``ஓ.பி.எஸ் என் பழைய நண்பர்; சசிகலாவின் முயற்சி வெற்றிபெற வேண்டும்!"- டி.டி.வி.தினகரன்

``பன்னீர்செல்வம் என்னுடைய பழைய நண்பர். அரசியல் ரீதியாக எங்களுக்குள் எந்த தொடர்புமில்லை." - டி.டி.வி.தினகரன்

Published:Updated:
டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன் ( ஈ.ஜெ.நந்தகுமார் )
0Comments
Share

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க-வில் நிலவும் பிரச்னை தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த தினகரன், ``இன்னொரு கட்சிப் பிரச்னையில் நான் தலையிட மாட்டேன். ஜனநாயக முறையில்தான் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம்.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

அங்கிருக்கும் உண்மையான தொண்டர்கள், அம்மாவுடைய தொண்டர்கள், தலைவருடைய தொண்டர்கள் மிச்ச மீதி இருந்தால், இதையெல்லாம் சகித்துக் கொண்டே இருக்காமல் எங்களுடன் வாருங்கள். இது அம்மாவுடைய இயக்கம் அப்படித்தான் நான் சொல்ல முடியும். அவர்கள் இரண்டு பேரும் பதவிச் சண்டை போடுவதில் நாங்கள் தலையிட முடியாது. இதனை தி.மு.க-தான் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும், இதைத்தான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

நான்கு வருடங்கள் பதவியிலிருந்த வரை சண்டை சச்சரவுகள் ஏதும் காட்டிக்கொள்ளாமல் இருந்தனர். இப்போது ஆட்சி போனதுக்குப் பிறகு மீண்டும் ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமை என மோதிக் கொள்கின்றனர். இது அவர்களின் தவறு. நாம் என்ன செய்ய முடியும். அவர்களுக்காக வருத்தம்தான் படமுடியும்" என்றார்.

அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துடனான தொடர்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``அவர் என்னுடைய பழைய நண்பர். அரசியல் ரீதியாக எங்களுக்குள் எந்த தொடர்புமில்லை" என்றவரிடம், இறுதியாக அ.தி.மு.க விவகாரத்தில், கட்சியை மீட்டெடுப்பேன் என சசிகலா கூறியது குறித்த கேள்விக்கு, ``அவர்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும். நான் வாழ்த்துகிறேன்" எனக் கூறினார்.