``ஷிண்டே சாரிடம் சொன்னோம்... துணிக்கடையே ஹோட்டலுக்கு வந்தது” - அனுபவம் பகிரும் அதிருப்தி எம்.எல்.ஏ

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சூரத்துக்குச் சென்றபோது மாற்று உடை உட்பட எதுவும் எடுத்துச் செல்லாமல் சென்றிருக்கிறார்கள்.

Published:Updated:
அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்
அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்
0Comments
Share

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 20-ம் தேதி சிவசேனா எம்.எல்.ஏ-க்களிடையே பிளவு ஏற்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரிடமும் விருந்து இருப்பதாகக் கூறி மூன்று கார்களில் ஏக்நாத் ஷிண்டே அழைத்துச் சென்றாராம். விருந்துக்குத்தானே செல்கிறோம் என்று நம்பி அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் லக்கேஜ், மாற்று உடை உட்பட எதையும் எடுத்துச் செல்லாமல் சென்றனர். அவர்கள் மும்பை எல்லையைத் தாண்டி குஜராத் நோக்கிச் சென்றபோதுகூட எங்கு செல்கிறோம் என்று பலருக்குத் தெரியவில்லை.

இவ்வாறு குஜராத் சென்ற அனுபவம் குறித்து ஏக்நாத் ஷிண்டே அணியில் இடம்பெற்றிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்சாத் கூறுகையில், ``ஆரம்பத்தில் நாங்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்றே எங்களுக்குத் தெரியாது. இதனால் மாற்று உடை எதையும் எடுத்துச் செல்லவில்லை. ஷிண்டே சார் `எங்களுடன் வாருங்கள்’ என்று சொன்னவுடன் வேறு கேள்வி எதையும் கேட்காமல் சென்றுவிட்டோம். அதிகாலை 2 மணிக்கு சூரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்
அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்

ஹோட்டலுக்குச் சென்ற பிறகுதான் எங்களிடம் எந்த மாற்று உடையும் இல்லை என்று ஷிண்டேயிடம் சொன்னோம். உடனே ஒரு லாரி முழுக்கப் புதிய ஆடைகள் வந்து சேர்ந்தன. ஒரு துணிக்கடையே ஹோட்டலுக்கு வந்தது போன்று இருந்தது. ஆடைகள் மட்டுமல்லாமல் ஷேவிங் செய்யத் தேவையான பொருள்கள், காலணிகள் போன்றவையும் வந்து சேர்ந்தன. அவற்றில் விருப்பமானதை நாங்கள் எடுத்துக்கொண்டோம். ஆனால் ஷிண்டே சாருக்கு அந்த ஆடைகளில் எதுவும் அவருக்கு பிடித்தமானது இல்லை. அவருக்கு தானேயிலிருந்து ஆடைகள் வரவழைக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

எம்.எல்.ஏ-க்கள் அடுத்த நாள் இரவே அஸ்ஸாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர். அங்கு ஒரு வாரம் தங்கிவிட்டு கோவாவுக்கு அழைத்துவரப்பட்டு அங்கும் சில நாள்கள் தங்கியிருந்தனர். அதோடு மும்பைக்கு அழைத்துவரப்பட்ட பிறகும் இரண்டு நாள்கள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு அரசுப் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டிய பிறகுதான் அனைவரும் தனியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதற்கிடையே, புதிய அரசு பதவியேற்றதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுவில், சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 16 பேர்மீது நடவடிக்கை எடுக்க துணை சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கும் சூழ்நிலையில் ஆளுநர் பகத் சிங் கோஷாரியா, ஏக்நாத் ஷிண்டேயை ஆட்சியமைக்க அழைத்தது சட்டவிரோதம் என்றும், அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் 16 எம்.எல்.ஏ-க்களையும் வாக்களிக்க அனுமதித்ததும் சட்டவிரோதம் என்றும் சிவசேனா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த மனுவும் ஏற்கெனவே சிவசேனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவும் வரும் 11-ம் தேதி சேர்த்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.