தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `ஒரு காவலர் மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார்’ - கசிந்ததா அறிக்கை?!

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அப்போதைய ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுமே முழுப்பொறுப்பு. துப்பாக்கிச்சூடு நடத்திட முறையான அனுமதியோ, வரைமுறையோ பின்பற்றப்படவில்லை” என ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published:Updated:
முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை
முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை
0Comments
Share

தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், கடந்த 3 ஆண்டுகளில் 36 கட்டங்களாக நடத்தியது. இதில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1,048 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. 3,000 பக்கங்களுக்கும் மேற்பட்ட இதன் முழுமையான விசாரணை அறிக்கை, கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலவரம்
கலவரம்

இந்த நிலையில், ஒருநபர் விசாரணை ஆணைத்தின் விசாரணை அறிக்கையில் உள்ள தகவல்கள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ``நிராயுதபாணியான பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையை கண்டிக்கிறோம். இது, தமிழ்நாடு கண்டிராத மிக மோசமான காவல்துறை நடவடிக்கைகளில் ஒன்று. போராட்டக்காரர்களின் கூட்டத்தினை கையாள்வதற்கு தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யாருடைய உத்தரவும், தூண்டுதலும் இன்றி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

போலீஸார், வெகு தொலைவில் இருந்த போராட்டக்காரர்களை தங்கள் மறைவிடங்களில் இருந்து சுடுவதில் ஈடுபடும் வழக்கம் இங்கு இருந்துள்ளது. தோட்டாக்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை போராட்டக்காரர்கள் அறிய முடியவில்லை. இந்தக் குழப்பத்தின் விளைவுதான் மரணம். அந்த நேரத்தில் பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி எஸ்.பி., மகேந்திரன், உதவி எஸ்.பி லிங்கத் திருமாறன், மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஏழு காவலர்கள் இவர்கள்தான் கலவரத்திற்குப் பொறுப்பு.

வெங்கடேஷ், மகேந்திரன், சைலேஷ்குமார் யாதவ், கபில்குமார் சரட்கார்
வெங்கடேஷ், மகேந்திரன், சைலேஷ்குமார் யாதவ், கபில்குமார் சரட்கார்

இவர்கள் அனைவரும் வரம்பை மீறி விட்டார்கள். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சியரான வெங்கடேஷ் தன் பொறுப்பிலிருந்து விலகி கடுமையான அலட்சியத்துடன் தவறான முடிவுகளை எடுத்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தங்குவதற்குப் பதிலாக 50 கி.மீ தொலைவில் உள்ள கோவில்பட்டியில் தங்கி இருந்துள்ளார். துப்பாக்கிச்சூடு அருகில் இருந்து நடத்தப்படவில்லை. தூரத்தில் இருந்துதான் சுடப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை இதனை தெளிவுபடுத்துகிறது. சிட்டுக்குருவிகள் சுடப்படுவதைப் போல மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த 13 பேரில் ஸ்னோலின் உட்பட 6 பேர் பின்னால் இருந்து சுடப்பட்டவர்கள். துப்பாக்கிச்சூட்டிற்கு முந்தைய எச்சரிக்கை நடவடிக்கைகளான கண்ணீர்ப்புகை, லத்தி சார்ஜ், காற்றில் எச்சரிக்கும் துப்பாக்கிச்சூடு என எதுவும் பின்பற்றப்படவில்லை.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

அதே நேரத்தில், பொதுமக்களின் கல் வீச்சினால் கடுமையான காயமடைந்த மணிகண்டன் ஒருவரைத்தவிர எந்த ஒரு போலீஸாருக்கும் மரண காயங்களோ, இயற்கை காயங்களோ ஏற்படவில்லை. காயமடைந்தகாகக்கூறப்படும் போலீஸாருக்கு சிறிய வீக்கம் மட்டுமே இருந்தன. சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகளை முறையாக ஒழுங்கமைப்பதிலும் கட்டளைகளை திறம்பட வழங்குவதிலும் காவல்துறை உயரதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

துப்பாகிச்சூட்டிற்கு உத்தரவிட்டதாகச் சொல்லப்படும் சேகர், கண்ணன், சந்திரன் ஆகிய மூன்று தாசில்தார்களின் முழு செயலற்ற தன்மை, சோம்பல், கடமை தவறுதல் ஆகியவையே கலவரத்திற்குக் காரணம். துப்பாக்கிச்சூடு நடத்திட 21வது பிரிவின் கீழ் உத்தரவுகளைப் பெற வேண்டும். ஆனால், அவர்கள் எந்த உத்தரவையும் பின்பற்றவில்லை. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், ``தமிழ்நாட்டில் இதுவரை நியமிக்கப்பட்ட ஆணையங்கள் கண் துடைப்பிற்காகவே அமைகப்பட்டன. அதன் விசாரணை அறிக்கைகளும் கிடப்பிலேயே போடப்பட்டன.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு தொடர்பான இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ என பயந்தோம். ஆனால், கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூட்டிற்கு காவல்துறையினரே காரணம் என உண்மை நிலையை குறிப்பிட்டதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட பரிந்துரை செய்துள்ளதை வரவேற்கிறோம். அந்தப் பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கடமை தவறிய காவல்துறையினர் மீதும், வருவாய்த்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அறிக்கை தகவல்கள் கசிந்தது தொடர்பாக ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகரை தொடர்பு கொண்டு பேசினோம், ``அறிக்கை தகவல்கள் கசிந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஆனால், ஆணையம் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. அதற்கு மேல் எங்களுக்கு எதுவும் தெரியாது” என்பதோடு முடித்துக்கொண்டார்.