``தந்திரத்தைக் கற்றுத்தரும் கோச்சிங் சென்டர்கள்; நடக்கப்போகும் விபரீதம்..!" - கஜேந்திரபாபு காட்டம்

உழைப்பு, ஓய்வு, உறக்கம் ஆகிய செயல்களுக்குத் தலா 8 மணி நேரம் என்பதுதானே அனைவருக்குமான சமச்சீர் வாழ்க்கைமுறை. ஆனால், நீட் தேர்வுக்காகக் கடுமையான மன உளைச்சலை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையை அதிகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கின்றன?

Published:Updated:
நீட் தேர்வுக்குச் செல்லும் மாணவி
நீட் தேர்வுக்குச் செல்லும் மாணவி
0Comments
Share

நீட் தேர்வுக்கு எதிரான அனல் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த 2018-ம் ஆண்டில், `அரசுப் பள்ளியில் படித்த ஹோட்டல் காவலாளியின் மகள் நீட் தேர்வில் வெற்றி’ என்ற செய்தி தமிழகம் முழுக்க வைரலானது. கோயம்புத்தூரைச் சேர்ந்த அழகுலட்சுமி, பன்னிரண்டாம் வகுப்பில் 1,120 மதிப்பெண் பெற்ற நிலையில், நீட் தேர்வில் 202 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். இதனால், மருத்துவ கவுன்சலிங்கில் இவர் பங்கேற்கிறார் என்ற செய்தியுடன், நீட் தேர்வினால் அவரின் மருத்துவக்கனவுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை என்ற பேச்சும் அடிக்கோடிட்டுச் சொல்லப்பட்டது.

நீட் தேர்வு சோதனை
நீட் தேர்வு சோதனை

2020-ல் விஜய் டிவி `நீயா? நானா?’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகுலட்சுமி, ``நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் கிடைத்த பேர், புகழை வெச்சு என் வாழ்க்கையில ஒண்ணுமே நடக்கல. மூணு முறை நீட் எக்ஸாம் எழுதியும் எனக்கு சீட் கிடைக்கல. இந்த முறை நீட் தேர்வுல 420 மார்க் எடுத்தேன். ஆனாலும், கவர்ன்மென்ட் கோட்டாவுக்கு இந்த மார்க் பத்தல. என்னால டாக்டராகவும் முடியல...” என்று ஆதங்கத்துடன் சொன்னது, அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை வர்க்கத்தினருக்கு, மருத்துவப்படிப்பு எட்டாக்கனவுதான் என்னும் இன்றைய யதார்த்தத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தது. அந்த வீடியோ இப்போதும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்படுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டபோது, எல்லா தரப்பிலும் தகுதியான மாணவர்கள் மருத்துவராக முடிந்தது. நீட் தேர்வின் வருகை, இந்தச் சூழலுக்கு வேட்டு வைத்தது. இதனை வலியுறுத்தி நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. அதன்பிறகு, நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களில் பலரும் தவறான முடிவெடுப்பது இப்போதுவரை தொடரும் நிலையில், ஆண்டுதோறும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இந்தத் தேர்வு குறித்த விவாதங்களுடன் ஆதங்கக்குரல்களும் அதிகமாக ஒலிக்கின்றன. இந்தப் போக்குத் தொடர்வதற்குப் பின்னணியில் உள்ள சிக்கல்கள் மற்றும் உளவியல் ரீதியான அணுகுமுறை குறித்து, கல்வியாளரும், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

நீட் தேர்வு மையம்
நீட் தேர்வு மையம்
KURUZ THANAM A

“போட்டி, வாய்ப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள், லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆண்டுக்கணக்கில் கோச்சிங் செல்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர். இவர்களுடன், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகளால் எப்படிச் சரிசமமாகப் போட்டிப்போட முடியும்? நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கற்றல் திறனை வளர்ப்பதற்கு ஊக்கம் தரப்படுகிறதா? நிச்சயம் இல்லை!

சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் கிடைக்கும். தவறான பதிலளித்தால் 1 மதிப்பெண் போய்விடும். இதனால், தவறான பதிலை ஏன் தேர்வுசெய்யக் கூடாது என்பதைச் சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்காமல், சரியான பதிலைத் தேர்வு செய்வதற்கான தந்திரம்தான் சொல்லித் தரப்படுகிறது. வகுப்பறையில் அறிவுத்திறன் வளர்கிறது. நீட் பயிற்சி வகுப்பில் தந்திரத்தை வளர்த்துக்கொள்வதற்கான ஊக்கம் தரப்படுகிறது. அறிவும் தந்திரமும் ஒன்றா? நரி செய்யும் செயலை ஊக்கப்படுத்துதுபோலத்தான் நீட் தேர்வுமுறையும் இருக்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இதனால், திறன் வாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதில் வருங்காலத்தில் கடுமையான சவால்கள் ஏற்படத்தான் போகின்றன. அந்தச் சூழல், மக்களுக்கும், மனித மாண்புக்கும் நல்லதாக இருக்காது. இதனால்தான், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது இந்தியாவிலுள்ள எல்லா பிள்ளைகளும் நீட் தேர்வுக்குத் தயாராவதற்கான சமச்சீரான வாய்ப்புகளையும் சூழலையும் ஏற்படுத்திய பிறகு, இந்தத் தேர்வை நடத்த வேண்டும் என்று சொல்லி வருகிறோம்” என்று நீட் தேர்வை எதிர்ப்பதற்கான காரணத்தை வலியுறுத்தியவர், இந்தத் தேர்வுக்குப் பின்னணியிலுள்ள நடைமுறைச் சிக்கல்களையும் விவரித்தார்.

``சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, அதே பாடத்திட்டத்தில்தான் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வும், நீட் தேர்வும் நடத்தப்படுகிறது. ஒரே பாடத்திட்டமாக இருந்தும் ஏன் இருவேறு தேர்வுமுறை? சரி, அந்த மாணவர்களாவது ஏற்கெனவே படித்த பாடத்திட்டத்தில்தான் நீட் தேர்வுக்குத் தயாராகின்றனர் என்று வைத்துக் கொண்டாலும், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் அரசுப் பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களால் கடினமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் படித்து மருத்துவப் படிப்புக்கு எப்படிப் போட்டிப்போட முடியும்? முயன்றால் முடியும் என்றாலும், அதற்கான போதிய கட்டமைப்பு வசதிகளையாவது செய்து கொடுக்க வேண்டுமல்லவா?

நீட் விளையாட்டு..!
நீட் விளையாட்டு..!

இந்த அநீதிகளையெல்லாம் தாண்டி அரசுப் பள்ளி மாணவர்களில் சிலர் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. தனியார் மருத்துவக்கல்லூரியில் நிர்வாகப் பிரிவில் கட்டணம் கட்டிப் படிக்க அவர்களுக்குப் பொருளாதார வசதி தடைபோடுகிறது. எனவே, வேறு பாடப்பிரிவைத் தேடிச்செல்வதைவிட மாற்று வழியின்றி தவிக்கின்றனர்.

போட்டிகள் கடுமையாகிக்கொண்டே போகின்றன. ஆண்டுக்கணக்கில் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகின்றனர். இதனால், மருத்துவப் படிப்புக்கான தகுதியை நிர்ணயிக்கும் மதிப்பெண் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேவேளையில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு மங்கிக்கொண்டே போகிறது. இந்த இக்கட்டான நிலையிலும், அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வு மூலமாக அரசு ஒதுக்கீட்டில் ஒருசிலர் வாய்ப்பு பெறுகின்றனர். `கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?’ என்பதுபோல, மிகச் சொற்ப எண்ணிக்கையிலுள்ள அந்த மாணவர்களின் வெற்றியை, நீட் தேர்வுக்கு ஆதரவான போக்குடன் ஒப்பிடவே முடியாது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நம் சமூகத்தில் அநியாயத்தை ஜீரணித்துக் கொள்ளத்தான் பலருக்கும் உபதேசம் தரப்படுகிறது. வளர்ந்தவர்கள், பக்குவம் பெற்றவர்கள் வேறு வழியின்றி இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வளரிளம் பருவத்திலுள்ள மாணவர்கள் பலராலும் தோல்விகளை எளிதில் ஜீரணிக்க முடிவதில்லை. போட்டிப் போடுவதற்கான இந்த மனப்பான்மை, தாழ்வுமனப்பான்மையை அதிகரித்து, மாணவர்களின் உளவியலைக் கடுமையாக பாதிக்கிறது. இந்த நிலையை ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் மெளனம் காக்கின்றனர். குடிமக்களின் நலனைவிடவும், கல்வி வணிகத்திலுள்ள பெரும் முதலாளிகளுக்குத் துணை போவதையும், பொது சுகாதாரத்தில் தனியாரின் ஆதிக்கமும் அச்சுறுத்தலும் மேலோங்கவுமே மத்திய அரசு அக்கறை காட்டுகிறது.

உழைப்பு, ஓய்வு, உறக்கம் ஆகிய செயல்களுக்குத் தலா 8 மணி நேரம் என்பதுதானே அனைவருக்குமான சமச்சீர் வாழ்க்கைமுறை....? ஆனால், நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் வாழ்க்கைமுறை இப்படியா இருக்கிறது? படிப்புக்காகக் கடுமையான மன உளைச்சலை எதிர்கொள்ளும் அந்த மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையை அதிகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கின்றன? இதையெல்லாம் கைகட்டி அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம்?" என்று காட்டமாகக் கூறும் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழக அரசின் பொறுப்புணர்வு குறித்தும் வலியுறுத்துகிறார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

"நீட் தேர்வால் வணிக மயத்தை ஒழிக்க முடியவில்லை; சரியான தகுதியைத் தீர்மானிக்க முடியவில்லை; திறமைக்கு மதிப்பு கொடுக்க முடியவில்லை. நீட் இருக்கும்வரை இந்த அநீதிகள் தொடரும். இதைத்தான் ஆரம்பம் முதலே பலரும் சொல்லி வருகின்றனர். நீட் தேர்வுக்கு நாங்கள் விலக்கு கேட்கவில்லை. இந்தத் தேர்வால் மாணவர்கள்மீது தொடுக்கப்படும் உளவியல் வன்முறைக்கு எதிராகவே விலக்கு கேட்கிறோம். இதைப் பல ஆண்டுகளாகப் பல வழிகளில் சொல்லியும் அரசு செவி சாய்ப்பதாக இல்லை.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அது ஏமாற்றும் செயல்தான். நீட் விலக்கு குறித்த நம்பிக்கையைத்தான் தி.மு.க அரசு, தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்குக் கொடுத்தது. நீட் ஒழிப்பு மசோதாவுக்கு ஆளுநர் மற்றும் மத்திய அரசிடம் ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில், மக்களைத் திரட்டி கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கிடைக்கும்வரை சமரசமின்றி போராட வேண்டுமல்லவா? நீட் விஷயத்தில் நீதியை நிலைநாட்டவில்லை என்றால், ஆளும் தி.மு.க அரசு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்ததாகத்தான் வரலாறு சொல்லும்” என்று முடித்தார்.