சிபிசிஐடி-க்கு வழக்குகளை அதிக அளவில் மாற்றுவது போலீஸ் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்காதா?!

“ஒரு சில வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் வழக்குகளை சிபிசிஐடி-க்கு மாற்றுவதே ஒரு கண் துடைப்புதான்.”

Published:Updated:
சி.பி.சி.ஐ.டி
சி.பி.சி.ஐ.டி
0Comments
Share

குற்றச்செயல்கள், சந்தேகங்கள் எழுப்பும் மர்ம மரணங்கள், கொலை-கொள்ளைகள்... என நிகழ்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், சமீபகாலங்களில் இது போன்ற விவகாரங்களைக் கையாள்வதில் காவல்துறையின் செயல்பாடுகளைத் தாண்டி சிபிசிஐடி-க்கு வழக்குகளை மாற்றும் போக்கு அதிகரித்துவருகிறது. பொதுவாக, உள்ளூர் காவல்துறையால் விசாரணை செய்வது இயலாமல் போகும் சூழலில் அல்லது உள்ளூர் மற்றும் அரசியல் குறுக்கீடுகள் வரலாம் என்கிற சூழலில் மாநில அரசின் சிறப்பு விசாரணைப் பிரிவான சிபிசிஐடி-க்கு சில வழக்குகளை மாற்றுவது வழக்கம்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம், திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளன. அப்படி சிபிசிஐடி செயல்பாடுகள், விசாரணை நடைமுறை என்னவாக இருக்கும் என்பது குறித்து பலரும் தேடத் தொடங்கியுள்ளனர். இது குறித்து நாமும் காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். “காவல்துறை, சிபிசிஐடி இரண்டுமே தமிழக டிஜிபி தலைமையின் கீழ்தான் செயல்படும். வழக்கின் தன்மையைப் பொறுத்து விசாரணைக்கு வசதியாக சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது” என்கிறவர்கள், “சிபிசிஐடி எஸ்.பி-யின் மேற்பார்வையின் கீழ் வழக்குகள் இரண்டு பிரிவுகளாகக் கையாளப்பட்டுவருகின்றன” என்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி கலவரம் - டி.ஜி.பி உத்தரவு!
கள்ளக்குறிச்சி கலவரம் - டி.ஜி.பி உத்தரவு!

அது குறித்து விரிவாக விளக்கும்போது, “முதல் பிரிவில், ஏமாற்றுதல், மோசடி, அரசு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைத் திருடுதல், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை முறைகேடான வகையில் விற்பனை செய்தல், சர்வதேசக் குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகள், போதைப்பொருள்கள் தொடர்பான குற்றங்கள், கூட்டாகச் செய்யும் குற்றங்கள், வங்கிக் குற்றங்கள், நிதி நிறுவன மோசடிகள் உள்ளிட்டவை விசாரிக்கப்படும்.

இரண்டாவது பிரிவில் ஆதாயத்துக்காகக் கொலை செய்தல், கொள்ளை, எலெக்ட்ரிகல் ஒயர்கள் திருட்டு, கடத்தல், சிலைத் திருட்டு, ஆபாசப் படங்கள், விஷம் கொடுத்தது தொடர்பான வழக்குகள், சைபர் க்ரைம், பொருளாதாரக் குற்றங்கள், அரசியல் ஆதாயத்துடன் செய்யும் மோசமான குற்றங்கள் ஆகியவை விசாரிக்கப்படும்.

முதலில் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுசெய்யப்படும். அதன் பிறகு விசாரணை நடைபெற்றுவரும் காவல் நிலையத்திலிருந்து அனைத்துத் தகவல்களும் இ-மெயில், ஒயர்லெஸ், தொலைபேசி வாயிலாக சிபிசிஐடி-க்கு பரிமாற்றம் செய்யப்படும். மீண்டும் ஆய்வு செய்யவும் மற்றும் ஆதாரங்களைக் கண்டறியும் வகையிலும் சம்பவம் நடந்த இடம் பாதுகாக்கப்படும். ஐஜிபி/ டிஐஜிபி உத்தரவின் பேரில் முறையான வழிமுறைகளின்படி சிபிசிஐடி-க்கு மொத்த வழக்கும் படிப்படியாக மாற்றம் செய்யப்படும்.

சிபிசிஐடி-க்கு சிஐடி காவல் நிலையம், குற்ற ஆவணக் காப்பகம், கைரேகை பதிவுத்துறை, மோப்ப நாய் பிரிவு, புகைப்படப் பிரிவு, கணினி பிரிவு, பொதுமக்கள் குறை கேட்கும் பிரிவு, தடய அறிவியல் ஆகிய துறைகள் முழு ஒத்துழைப்பு வழங்கும். ஒவ்வொரு சிபிசிஐடி யூனிட்டிலும்

சிஐடி பிரிவில்: ஆய்வாளர் 1, துணை ஆய்வாளர் 1, ஹெட் கான்ஸ்டபிள் 3, கான்ஸ்டபிள் 2 பேர்.

குற்ற ஆவணக் காப்பக பிரிவில்: ஆய்வாளர் 1, துணை ஆய்வாளர் 2, ஹெட் கான்ஸ்டபிள் 3, கான்ஸ்டபிள் 2 பேர்.

கைரேகைப் பிரிவில்: ஆய்வாளர் 1, துணை ஆய்வாளர் 1, வல்லுநர்கள் 2 பேர்.

மோப்ப நாய் பிரிவில்: துணை ஆய்வாளர் 1, ஹெட் கான்ஸ்டபிள் 1, கான்ஸ்டபிள் 6 பேர்.

புகைப்படப் பிரிவில்: கூடுதல் உதவி ஆய்வாளர் 1, ஹெட் கான்ஸ்டபிள் 1, கான்ஸ்டபிள் 4 பேர்.

கணினி பிரிவில்: ஆய்வாளர் 1, துணை ஆய்வாளர் 2, ஹெட் கான்ஸ்டபிள் 4 பேர்.

சிபிசிஐடி குற்றப்பத்திரிகை
சிபிசிஐடி குற்றப்பத்திரிகை

இப்போது வரை சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தோராயமாக 50 சதவிகித வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. எஞ்சிய வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவருகின்றன” என்றவர்களிடம், “சிபிசிஐடி-க்கு வழக்குகளை அதிக அளவில் மாற்றுவது போலீஸ் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்காதா?” என்ற கேள்வியை முன்வைத்தோம். “இல்லை... எல்லா வழக்குகளுமே சிபிசிஐடி-க்கு மாற்றப்படுவதில்லையே... குறிப்பிட்ட சில சிறப்பு வழக்குகள் மட்டும்தானே சிபிசிஐடி-விசாரணைக்கு வருகின்றன. இதுவும் காவல்துறையின் ஒரு பிரிவுதானே” என்கிறார்கள்.

“ஒருசில வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் வழக்குகளை சிபிசிஐடி-க்கு மாற்றுவதே ஒரு கண்துடைப்புதான். அப்படி மாற்றப்பட்ட வழக்குகளில் இதுவரை எத்தனை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது... அந்த நேரத்தில் அரசியல் நெருக்கடி, மக்களிடமிருந்து வரும் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு அரசு மேற்கொள்ளும் உத்திதான் இந்த சிபிசிஐடி” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.