`சிவசேனா உடைவதைத் தடுக்க வேண்டும்’ - மோடி, அமித் ஷாவிடம் கடைசி நேரத்தில் பேசிய உத்தவ் தாக்கரே?!

சிவசேனா உடையும் முன்பு அதன் தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது!

Published:Updated:
தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரே
தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரே
0Comments
Share

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா இரண்டாக உடைந்தது. இதனால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை இழந்ததோடு, ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 39 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 20-ம் தேதி மகாராஷ்டிரா சட்டமேலவைத் தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பது தெரிந்தவுடன் அன்றே உத்தவ் தாக்கரே அவசரமாக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது ஏக்நாத் ஷிண்டே மற்றும் 11 எம்.எல்.ஏ-க்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்களை குஜராத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு, அங்கிருந்து அஸ்ஸாமுக்குச் சென்றார். அதன் பிறகு கட்சி உடைவது தவிர்க்க முடியாதது என்பதைத் தெரிந்துகொண்ட உத்தவ் தாக்கரே, பாஜக-வுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி அடைந்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே
அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் உத்தவ் தாக்கரே போனில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம். ``எதுவாக இருந்தாலும் என்னுடன் பேசுங்கள், சமாதானமாகப் போகலாம்” என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். ஆனால் இதற்கு பட்னாவிஸ் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் போன் செய்து உத்தவ் தாக்கரே பேசிப் பார்த்தாராம். எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர்கள் உத்தவ் தாக்கரேவின் பேச்சைக் கேட்கவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

``2019-ம் ஆண்டு நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்டபோது அதை நீங்கள் கேட்கவா செய்தீர்கள்” என்று அவர்கள் உத்தவ் தாக்கரேயிடம் திரும்பக் கேட்டனராம். இதனால் உத்தவ் தாக்கரேயால் எதுவும் சொல்ல முடியவில்லையாம். 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக-வுக்கு அதிக இடங்கள் கிடைத்தும் தங்களுக்கும் முதல்வர் பதவி வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருந்ததால் கூட்டணி முறிந்தது. அப்போது பாஜக தலைவர்கள் அனைவரும் உத்தவ் தாக்கரேயிடம் பேச முயன்றனர். ஆனால் அப்போது உத்தவ் தாக்கரே அவர்களிடம் பேசத் தயாராக இல்லை எனச் சொன்னாராம். இப்போது அவருக்குத் தக்கபாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக தலைவர்கள் சிவசேனாவை உடைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

உத்தவ் தாக்கரே இல்லாத சிவசேனாவை உருவாக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. சிவசேனா எம்.பி-க்கள் சிலர் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்படி உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அவ்வாறு கடிதம் எழுதிய எம்.பி-க்களிடம் பாஜக-வுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கும்படி உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார். எம்.பி-க்கள் முயற்சி மேற்கொண்டு பார்த்தும் பாஜக தலைவர்களை சமாதானப்படுத்தவில்லை.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவின் மனைவி ரேஷ்மி தாக்கரே சிவசேனா எம்.எல்.ஏ-க்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் பாஜக தலைமை அனுமதி கொடுக்காததால், ஏக்நாத் ஷிண்டேயால் உத்தவ் தாக்கரேயுடன் சமாதானமாகச் செல்ல முடியவில்லை. இப்போது எந்த அணி உண்மையான சிவசேனா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரச்னை நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தாலும் கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னத்தை எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். தற்போது சட்டமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தாலும், எம்.பி-க்கள் இன்னும் உத்தவ் தாக்கரே அணியிலிருந்து ஷிண்டே அணிக்குச் செல்லவில்லை. அவர்கள் தொடர்ந்து உத்தவ் தாக்கரே அணியில் இருக்கும்பட்சத்தில் சின்னம் தொடர்பாக முடிவு எடுப்பதில் தேர்தல் கமிஷனுக்குச் சிக்கல் ஏற்படும் என்று சட்டவல்லநர்கள் தெரிவித்தனர். அடுத்த சில மாதங்களில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளுக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுவிடும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.