`தமிழ்நாட்டில் தீவிரம் காட்டும் வைரஸ் காய்ச்சல்' - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்படி?!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா, டெங்கு காய்ச்சல் பரவலால் பொதுமக்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

Published:Updated:
இன்ஃபுளுயன்சா - வைரஸ் காய்ச்சல்
இன்ஃபுளுயன்சா - வைரஸ் காய்ச்சல்
0Comments
Share

தமிழ்நாடு முழுக்க `இன்ஃபுளுயன்சா’ எனப்படும் H1N1 வைரஸ் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. சுமார், 965 பேர் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் மட்டும் 117 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பன்றிக்காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல்

சமீபகாலமாக தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா, டெங்கு காய்ச்சல் பரவலால் பொதுமக்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாக தலைவலி, காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டைவலி, மூக்கடைப்பு, உடல்வலி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, இன்ஃபுளுயன்சா காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும் என்றாலும்கூட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், தீவிரமான சுவாசப் பிரச்னை கொண்டவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம் என அரசால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

`பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' - பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாகப் பரவிவருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும் அச்சத்தையும் அளிக்கிறது. இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாகப் பரவிவருகிறது. எந்தெந்தப் பகுதிகளில் காய்ச்சல் அதிகமாகப் பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய் தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை" என குற்றம்சாட்டியிருக்கிறார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - கோப்பு படம்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - கோப்பு படம்
தே.சிலம்பரசன்

மேலும், ``இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்துவிடும். தமிழ்நாட்டில் எந்தெந்தப் பகுதிகளில், என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன... நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும். குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத்தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

`விடுமுறை அளிக்க அவசியமில்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் பரவல் குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``பருவமழைக்கு முன்னால் வரும் காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு வரக்கூடியதுதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் காய்ச்சல் பாதிப்பு பெரிதாகத் தெரியவில்லை. எப்போதும் ஏற்படக்கூடிய பாதிப்புதான் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. காய்ச்சல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 4,740 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

கடந்த ஆண்டு இதே தேதியில் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனவே, இது இயல்பான ஒன்றுதான். குழந்தைகளுக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது. பள்ளிகளில் ஆசிரியர்கள், குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பிவைக்க வேண்டும். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை" என்று தெரிவித்தார்.