`ஆட்சியரின் அலட்சியம்; வேட்டையாடுவது போல்...’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை செல்வதென்ன?

2018 மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?

Published:Updated:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
0Comments
Share

தமிழ்நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்ப்வத்தில் ஸ்னோலின் என்ற மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் 23.05.2018ல் ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது.

நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினி உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் குழு 3,000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அப்போது அதில் சொல்லப்பட்ட பல்வேறு தகவல்களில் கசிந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில் அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த அருணா ஜெகதீசன்
முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த அருணா ஜெகதீசன்

இந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெறவும், போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க கூறப்பட்டிருந்தது. பரிந்துரை செய்யப்பட்டுள்ளவற்றில் சில ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

``ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது குறித்து காவல்துறை முன்பே எச்சரிக்கை செய்துள்ளது. வேதாந்தா நிறுவனம் 22.05.2018 அன்று போராட்டம் நடக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி உயர் நீதிமன்றத்தை அனுகியிருக்கிறது. துப்பாக்கிச்சூடு நடக்கும் நான்கு நாள்களுக்கு முன்பு, அதாவது 2018 மே மாதம் 18ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஓர் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர், காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மாநகராட்சி ஆணையர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த அசாதாரணச் சூழல் குறித்து அவரிடம் எந்த அக்கறையும் இல்லை. ஆட்சியரின் அறுவுறுத்தலின் பெயரில் 20-ம் தேதி ஓர் அமைதிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே 22ம் தேதி அமைதிக் கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும், ஆட்சியர் போராட்டக்காரர்களை அழைத்து சமாதானக்குழு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டு இயக்கத்தை முதல்வர் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடக்கும் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்படும் எனவும் உளவுத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு அந்தத் தகவல் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ஆட்சியர் சொல்லியிருக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

மாவட்ட ஆட்சியர் இருந்த போதும், அவர் சுடுவதற்கு ஆணை வழங்கவில்லை. அது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரிகளும் நடைமுறைகள் எதுவும் பின்பற்றவில்லை.” என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவரமாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குளறுபடிகள் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் அந்த அறிக்கையில். ``போலீஸார் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்டு சுட்டிருக்கிறார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை பூங்காவில் மறைந்து இருந்து போலீஸார் சுட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டின் போது காட்டில் வேட்டையாடுவது போல் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டிருக்கிறார். வேட்டைக்காரர்கள் போல் காவல்துறை செயல்படக்கூடாது” எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.