் கூறினர். எனது மனைவி அரசு மருத்துவர் என்றும், கோவிட்-19 பணியில் இருப்பதாகச் சொல்லியும் சாவுடி எனத் திட்டினார்’ எனக் கடிதம் எழுதிவைத்திருக்கிறார் தி.மு.க நிர்வாகி சிவராம பெருமாள்.

Published:Updated:
தற்கொலை செய்துகொண்ட சிவராம பெருமாள்
தற்கொலை செய்துகொண்ட சிவராம பெருமாள்
0Comments
Share

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். தனியார் மருத்துவமனைவைத்து சிகிச்சையளித்துவந்தவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ பணியை விட்டுவிட்டு துணிக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்திருக்கிறார். அவர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்தார். இவரின் மனைவி சீதா அரசு மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். இந்தநிலையில் சிவராம பெருமாள் நேற்று திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் ஒருவரிடம் போனில் தொடர்புகொண்டு, `எனது மகளின் முன்பு வைத்துத்தான் விஷம் குடிக்கிறேன். மகளே... நீ ஐ.ஏ.எஸ் ஆகி, தப்பைத் தட்டிக்கேட்க வேண்டும்’ என்பதுபோலப் பேசிய ஆடியோ வெளியாகியிருக்கிறது. மேலும், `தற்கொலைக்கு கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி பாஸ்கரன்தான் காரணம்’ என அவர் கடிதம் எழுதி வைத்திருப்பதால் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

கடிதம்
கடிதம்

`துர்க்கா சாட்சி' என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், `நான் எனது சுயநினைவோடு எழுதும் கடிதம் இது. எனது மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியது கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கர் மற்றும் ஒரு வக்கீல். அவர்கள் என்னைச் சாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி, இரவு சுமார் 8:30 மணிக்கு மனைவி மக்களுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது என்னை வழிமறித்து, எனது மனைவி மக்களையும், அம்மா, அப்பாவையும் என்னையும் நடுரோட்டில் வைத்து `வாடா, போடா...’ எனத் தகாத வார்த்தையில் பேசி, எனது மனைவியையும் `வாடி, போடி...’ எனத் தகாத வார்த்தையில் அசிங்கமாகப் பேசினர்.

`நீயெல்லாம் ஏன் உயிரோடு இருக்கிறாய்?’ என்று டி.எஸ்.பி பாஸ்கரும்ம் அவரோடு வந்த ஒரு போலீஸ்காரரும் கூறினர். எனது மனைவி அரசு மருத்துவர் என்றும், கோவிட்-19 பணியில் இருப்பதாகச் சொல்லியும் `சாவுடி...’ எனத் தகாத வார்தையால் திட்டினார்" என அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை வைத்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சிவராம பெருமாள்
சிவராம பெருமாள்

இது குறித்து கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரனிடம் கேட்டதற்கு, ``நாலு மாசத்துக்கு முன்னாடி ஃபுல் லாக்டெளன் சமயத்துல நைட்டு வண்டியில அவரு மிஸ்ஸோட வந்தார். அவரு தண்ணியில இருந்தார். அப்போ கூப்பிட்டுக் கேட்டபோது அவருக்க வைஃப் தன்னை டாக்டருனு சொன்னதோட, கொரோனா டியூட்டி முடிச்சுட்டு வர்றதாகவும் சொன்னாங்க. நான் அவரை எச்சரித்து அனுப்பிட்டேன். இப்போ மருத்துவத்துறையில இருந்து ஆய்வு பண்ணி, அவரு டாக்டர் சரியா படிக்கலைனு ஏதோ பிரச்னை இருக்குபோல... அது வெளியே தெரியக் கூடாதுங்கிறதுனால பழைய இன்சிடென்டைவெச்சு லட்டர் எழுதி வச்சிட்டு இப்பிடி பண்ணியிருக்கார்னு நினைக்கிறேன்" என்றார்.