ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு... பந்தாடப்படும் துணைவேந்தர்கள்!

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஆளுநர் vs தமிழ்நாடு அரசு என்று போட்டாபோட்டி அரங்கேறி வருகிறது. அந்தவகையில் கல்வித்துறையில் ஆளுநருக்கும், அரசுக்குமான போட்டி முற்றியிருக்கிறது.

Published:Updated:
ஆளுநர் Vs அரசு
ஆளுநர் Vs அரசு
0Comments
Share

அரசு பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநர் ரவி, மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசு எதிர்க்கும் நீட், புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை தொடர்பாகவும் தொடர்ந்து பேசி வருகிறார். அதேநேரத்தில், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த மாநில அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

ஆளுநருடன் துணைவேந்தர்கள்
ஆளுநருடன் துணைவேந்தர்கள்

இதற்கிடையே, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை அரசு புறக்கணித்து தனது எதிர்ப்பை காட்டியது. இதன்தொடர்ச்சியாக, ஆளுநர் மாளிகை சார்பாக தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசின் 13 பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் கடந்த ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி ஆளுநர் பேசியிருந்தார். அதேபோல, துணைவேந்தர்களிடம் தனித்தனியாகவும், 5 பேர் கொண்ட குழுவாகவும் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டார்.

அந்தச்சமயத்தில் ஆளுநர் அதிகாரங்களைக் குறைப்பதற்காக, துணைவேந்தர்களை அரசு நியமிப்பதற்காகச் சட்ட மசோதாவை தி.மு.க அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருந்தது. இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகனைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது ஆளுநர் மாளிகை.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடி, அவ்விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். பின்னர், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியைப் பங்கேற்க வைத்த ஆளுநர், எல்.முருகனோடு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பொன்முடியைப் பங்கேற்க வைத்தார். ஆனால், இந்த நிகழ்வுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பொன்முடி அமைதியாகவே இருந்தார்.

இதற்கிடையே துணைவேந்தர்களை அரசு நியமிக்கும் மசோதா-வுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் கடந்த ஜூன் மாதம் காலியான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, வழக்கமான ஆளுநர் மேற்பார்வையில்தான் தேர்வு நடைபெற்று வருகிறது. இவ்வாறு பல்கலைக்கழக விவகாரத்தில் அடிவாங்கிய அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்களுக்கான மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 17-ம் தேதி நடத்தத் திட்டமிட்டப்பட்டது.

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

ஆனால், செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க உதவியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு-வை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லி புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதன்காரணமாக, துணைவேந்தர் மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இருப்பினும், துணைவேந்தர் மாநாடுக்கு அமைச்சர் பொன்முடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை மூத்த அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ``பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும், உயர் கல்வித்துறைக்கும் ஆரம்பத்திலிருந்தே சரியாகப் பிணைப்பு ஏற்படவில்லை. துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த ஆளுநருக்கு எல்லா அதிகாரம் உள்ளது. ஆனால், உயர் கல்வித்துறையுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர் மாநாட்டுக்குப் பின்பு, சென்னையில் அரசு சார்பில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தத் திட்டமிட்டோம்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

ஆனால், அதற்கான நேரம் சரியாக அமையவில்லை. மேலும், பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் மாளிகையின் தலையீடு அதிகமாக இருப்பதால், அரசுடன் துணைவேந்தர்களுடனான பிணைப்பு குறைந்துவிட்டது. இதனைச் சரிசெய்யவும், பல்கலைக்கழகத்தில் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவும் துணைவேந்தர்களிடம் அமைச்சரும், செயலாளரும் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படிதான், முதல்வர் தலைமையில் சென்னையில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்த மாநாட்டில் மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நடைமுறைகளையும், ஆசிரியர், பணியாளர்கள் பணி நியமனம் உள்ளிட்ட நிர்வாகி ரீதியாக அரசுடன் எவ்வாறு பிணைப்பில் இருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்" என்றனர்.

பொன்முடி - ஆளுநர்
பொன்முடி - ஆளுநர்

இதுகுறித்து துணைவேந்தர்கள் சிலரிடம் கேட்டபோது, "பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி), அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம் (ஏ.ஐ.சி.டி.இ) ஆகிய உயர் அமைப்புகள் வழங்கும் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தவேண்டும் என்று வேந்தராக ஆளுநர் ஒரு பக்கமும், மாநில அரசு சொல்வதே செயல்படுத்தவேண்டும் என்று இணை வேந்தராக அமைச்சர் ஒருபக்கமும் நின்று எங்களைப் பந்தாடுகிறார்கள்.

வெளியே ஆளுநரை எதிர்ப்புபோல அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால், சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் தேசிய தரவரிசை பட்டியல் இடம்பெற்ற பல்கலைக்கழகத்துக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, ஆளுநருடன் ரொம்பவே க்ளோஸாக பேசிக் கொண்டார்.

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பொன்முடி
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பொன்முடி

இதனால் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம். தேசிய கல்விக் கொள்கையாக இருந்தாலும், மாநில கல்விக் கொள்கையாக இருந்தாலும், பாடத்திட்டத்தை மாற்றியமைக்கக் குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். இதைப் புரிந்து கொள்ளாமல் அரசும் ஆளுநர் மாளிகையும் செயல்படுகிறது" என்றனர்...

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறுகையில், " பல்கலைக்கழகங்களில் கடந்த 4 மாதங்களாக அரசியல் புகுந்து விளையாடுகிறது. பட்டமளிப்பு விழாக்களில் முழுக்க முழுக்க அரசியல்தான் பேசப்படுகிறது. துணைவேந்தர்களை ஏற்கனவே ஆளுநர் அழைத்து மாநாடு நடத்தி இருப்பதற்குப் பதிலடியாக முதல்வரும் மாநாடு நடத்த இருக்கிறார்.

பாலகுருசாமி
பாலகுருசாமி

இதுவரை இதுபோன்ற மாநாடுகள் தமிழ்நாட்டில் நடந்தது கிடையாது. பல்கலைக்கழக கல்வியின் தரம் உயர்வுக்காக ஆளுநருக்கும் அரசுக்குமான போட்டி இருக்கவேண்டும். ஆனால், இந்த அரசியல் போட்டி மாணவர்களின் கல்வியைப் பாதிப்பதோடு, பல்கலைக்கழகங்களுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களைத் துணைவேந்தர்களாலும் செய்ய முடியாத நிலை ஏற்படும்" என்றார்.