ஜம்மு-காஷ்மீர் பற்றி அப்படி என்னதான் சொன்னார் ப.சிதம்பரம்?

ஜம்மு-காஷ்மீர் பற்றி அப்படி என்னதான் சொன்னார் ப.சிதம்பரம்?

Published:Updated:
ஜம்மு-காஷ்மீர் பற்றி அப்படி என்னதான் சொன்னார் ப.சிதம்பரம்?
ஜம்மு-காஷ்மீர் பற்றி அப்படி என்னதான் சொன்னார் ப.சிதம்பரம்?
0Comments
Share

ம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்குக் கூடுதல் தன்னாட்சி வழங்கலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அண்மையில் தெரிவித்த கருத்தால், இந்தப் பிரச்னை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பி.ஜே.பி. தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி போன்றோர் கடுமையான கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதனை சிதம்பரம் மறுத்துள்ளார். மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கும், காங்கிரசுக்கும் இடையே இப்பிரச்னையால் கருத்துமோதல் உருவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதி குறித்த பிரச்னை இந்திராகாந்தி காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அதன் பின்னர் வந்த எந்த அரசானாலும், ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணவில்லை. இதனிடையே அம்மாநில மக்களில் ஒருசாரார், தங்களுக்கு தன்னாட்சி அல்லது சுதந்திரம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பிரிவினைவாத அமைப்புகளும், அவற்றின் தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். இருந்தாலும், காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே நீடிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தின்கீழ், மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் அந்த மாநிலத்திற்கும் வழங்கப்படுவதுடன், அரசியல்சாசனச் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் அம்மாநிலத்திற்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதுடன், விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. காஷ்மீரில் தன்னாட்சி கோரும் பெரும்பான்மையானவர்கள், இந்திய அரசியல் சட்டத்திற்கு உள்பட்டே சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிப்பதால், தன்னுடைய கருத்தும் அதுதான் என சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.

"அரசியல்சாசனச் சட்டத்தின் 370-வது பிரிவை அப்படியே அமல்படுத்த வேண்டும் என காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர். தங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து, எந்தெந்தப் பகுதிகளில் சுயாட்சி வழங்குவது எனத் தீவிரமாகப் பரிசீலிக்கலாம் என்பது என் விருப்பம். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் தொடர்ந்து இருக்க வேண்டும். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டே காஷ்மீரின் சுயாட்சி இருக்க வேண்டும்" என்று சிதம்பரம் தெரிவித்தார்.

அவரின் இந்தக் கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ஸ்மிருதி இரானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜம்மு-காஷ்மீர் சுயாட்சி பற்றி தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த ஸ்மிருதி இரானி, சிதம்பரம் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கன்னையா குமாருக்கு ஆதரவு தெரிவித்தவர் என்பதால் அவர் இவ்வாறு கூறுவதில் ஆச்சர்யம் இல்லை என்றார்.

ப.சிதம்பரம் அங்கம்வகித்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, பத்தாண்டுகள் காஷ்மீர் பிரச்னையில் என்ன செய்தது? என்று அருண் ஜேட்லி கேள்வி எழுப்பினார். ஜம்மு-காஷ்மீருக்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி என்று கூறுவது தேச நலனுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். 

 ப.சிதம்பரம் ஒரு தேசவிரோதி என்றும், அவர் விரைவில் சிறை செல்வார் என்றும் பி.ஜே.பி. மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும், ப.சிதம்பரத்தின் கருத்துக்குக் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற பி.ஜே.பி. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "காஷ்மீர் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசிவரும் கருத்துக்கு அக்கட்சி பதிலளிக்க வேண்டும். காஷ்மீருக்குக் கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்ற கருத்தை ஏற்கமுடியாது. நாட்டின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியிடமிருந்து இப்படியொரு கருத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. காஷ்மீருக்கு தன்னாட்சி தேவை என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது, நமது துணிச்சலான ராணுவ வீரர்களை அவமதிப்பதாகும். மக்களுக்கு எதிரானது. ராணுவத்தினரின் தியாகத்தின் மீது அரசியல் செய்யும் மக்கள், நாட்டின் நலனுக்குப் பங்களிக்க முடியாது. ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், இப்போது இதுபோன்ற திடீர் திருப்பத்திற்கான அறிக்கைகளை கையில் எடுத்துக் கொண்டிருப்பது வேடிக்கையானது" என்றார்.

இதனிடையே ஜம்மு-காஷ்மீர் குறித்த ப.சிதம்பரத்தின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. தனிநபர் ஒருவரின் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்தாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஜனநாயக நாட்டில் எந்தவொரு தனிநபரும் தன் கருத்துகளைத் தெரிவிக்க உரிமையுண்டு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்து ப.சிதம்பரம் கூறுகையில், "காஷ்மீர் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலை பிரதமர் முழுமையாகப் படிக்கவில்லை என்று வெளிப்படையாகத் தெரிகிறது. நான் அளித்த பதில் முழுவதும் ஒருவார்த்தைகூட மாறாமல் முன்னணி நாளிதழில் வெளியாகியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் என்னை விமர்சிப்பவர்கள், என்னுடைய முழுமையான பதிலை நிச்சயம் படிக்க வேண்டும். பின்னர் அதில் எந்தவார்த்தை தவறு என்று என்னிடம் கூற வேண்டும். பிரதமர் மோடி கற்பனையான ஒன்றை மனதில் வைத்து, பேசிவருகிறார்" என்றார்.

இப்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை முன்வைத்து பி.ஜே.பி-யும், காங்கிரஸும் பரஸ்பரம் தங்களுக்குள் விமர்சனம் செய்து வருகின்றன. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுடன் பேச்சுநடத்த மத்திய பி.ஜே.பி. அரசு முடிவுசெய்து, அதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கும் நிலையில், கூடுதல் தன்னாட்சி என்று சர்ச்சை எழுப்பப்பட்டிருப்பது, அம்மாநில மக்களின் நலன்களுக்கு உகந்ததா, இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.