`நடக்கக் கூடாத நிகழ்வு நடந்திருக்கிறது’ - அதிமுக வெளியேற்றத்துக்கு துரைமுருகன் சொன்ன 3 காரணங்கள்!

``நீங்கள் உங்கள் தலைவியை எப்படி கவனித்துக்கொண்டீர்கள் என்பது தொடர்பாகக் கேள்விகள் எழலாம் என்பதால் அதற்கு பயந்து...” - துரைமுருகன்

Published:Updated:
துரைமுருகன்
துரைமுருகன்
0Comments
Share

சட்டமன்றக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று, அவையைப் புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் தரப்பு எம்.எல்.ஏ-க்கள், இன்று சட்டமன்றக் கூட்டம் கூடுவதற்கு முன்பே காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து, "எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு, ``சட்டப்பேரவையில் அது குறித்து விளக்கம் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனால் எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டம் ஆரம்பித்ததும், எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயகர், ``கேள்வி நேரம் முடிந்ததும் அது குறித்து முடிவெடுக்கலாம். முதலில் மக்கள் பிரச்னையைப் பார்க்கலாம்” என்றார். ஆனால் எடப்பாடி தரப்பினர் தொடந்து கோஷம் எழுப்பினர். இதனால், அப்பாவு, ``நீங்கள் கலகம் செய்யவே வந்திருப்பதுபோல் தெரிகிறது” எனக் கூறியதுடன் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ=க்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், அவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், சட்டமன்றத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "நடக்கக் கூடாத நிகழ்வு இப்போது நடந்திருக்கிறது. இன்று காலை எடப்பாடி தரப்பு சபாநாயகரைச் சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக பேசியபோது, சபையில் விளக்கமளிக்கிறேன் என சபாநாயகர் தெரிவித்தும், அவையில் கலகம் ஏற்படுத்த திட்டமிட்டதுபோல நடந்து வெளியேறியிருக்கிறார்கள். அதற்குச் சில காரணங்கள் உண்டு.

ஒபிஎஸ்
ஒபிஎஸ்

இன்று அவையில் இந்தி எதிர்ப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. இந்தித் திணிப்பை எதிர்ப்பது என்பது நமது ரத்தத்தில் ஊறியது. ஆனால், இந்தி தொடர்பாக விவாதம் நடத்தப்படுகிறது எனத் தெரிந்து, அதைப் புறக்கணிக்க எடப்பாடி தரப்பு வெளிநடப்பு செய்திருக்கிறது. இரண்டாவது காரணமாக, அதிமுக-வின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் அறிக்கை வெளிவந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தலைவியை எப்படி கவனித்துக்கொண்டீர்கள் என்பது தொடர்பாக கேள்விகள் எழலாம் என்பதால் அதற்கு பயந்து வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டிருக்கலாம்.

துரைமுருகன்
துரைமுருகன்

மேலும், குருவிகளைச் சுடுவதுபோல தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை கமிஷனின் அறிக்கை இன்று விவாதிக்கப்படவிருந்தது. இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டியது அதிமுக தரப்பு. அதற்கு பயந்துதான் எடப்பாடி தரப்பு வெளிநடப்பு செய்திருக்கிறது. எனவே, அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பரிந்துரை செய்தார்.

இதன் பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-க்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.