அப்செட் ஆக்கிய டெல்லி `விசிட்’ - எடப்பாடி உடனே சென்னை திரும்பியதன் பின்னணி என்ன?!

டெல்லி தலைமையைப் பார்ப்பதற்காகத்தான், 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இனி இங்கிருந்தாலும், ஆர்ப்பாட்டத்தையும் முறையாக நடத்த முடியாது என்றுதான், உடனே கிளம்பியிருக்கிறார் எடப்பாடி.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
0Comments
Share

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, கடந்த 11-ம் தேதி அ.தி.மு.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. அப்போது, ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வர முயன்ற ஓ.பி.எஸ்-ஸை, அங்கிருந்த இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இதன் காரணமாக, அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இரு தரப்பும் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கினார். அதேபோல, கட்சியின் மீதான உரிமையை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, ஓ.பி.எஸ் தரப்பை மேலும் பலவீனமாக்கியது.

அலுவலகத்தின் சாவி கையில் கிடைத்தபோதும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனபோதும், நிம்மதியாக உட்காரக்கூட முடியாமல் திணறிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, டெல்லி தலைமையிடம் ஓ.பி.எஸ் தொடர்ந்து பேசிவருகிறார். இதனால், தனக்கு எதிராக எந்த முடிவையும் டெல்லி எடுத்துவிடக் கூடாது என்று எடப்பாடி நினைக்கிறார்.

மோடி, ஓ.பி.எஸ்
மோடி, ஓ.பி.எஸ்

இந்த நிலையில், தன்னைச் சுற்றியிருக்கும் ஆதரவாளர்களுக்கு வருமான வரித்துறையின் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடியைச் சமாளிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவைக் காரணமாகவைத்து டெல்லிக்குப் பறந்த எடப்பாடி, எதிர்பார்த்த எதுவும் நடக்காததால், விரக்தியில் வெறும் கையோடு திரும்பியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இது தொடர்பாக எடப்பாடி தரப்பில் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்றதிலிருந்து பல முனைகளிலிருந்தும் பிரச்னை பறந்துவருகிறது. அமைப்புச் செயலாளர்கள் மாற்றம், புதிய பொறுப்புகள் நியமனம் ஆகியவற்றால், எடப்பாடிக்குச் சிக்கல் அதிகரித்திருக்கிறது. இதைச் சமாளிக்க, தங்கமணிக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், டெல்லியிலிருந்து இப்போது ஏகப்பட்ட நெருக்கடிகள் எடப்பாடியின் கழுத்தை நெருக்கியுள்ளன.

மோடி, எடப்பாடி, அண்ணாமலை
மோடி, எடப்பாடி, அண்ணாமலை

இதைச் சமாளிக்க, மோடியையும், அமித் ஷாவையும் சந்திக்க ஜனாதிபதி வழியனுப்பு விழாவைக் காரணமாக வைத்து, தமிழ்நாடு பா.ஜ.க தலைமையின் துணையோடு டெல்லிக்குச் சென்றார் எடப்பாடி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், கட்சி தொடர்பாகவும், ரெய்டு தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் பேச முடியவில்லை. எதுவாக இருந்தாலும், அமித்ஷாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என மோடி கூறியிருக்கிறாராம்.

அதேபோல, எடப்பாடி பேச வருவதைக் காது கொடுத்தே கேட்வில்லை என்கிறார்கள். அமித் ஷா மீட்டிங்குக்காக பல மணி நேரம் காத்திருந்தும் சந்திக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் துணையாக வந்த தமிழ்நாடு பாஜக முக்கியஸ்தரே, எடப்பாடியின் போனை எடுக்கவில்லையாம். இதைக் கொஞ்சமும் எடப்பாடி எதிர்பார்க்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக, அவ்ர் டெல்லி தலைமையைப் பார்ப்பதற்காகத்தான், 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இனி இங்கிருந்தாலும், ஆர்ப்பாட்டத்தையும் முறையாக நடத்த முடியாது என்றுதான், உடனே கிளம்பியிருக்கிறார். அதேபோல, 28-ம் தேதி சென்னை வரும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். ஆனால், இங்கு நேரம் கிடைக்கவில்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கையில் எடப்பாடி இறங்குவார்" என்றனர்.

ரெய்டு தொடர்பாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேரடியாகப் பேசினால், எதிர்க்கட்சியினர் கையில் எடுக்கக்கூடும் என்பதால்தான் இந்தச் சந்திப்பை ஆளும் தரப்பு புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் எடப்பாடியைச் சந்தித்துப் பேசாததை சிக்னலாக பார்த்த பன்னீர் ரொம்பவே குஷியாகியிருக்கிறார். மேலும், தனது தரப்பைப் பலப்படுத்த முழுமூச்சாக வேலை செய்ய இறங்கியிருக்கிறார் பன்னீர்.

 ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

குறிப்பாக, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக பன்னீரும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் இருந்த காலகட்டத்தில் கட்சியிலிருந்து ஓ.பி.எஸ்-ஸின் தம்பி ஓ.ராஜா முதல் சுமார் 800 பேருக்கும் மேல் நீக்கப்பட்டனர். இவர்களில் பாதி பேருக்கும்மேல் பன்னீரின் ஆதரவாளர்கள்தான். அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து புது அறிவிப்பை 24-ம் தேதி வெளியிட்டார். மேலும், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமித்து தன் பங்குக்கு நெருக்கடி கொடுக்கிறார் ஓ.பி.எஸ்... செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு விழாவை தொடங்கி வைப்பதற்காக மோடி தமிழ்நாடு வரவிருக்கிறார். அப்போது இரு தரப்பையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச மோடி திட்டமிட்டிருக்கிறார் என்ற உறுதி செய்யப்படாத தகவலும் வெளியாகியிருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!