அக்னிபத்: ``போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மோசமான விலை கொடுக்கவேண்டியிருக்கும்!’’ விமானப்படைத் தளபதி

அக்னிபத்: ``போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடுமையான விலை கொடுக்கவேண்டியிருக்கும்’’ என்று விமானப்படை தளபதி எச்சரித்திருக்கிறார்.

Published:Updated:
பீகாரில் பஸ் எரிப்பு
பீகாரில் பஸ் எரிப்பு
0Comments
Share

பாதுகாப்புப் படைக்குப் புதிதாக `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆரம்பத்தில் பீகாரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. ஏராளமான ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கானாவிலுள்ள செகந்தராபாத் ரயில் நிலையத்தில் 2,000 பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் ரயிலுக்குத் தீவைத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர். போராட்டம் நான்கு நாள்களாக நடந்துவருகிறது. பீகாரில் துணை முதல்வர் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் நேற்று பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கயா உட்பட சில மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ரயில் போக்குவரத்து பீகாரில் அடியோடு நிறுத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்திலும் வாரணாசி, அமேதி போன்ற இடங்களிலும் போராட்டக்காரர்கள் ரயிலுக்குத் தீவைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நான்கு நாள் போராட்டத்தில் 50 ரயில் பெட்டிகள் தீவைக்கப்பட்டுள்ளன. 200 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளன.

செளதரி
செளதரி

நாடு முழுவதும் திடீரென போராட்டம் விரிவடைந்ததால் மத்திய அரசு அதிர்ச்சியடைந்திருக்கிறது. இதையடுத்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைத் தளபதிகளுடன் இந்தப் பிரச்னை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்திருக்கிறது. வயது உச்ச வரம்பிலும் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விமானப்படை தளபதி வி.ஆர்.செளதரி இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது, ``அக்னிபத் திட்டத்துக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்புத்துறையில் வேலைக்குச் சேர வேண்டும் என்று தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருப்பவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றால் கடுமையான விலை கொடுக்கவேண்டி வரும். இந்த வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. இது பிரச்னைக்குத் தீர்வாகாது. பாதுகாப்புப்படையில் வேலைக்குச் சேர நினைப்பவர்கள் இறுதியில் போலீஸில் சரிபார்ப்பு சான்றிதழ் வாங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டால் அந்தச் சான்றிதழ் கிடைக்காது. அக்னிபத் திட்டம் மிகவும் சிறப்பான ஒன்று. இதில் சந்தேகம் இருப்பவர்கள் அருகில் உள்ள ராணுவம், கடற்படை, விமானப்படை முகாம்களுக்குச் சென்றால் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பார்கள். இந்தத் திட்டம் குறித்து சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அதோடு முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் திட்டத்தில் உள்ள நன்மைகள், பலன்களையும் பார்க்க வேண்டும். இந்தத் திட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. திட்டத்தை முழுமையாக அமல்படுத்திய பிறகு, அதில் தேவைப்பட்டால் திருத்தம் கொண்டு வரப்படும். வரும் 24-ம் தேதி விமானப்படைக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கும்’’ என்று தெரிவித்தார்.

பீகாரில் ரயில் மறியல்
பீகாரில் ரயில் மறியல்

இந்தத் திட்டத்தின் கீழ் 17.5 வயதிலிருந்து 21 வயது வரை இருப்பவர்கள் பாதுகாப்புப் படைக்கு நாண்கு ஆண்டுகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு அவர்களில் 25 சதவிகிதம் பேர் மட்டும் மேலும் 15 ஆண்டுகள் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 21 வயது என்பதை 23-ஆக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. 17.5 வயதிலிருந்து 25 வயதுக்குள்தான் அனைவரும் கல்லூரிப் படிப்பைப் படிப்பார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றும் பட்சத்தில் கல்லூரிப் படிப்பையும் படிக்க முடியாமல் போய்விடும். நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு எந்த வேலைக்கும் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். விவசாய மசோதாவைத் திரும்பப் பெற்றதுபோல் இந்தத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.