கர்நாடகாவில் அதிகம் கவனிக்கப்படும் ராகுல் யாத்திரை... ஏன்?! | ஒரு அரசியல் அப்டேட்

தமிழ்நாடு, கேரளாவில் தனது யாத்திரையை முடித்துக்கொண்ட ராகுல் காந்தி, தற்போது கர்நாடகாவில் யாத்திரையைத் தொடர்ந்து வருகிறார்.

Published:Updated:
ராகுல் யாத்திரை
ராகுல் யாத்திரை
0Comments
Share

ராகுலின் யாத்திரை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கினர். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, 150 நாள் 3,570 கிலோ மீட்டர் பயணம் செய்து ஸ்ரீநகரில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. யாத்திரை தொடங்கிய மூன்று நாள்களில் ராகுல் கேரளாவுக்கு வந்தடைந்தார். கேரளாவில் கடந்த 18 தினங்களாக பல்வேறு இடங்களில் யாத்திரை மேற்கொண்டார் ராகுல்.

ராகுல் யாத்திரை - கேரளா
ராகுல் யாத்திரை - கேரளா

பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி, கேரளாவில் இந்த யாத்திரைக்குப் பொதுமக்களிடையே வரவேற்பு இருந்ததைப் பார்க்க முடிந்தது என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். பின் கேரளாவிலிருந்து கூடலூர் வழியாக, கர்நாடக சென்றிருக்கிறார் ராகுல். கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், ராகுல் கர்நாடகாவில் மேற்கொள்ளும் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் ராகுல்:

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வருகை புரிந்த ராகுலுக்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அழைத்தனர். தொடர்ந்து கர்நாடகாவில் 21 நாள்கள், மைசூரு, மாண்டியா, பெல்லாரி, ரெய்ச்சூர் போன்ற 17 மாவட்டங்கள் வழியாகத் தெலங்கானாவுக்குச் செல்வதாகப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல் கர்நாடகாவில் கிட்டத் தட்ட 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவு யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்.

ராகுல் யாத்திரை
ராகுல் யாத்திரை

கர்நாடகாவில் தசரா விழா கொண்டாடும் சமயத்தில் இரண்டு தினம் யாத்திரைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெல்லாரியில் 19-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுலின் இந்த யாத்திரை கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என்று சொல்லப்படுகிறது.

கர்நாடகாவில் ராகுலின் யாத்திரையின் முக்கியத்துவம் குறித்து அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டி.என்.முருகானந்தமிடம் பேசினோம், ``இந்திய வரலாற்றில் மக்கள் எப்படி ஒரு மாபெரும் யாத்திரையை இதுவரை கண்டதில்லை. பொதுவாக, ஒரு யாத்திரையில் ஒரு இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், ஒரு சில இடங்களில் மக்கள் கூட்டம் இருக்காது. ஆனால், ராகுல் கன்னியாகுமரியில் யாத்திரையைத் தொடங்கிய தினம் முதல் ஒவ்வொரு பகுதியிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இணைந்துகொண்டதை நாம் அனைவருமே பார்த்தோம். யாத்திரைக்கு இந்தளவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்" என்றார்.

டி.என்.முருகானந்தம்
டி.என்.முருகானந்தம்

தொடர்ந்து பேசியவர், ``நமக்காகத்தான் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்த்து எதிர்க்கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாது முழித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், கேரளாவில் கூடிய கூட்டம், ஊட்டியிலும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. முன்பு கூடிய கூட்டத்தை விட தற்போது கர்நாடகாவில் ராகுலுக்கு மக்கள் ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடைய இந்த யாத்திரை முக்கிய காரணமாக இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது. இந்த யாத்திரை காங்கிரஸ் தொடர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று பேசினார்.

``கர்நாடகாவில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சி மீது பல்வேறு அதிருப்திகள் இருக்கிறது. இந்த சமயத்தில், ராகுல் காந்தி கர்நாடகாவில் மேற்கொண்டுள்ள இந்த பயணம், விரைவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பெருமளவில் கைகொடுக்கலாம்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.