`ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்; இந்தியாவுக்கு ஆதரவு!’ - மைக் பாம்பியோ உறுதி

2 + 2 பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையே தபால் சேவை, ஆயுர்வேதம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிகளுக்கான ஒப்பந்தங்கள், அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், பி.இ.சி.ஏ ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

Published:Updated:
இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் சந்திப்பு
இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் சந்திப்பு
0Comments
Share

இந்திய - சீன எல்லைப் பிரச்னை, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் இந்திய, அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான 2 + 2 பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 2 + 2 பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜப்பானில் (Japan) தொடங்கப்பட்டு, உலக நாடுகள் அனைத்தும் தற்போது பின்பற்றிவரும் முறை டூ ப்ளஸ் டூ (2 + 2) பேச்சுவார்த்தை. இத்தகைய பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட அரசியல் விவாதங்கள், பிராந்தியத்திலுள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் சந்திப்பு
இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் சந்திப்பு

கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இருவரும் சந்தித்த முதல் சந்திப்பின்போது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தைகள் 2018-ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் முதல் சந்திப்பும், 2019 டிசம்பரில் இரண்டாவது சந்திப்பும் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான அமெரிக்க - இந்திய மூன்றாவது 2 + 2 பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ-வும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பரும் நேற்று மதியம் டெல்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு ராணுவ முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நேற்றும், இன்றும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

அமெரிக்க அமைச்சர்கள்
அமெரிக்க அமைச்சர்கள்

பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இரு கட்டங்களாக தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி முகுந்த் நராவனே, விமானப் படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அமெரிக்க அமைச்சர்களை வரவேற்று, அவர்களுக்கு விருந்தளிப்பதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாகக் பேசிய ராஜ்நாத் சிங், ``நமது பொருளாதாரங்கள் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன. தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளை புதுப்பிக்க முயல்கிறோம். நாங்கள் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களைக் மேற்கொள்ள இரு நாடுகளின் கூட்டு முயற்சி என்பது மிகவும் முக்கியமானது. இன்று இரு நாடுகளுக்கான பேச்சுவார்த்தை பலனளித்தன. இது, பரந்த அளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் நோக்கில் அமைந்தது. இன்றைய விவாதங்கள் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கு புதிய வீரியத்தைச் சேர்க்கும்" என்றார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் :

அதைத் தொடர்ந்து பேசிய, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ``இரு நாடுகளுக்கிடையேயான உறவு சீராக வளர்ந்துவருகிறது. பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களுக்கு வரும்போது நாம் இணைந்து ஒரு புதிய வித்தியாசத்தை உருவாக்க முடியும்’’ என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ :

இதையடுத்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ``இன்றைய தினம் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் நெருக்கமாக வளர மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தினம் விவாதிக்க, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை எதிர்க்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, நம் பகுதியில் அமைதி மற்றும் உறுதிப்பாட்டை ஊக்குவிக்க வேண்டியது பற்றி விவாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளன” என்றார். இறுதியாக, ``ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மைக் பாம்பியோ - ஜெய்சங்கர்
மைக் பாம்பியோ - ஜெய்சங்கர்

மார்க் எஸ்பர் :

``நாங்கள் கடந்த ஆண்டு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறோம். மேலும், பிராந்திய பாதுகாப்பையும், தகவல் பகிர்வையும் மேம்படுத்தியிருக்கிறோம். எங்கள் ஒத்துழைப்பு அன்றைய சவால்களையும், சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் கொள்கைகளையும் சந்திக்கிறது” என்றார் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர்.

இதையடுத்து, என்.எஸ்.ஏ (NSA) அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவையும், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பரையும் சந்தித்து பேசினார். அவர்கள் ஓர் ஆக்கபூர்வமான சந்திப்பைக் கொண்டிருந்ததாகவும், முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சந்திப்பின்போது
சந்திப்பின்போது

2 + 2 பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையே தபால் சேவை, ஆயுர்வேதம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிகளுக்கான ஒப்பந்தங்கள், அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், பி.இ.சி.ஏ ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இறுதியாக, இந்திய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அமெரிக்க அமைச்சர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்தனர். இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் இரண்டையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்திய - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஜெய்சங்கர், மைக் பாம்பியோ இருவரும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட எல்லை மோதல்கள் குறித்தும் பேசியது குறிப்பிடத்தக்கது.