தலைவர் பதவிக்கு ஒருவர்... பிரதமர் வேட்பாளராக வேறு ஒருவர் - பாஜக பாணியைப் பின்பற்ற காங். திட்டமா?

கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர், பிரதமர் பதவிக்கு வேறு ஒருவர் என்கிற பாணியை பா.ஜ.க ஏற்படுத்திவைத்திருக்கிறது. அதே பாணியை காங்கிரஸ் கட்சியும் பின்பற்றப்போகிறதா?

Published:Updated:
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
0Comments
Share

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பும், அது பற்றிய விவாதங்களும் இப்போதே தொடங்கிவிட்டன. 2024-லிலும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் புதிய வியூகங்களை வகுத்து பா.ஜ.க பணியாற்றிவருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரையிலான நடைப்பயணத்தை ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உற்சாகமாக மேற்கொண்டுவருகிறது.

மோடி
மோடி

சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை காங்கிரஸ் கட்சி சந்தித்துவரும் நிலையில், முக்கியத் தலைவர்கள் சிலர் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். அப்படி வெளியேறிய தலைவர்கள், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இத்தகைய சூழலில், பா.ஜ.க-வுடன் ஒப்பிடும்போது பலவீனமான நிலையில் காங்கிரஸ் இருக்கிறது.

சவால்கள் மிகுந்த இந்தச் சூழலிலிருந்து மீண்டு, உற்சாகத்துடன் நடைபோட திட்டமிட்ட காங்கிரஸ் கட்சி, புதிய தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்த கையோடு, நடைபயணத்தையும் தொடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தலைமையில் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய நடைபயணம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ஜம்மு காஷ்மீர் வரை நடைபெறவிருக்கிறது. பா.ஜ.க ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாகவும், விலைவாசி உயர்வு விண்ணை முட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்துவருகிறார்கள்.

ராகுல் காந்தி நடைபயணம்
ராகுல் காந்தி நடைபயணம்

அக்டோபர் 17-ம் தேதி தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், ராகுல் காந்தி தலைவராகத் தேர்வுசெய்யப்படுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஏற்கெனவே அவர் தலைவராக இருந்தவர்தான். 2019, நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார். தோல்வி மட்டுமே அவரது ராஜினாமாவுக்கு காரணம் அல்ல. தேர்தல்களில் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு கட்சித் தலைமைக்கு சீனியர்கள் கொடுக்கும் நெருக்கடியை ராகுல் காந்தியால் சமாளிக்க முடியவில்லை. தலைவர் பதவி வேண்டாம் என்று ராகுல் ஓடியதற்கு இதுதான் முக்கியக் காரணம் என்ற தகவல்களும் சொல்லப்பட்டது.

காங்கிரஸின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். வயோதிகம் காரணமாக, தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து செயல்பட இயலாத நிலையில் அவர் இருக்கிறார். ராகுல் காந்தியும் தலைவராகும் விருப்பம் இல்லை. இந்த நிலையில், நேரு குடும்பத்தின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினரான சசிதரூருர், தலைவர் பதவி மீது ஆர்வம் காட்டுகிறார்.

சோனியா காந்தி - ராகுல் காந்தி - ப.சிதம்பரம்
சோனியா காந்தி - ராகுல் காந்தி - ப.சிதம்பரம்

இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, இதேபோன்ற ஒரு பலவீனமான நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி, பல சோதனைகளை எதிர்கொண்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீதாராம் கேசரி இருந்தார். நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவர் பதவியை ஏற்றால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று உணர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், சோனியா காந்தியைத் தலைவராக்கினர். அதன் பிறகு, 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்தார்.

1991-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் பி.வி.நரசிம்ம ராவ். அவரே பிரதமராகவும் ஆனார். இரண்டு பதவிகளையும் அவர் வகித்தார். அதற்கு முன்பாக, காங்கிரஸ் தலைவர், பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளையும் ராஜீவ் காந்தி வகித்தார். இந்திரா காந்தியும்கூட பிரதமராகவும் கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஆனால், மன்மோகன் சிங் பிரதமரானபோது, அந்த நிலை மாறியது.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. அப்போது, பா.ஜ.க தலைவராக இருந்தவர் ராஜ்நாத் சிங். பின்னர், அமித் ஷா தலைவராக இருந்தார். தற்போது, ஜே.பி.நட்டா தலைவராக இருக்கிறார். கட்சித் தலைமையில் ஒருவர், ஆட்சித் தலைமையில் வேறு ஒருவர் என்கிற நடைமுறையில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. கட்சித் தலைவர் பதவியில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி.நட்டா என யார் இருந்தாலும், அந்தக் கட்சியின் செல்வாக்குமிக்க ’லீடர்’ ஆக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.

சோனியா, மன்மோகன் சிங்,
சோனியா, மன்மோகன் சிங்,

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குமிக்க ‘லீடர்’ ஆக ராகுல் காந்தியே இருப்பார் என்று காங்கிரஸார் கூறுகிறார்கள். அதாவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் அசோக் கெலாட்டோ, சசிதரூரோ, அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆனால், காங்கிரஸின் ’லீடர்’ ஆக, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் இருக்கப்போகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடித்துச்சொல்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.