பீகார்: பாஜக-வுடன் பிரேக் அப்... மீண்டும் லாலுவுடன் கூட்டணி அமைக்கும் நிதிஷ் - யார் அடுத்த முதல்வர்?

பீகார்: நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ் தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சி... இருவரில் யார் முதல்வர்?!

Published:Updated:
நிதிஷ் - மோடி - லாலு
நிதிஷ் - மோடி - லாலு
0Comments
Share

பீகார் அரசியலில் பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதுதான் பரபரப்புக்குக் காரணம். பா.ஜ.க கூட்டணியிலிருந்து முதல்வர் நிதிஷ் குமார் வெளியேற முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான திட்டத்தையும் தீட்டியிருக்கிறார் நிதிஷ்!

முறிந்த கூட்டணி!

கூட்டணியிலிருந்து கொண்டே நீண்ட நாள்களாக பல்வேறு விஷயங்களில் பா.ஜ.க-வும், ஐக்கிய ஜனதா தளமும் மோதிக்கொண்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மத்திய அரசு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தார் நிதிஷ் குமார். ஆகையால், ஆளும் கூட்டணி முறியப்போவதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இரு தினங்களுக்கு முன்னர், பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டிவந்த ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தேசியத் தலைவரான ஆர்.சி.பி.சிங் கட்சியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி அன்று, கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ-க்களை அவசரக் கூட்டத்துக்கு அழைத்தார் நிதிஷ்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இன்று கூடிய இந்தக் கூட்டத்தில், ``2020 தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததிலிருந்தே, அவர்கள் நமது கட்சியைப் பலவீனப்படுத்த முயன்று வருகிறார்கள். இப்போதுகூட நாம் விழித்துக் கொள்ளவில்லையென்றால், நம் கட்சிக்கு பெரும் ஆபத்து'' என்று நிதிஷ் பேசியதாகத் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்தக் கூட்டம் முடிந்த பின்னர், கூட்டணி முறிவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியிட்டிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் உபேந்திர குஷ்வாஹா (Upendra Kushwaha).

எதிர்க்கட்சிகளின் ஆதரவு!

நிதிஷ் குமார் கூட்டம் நடத்திய அதே சமயத்தில், பா.ஜ.க-வும் மூத்த தலைவர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்தியது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்களது மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் கூட்டம் நடத்தின. இந்தக் கூட்டத்தில், நிதிஷ் குமாருக்கு ஆதரவு வழங்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருக்கின்றன.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டமன்றத்தில், பா.ஜ.க-வுக்கு 77 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதே நேரம், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு அதிகபட்சமாக 79 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏ-க்களும், இடது சாரிகளுக்கு 12 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நிதிஷுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

`கிங் மேக்கர்'

இந்த நிலையில், மாலை 4 மணியளவில் பீகார் ஆளுநர் பகு செளஹானை (Phagu Chauhan) நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறார் நிதிஷ் குமார். கூடவே, 160 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கி, மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ் உரிமை கோரியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆளுநருடனான சந்திப்பை முடித்துவிட்டு, நேரடியாக லாலு பிரசாத் யாதவின் வீட்டுக்குச் சென்று நன்றி தெரிவித்தார் நிதிஷ் குமார்.

லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹினி, தன் தந்தையின் ஆதரவுடன் மீண்டும் பீகாரில் ஆட்சி அமையவிருப்பதால், அவரை `கிங் மேக்கர்' என்று புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

யார் முதல்வர்?

`நிதிஷ் குமார் பக்கம் 45 எம்.எல்.ஏ-க்கள்தான் இருக்கின்றனர். ஆனால், தேஜஸ்வி யாதவின் வசம் 79 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால், அவர் முதல்வர் பதவியைக் கோரலாம்' என்பது போன்ற செய்திகள் உலவின. இந்த நிலையில், நிதிஷ் குமாரே முதல்வராகச் செயல்படுவார் என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மற்ற அமைச்சர்களையும் அவரே நியமிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பொறுப்பேற்பார் என்றும், அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்த தேர்தலில், தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

புதுச்சேரி, மகாராஷ்டிரா எனப் பல இடங்களில் தொடர்ந்து ஆளும் கூட்டணியைக் கவிழ்த்து, ஆட்சியைப் பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்த பா.ஜ.க-வுக்கு, தன்னுடைய அதிரடிகள் மூலம் ஷாக் கொடுத்திருக்கிறார் நிதிஷ். பீகாரில், பா.ஜ.க-வின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதைக் காத்திருந்து பார்ப்போம்!