மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: ``பட்டமளிப்பு விழாவில் எல்.முருகன் பெயர்... நோக்கம் என்ன?!" - பொன்முடி

``தமிழ்நாடு அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன." - அமைச்சர் பொன்முடி

Published:Updated:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
0Comments
Share

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``தமிழ்நாடு அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகின்ற வேலையில் ஆளுநர் ஈடுபடுகின்றாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்திருக்கிறது. அரசியலை பல்கலைக்கழகத்தில் புகுத்துவதற்காக அவர் பட்டமளிப்பு விழாக்களை பயன்படுத்துகிறார் என்று நாங்கள் கருதுகிற காரணத்தினால் இந்த பட்டமளிப்பு விழாவை நான் புறக்கணிக்கிறேன். மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை. இந்திய நாட்டின் வரலாற்றை முதலில் ஆளுநர் படிக்க வேண்டும்.

பட்டமளிப்பு விழா அறிவிப்பு
பட்டமளிப்பு விழா அறிவிப்பு

வேந்தருக்குப் பிறகு இணை வேந்தர்தான் இருக்க வேண்டும். ஆனால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் கௌரவ விருந்தினர் என ஒன்றிய இணை அமைச்சர் பெயர் போடப்பட்டிருக்கிறது. பட்டமளிப்பு விழாவில் கெளரவ விருந்தினராக இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? பல்கலைக்கழக இணை வேந்தரான என்னை கலந்தோசிக்காமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார்'' என்று கூறினார்.