`ரஜினி பாஜக டீல்?’... ஏன் நடந்தது ராஜ்பவன் சந்திப்பு?!

அரசியல்ரீதியாக தன் வாய்ஸ் சுருங்குவது புரிந்தவுடன்தான் ஆளுநரைச் சந்திக்க ஓடுகிறார் ரஜினி என்கிறார்கள்.

Published:Updated:
ஆளுநர் ரவி - ரஜினி
ஆளுநர் ரவி - ரஜினி
0Comments
Share

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய சந்திப்பு, அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. "எங்கள் சந்திப்பில் அரசியலும் பேசினோம்" என எண்ணெயை ஊற்றிப் பரபரப்பை மேலும் எகிறவைத்திருக்கிறார் ரஜினி. `இருவருக்கும் இடையில் ஏன் சந்திப்பு நிகழ்ந்தது... அப்படி என்ன கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்?’, விவரமறிய பா.ஜ.க வட்டாரங்களில் பேசினோம். சுவாரஸ்யத் தகவல்களைக் கொட்டினார்கள்.

சுதந்திர அமிர்த பெருவிழா கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு - ரஜினி
சுதந்திர அமிர்த பெருவிழா கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு - ரஜினி

நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர்கள், "75-வது சுதந்திர தின விழாவை விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு, 'சுதந்திர அமிர்த பெருவிழா' கொண்டாட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கான கமிட்டியில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், நடிகர்கள், பத்திரிகைப் பிரபலங்கள் எனப் பலரும் இடம்பெற்றுள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், அனுபம்கெர் ஆகியோரும் கமிட்டியின் முக்கிய உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம், ஆகஸ்ட் 6-ம் தேதி ஜனாதிபதி மாளிகையிலுள்ள கலாசார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், பிரதமருடன் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். அப்போது, ரஜினியின் உடல்நலத்தை வாஞ்சையுடன் விசாரித்த பிரதமர், 'உங்கள் ஆன்மிக பலம்தான் உங்கள் உடல்நலத்துக்குச் சக்தியைக் கொடுக்கிறது' என்று பாராட்டியிருக்கிறார். இந்தச் சந்திப்பு முடிந்து பிரதமர் கிளம்பியதும், ரஜினியைத் தனியே சந்தித்த பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர், 'தமிழ்நாடு ஆளுநர் ரவியைச் சந்திக்குமாறு உங்களிடம் பிரதமர் சொல்லச் சொன்னார்' என்றவுடன்தான், ரஜினியைவைத்து கேம் ஆடுவதற்கு டெல்லி முடிவெடுத்திருப்பது பலருக்கும் புரிந்தது.

பிரதமரின் அறிவுறுத்தலின்படி, ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 11:40 மணிக்கு ஆளுநர் ரவியைச் சந்தித்தார் ரஜினி. போட்டோ வைபவங்கள் முடிந்த பிறகு, இருவரும் தனியே 20 நிமிடங்கள் பேசினார்கள். இந்தச் சந்திப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய ரஜினி, காத்திருந்த செய்தியாளர்களிடம், 'ஆளுநருடன் அரசியல் நிலவரம் குறித்துப் பேசினேன். என்ன பேசினோம் என்பதைச் சொல்ல முடியாது. அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை' என்றிருக்கிறார். அதாவது, 'அரசியலுக்கு நான் வரவில்லை, ஆனால் அரசியல் பேசுவேன். யாருக்கு வேண்டுமானாலும் வாய்ஸ் கொடுப்பேன்' என்று மறைமுகமாகக் கூறியிருக்கிறார் ரஜினி.

ரஜினி, கமல்
ரஜினி, கமல்

ரஜினியைப் பிரசார ஆயுதமாகத் தங்கள் மேடைகளில் பயன்படுத்திக்கொள்ள டெல்லி பா.ஜ.க மேலிடம் திட்டமிடுகிறது. 'நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, மோடி ஆட்சியின் சிறப்புகள் குறித்தும், தேச ஒற்றுமை, தெய்விகம் குறித்தும் தென் இந்தியா முழுவதும் பேசுங்கள்' என்று ரஜினியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது டெல்லி. ரஜினிக்கும் இப்போது வெளிச்சம் தேவை. சமீபத்திய அவரின் படங்களைவிட, கமல்ஹாசன் நடித்த `விக்ரம்-2’ படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. தனக்கென ஒரு பரபரப்பை ரஜினி ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால், அவருக்கான சினிமா மார்க்கெட் அடிவாங்கும். அதனால்தான், அரசியலுக்கு முழுக்குப்போட்டவர், மீண்டும் அரசியல் அரிதாரம் பூசுகிறார். ஆளுநர் - ரஜினி சந்திப்பில், சமீபத்தில் திரைத்துறைத் தயாரிப்பாளர்கள்மீது நடந்த வருமான வரித்துறை ரெய்டு குறித்தும் பேசியிருக்கிறார்கள்" என்றனர் விரிவாக.

'பா.ஜ.க-வின் டீலுக்கு ஏற்ப ரஜினி செயல்படுகிறார்' என்று கூறப்பட்டாலும், ஆளுநர் ரவியைப் புகழ்ந்து ரஜினி உதிர்த்த வார்த்தைகளில் பல அர்த்தங்கள் ஒளிந்திருக்கின்றன. 'இந்தச் சந்திப்பே முதல்வர் ஸ்டாலினை உரசிப் பார்ப்பதற்காக நடந்ததுதான்' என்கிறது தி.மு.க வட்டாரம்.

நம்மிடம் பேசிய தி.மு.க இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், "ஆளுநர் ரவியுடன் மோதல் போக்கை தி.மு.க அரசு நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்தினார் ஆளுநர் ரவி. இதற்குப் போட்டியாக, வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி சென்னையில் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின்தான் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார். அதேசமயம், தி.மு.க-வுக்குக் குடைச்சல் கொடுக்கும்விதமாக, தமிழ்நாடு அரசு அனுப்பியிருக்கும் பல மசோதாக்களைக் கிடப்பில் போட்டிருக்கிறார் ஆளுநர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்திருக்கும் நிலையில், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம், புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் குறித்துப் பேசுகிறார் ஆளுநர். இதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் அதிகரித்திருக்கிறது. ஆனால், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த ரஜினி, 'தமிழ்நாட்டின் ஆன்மிக உணர்வு ஆளுநரை ஈர்த்திருக்கிறது. 'தமிழ்நாட்டின் நலனுக்காக என்ன செய்யவும் ரெடியாக இருக்கேன், எதை இழக்கவும் ரெடியாக இருக்கேன்' என்று என்னிடம் கூறினார் ஆளுநர்' என்றிருக்கிறார். ஆளுருக்கு ரஜினி பாராட்டுப் பத்திரம் வாசிக்கவேண்டிய அவசியம் என்ன?

ஆளுநர் ரவி - ரஜினி
ஆளுநர் ரவி - ரஜினி

நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதில் காலம் தாழ்த்தினார் ஆளுநர் ரவி. நீட் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது என்பது ரவிக்குத் தெரியாதா அல்லது ரஜினிக்குத் தெரியாதா... இதுவரை 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், பல்வேறு குழப்பங்கள் நீண்டிருக்கின்றன. இதையெல்லாம் ரஜினி உணர்ந்திருந்தும், 'ஆளுநர் சூப்பர்' என்பதுபோலப் பேசியிருப்பது, முதல்வர் ஸ்டாலினை சீண்டுவதற்குத்தான். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீஸர் வீடியோவை ரஜினிதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலில் வெளியிட்டார். ஒலிம்பியாட் தொடக்கவிழாவிலும் கலந்துகொண்டார். அவர் வருவதற்காக சிறப்பு போலீஸ் கான்வாயும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தது. அப்போதெல்லாம், ஆளுநரின் செயல்பாடுகள் பற்றி ரஜினி வாய் திறக்கவில்லை. ரவி ஆளுநராகப் பொறுப்பேற்று ஒரு வருடமாகப்போகிறது. இடைப்பட்ட காலத்தில் அவரைச் சந்திக்க வேண்டுமென ரஜினிக்குத் தோன்றவில்லை.

ஆனால், கமல்ஹாசனுடன் முதல்வர் குடும்பம் நெருங்கி உறவாடுவதும், அரசியல்ரீதியாக தன் வாய்ஸ் சுருங்குவதும் புரிந்தவுடன்தான் ஆளுநரைச் சந்திக்க ஓடுகிறார் ரஜினி. தன்னைச் சுற்றியெரியும் அரசியல் பரபரப்பை அணையாமல் பார்த்துக்கொள்ளப் பார்க்கிறார். அது, ஸ்டாலினை எதிர்த்தால் மட்டுமே அணையாமல் இருக்குமென்பதால், ஆளுநரை வாழ்த்துவதன் மூலமாக ஸ்டாலினைச் சீண்டிப் பார்க்கிறார். இதெல்லாம் புரியாமல் தி.மு.க-வினர் இல்லை. எந்தக் கட்சிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தாலும், அதைக் காது கொடுத்துக் கேட்கும் கூட்டம் இப்போதில்லை. 90-களின் இறுதியோடு அந்தக் கூட்டம் ஓய்ந்துவிட்டது.

ரஜினி
ரஜினி

2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியுடன் பா.ஜ.க களமிறங்கியது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த ரஜினி, 'பா.ஜ.க-வுக்குத்தான் என் ஆதரவு. அந்தக் கட்சியுடன் கூட்டணியிலிருக்கும் அ.தி.மு.க வேட்பாளருக்கு வாக்களித்தேன்' என்றார். ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள 39 இடங்களிலும் வெற்றிபெற்றது. ரஜினி ஆதரவு பெற்ற எவரும் ஜெயிக்கவில்லை. அப்போதே ரஜினியின் பேச்சை யாரும் கேட்கவில்லை. ஆளுநரின் அரசியலே தமிழ்நாட்டில் எடுபடாதபோது, ரஜினியைவைத்து பா.ஜ.க என்ன திட்டம் தீட்டினாலும், அதுவும் எடுபட போவதில்லை" என்றனர் தெளிவாக.

ஆளுநர் சந்திப்பின் மூலம், புதிய அரசியல் கணக்கை ஆரம்பிக்கப் பார்க்கிறார் ரஜினி. அவரை முன்னிறுத்தி, சில வியூகங்களையும் டெல்லி பா.ஜ.க வகுத்திருக்கிறது. ஆனால், இன்றைய அரசியல் சூழலில், ரஜினியின் வாய்ஸ் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறிதான்.