வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள்; என்ன பாதிப்பு, இனி என்ன செய்ய வேண்டும்?

இதுவரை 5.5 கோடிக்கும் மேலானோர் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் பலர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை. தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே பலர் தாக்கல் செய்யாமல் உள்ளனர்.

Published:Updated:
வருமான வரி
வருமான வரி
0Comments
Share

வருமானம் ஈட்டுகிற ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இந்தக் கடமையை ஆற்றுவதற்கான கடைசி தேதி ஜூலை 31 உடன் முடிவடைந்துவிட்டது. இதுவரை 5.5 கோடிக்கும் மேலானோர் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் பலர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை.

தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே பலர் தாக்கல் செய்யாமல் உள்ளனர். இன்னும் சிலர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எப்படி என்று தெரியாமலும் உள்ளனர். ஆடிட்டரிடம் சென்றுதான் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா, நாமே செய்ய முடியுமா என்ற கேள்விகளும் பலருக்கு உண்டு.

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

இப்படி ஏதோ ஒரு காரணத்தால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை ஆடிட்டர் கோபாலகிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம்.

``60 வயதுக்குக் கீழ் உள்ள ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுகிற அனைவரும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். 60 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் ரூ.3 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டினால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டினால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

இன்னும் ஏன், மின்சார உபயோகக் கட்டணம் வருடத்துக்கு ரூ.1 லட்சத்தை தாண்டியிருந்தாலே அவர்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி
வருமான வரி

அந்தவகையில் கெடு தேதி ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள் அபராதக் கட்டணம் கட்ட வேண்டும். ரூ.5 லட்சத்துக்குக் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூ.5,000 அபராதமாகக் கட்ட வேண்டும்.

ஜூலை 31 வரையில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள் இனி தாக்கல் செய்ய முடியுமா என்றால் நிச்சயமாகத் தாக்கல் செய்ய முடியும். டிசம்பர் 31-ம் தேதி வரை அவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.

ஆனால், அபராதக் கட்டணத்தோடு வருமான வரிக்கு வட்டியும் சேர்த்து கட்ட வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டிய வரி ஏதும் இருக்கும் பட்சத்தில் அந்த வரிக்கு மாதம் 1 சதவிகிதம் வட்டி கணக்கிடப்படும்.

வருமான வரி
வருமான வரி

அதுமட்டுமல்லாமல் உங்களுடைய முதலீட்டில், சொத்தில் நஷ்டம் சந்தித்திருந்தால் அந்த நஷ்டக் கணக்கை தாமதமாகத் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கில் சேர்க்க முடியாது. அதாவது உதாரணமாக பங்குச் சந்தையில் நீங்கள் செய்திருந்த முதலீடு நஷ்டத்தில் இருந்தால் அந்தக் கணக்கை ஜூலை 31-க்குப் பிறகு தாக்கல் செய்யும் கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது.

மேலும் ஜூலை 31-க்கு முன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருந்தால் பின்னாளில் அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் ரிவைஸ்ட் ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும். ஆனால், ஜூலை 31-க்குப் பிறகு தாமதமாகத் தாக்கல் செய்தால் ரிவைஸ்ட் ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியாது.

டிசம்பர் 31 வரையிலும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியவில்லை எனில் அதன்பிறகு தாக்கல் செய்ய முடியுமா என்றால் முடியும். ஆனால், அதுவரையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்கான நியாயமான காரணம் இருந்தால் அது வருமான வரித் துறையால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் விண்ணப்பித்து தாக்கல் செய்யலாம்'' என்றார்.