கரகாட்டக்காரன்: "இந்தப் படம் ஓடுமா?" சந்தேகத்துக்குப் பதிலடி கொடுத்த கங்கை அமரன் - ராமராஜன் கூட்டணி!

ராமராஜனின் மீள் வருகையையொட்டி அவர் நடிப்பில் ‘சூப்பர் ஹிட்’ திரைப்படமாக அமைந்த ‘கரகாட்டக்காரன்’ பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Published:Updated:
கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்
0Comments
Share
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘கரகாட்டக்காரன்’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ‘சாமானியன்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் ராமராஜன். இதற்கு முன்பு, 2012-ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘மேதை’, தோல்விப்படமாக அமைந்தது.

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ திரைப்படத்தில், சினிமா சான்ஸ் கேட்டு வரும் ஒரு கேரக்ட்டர், "நடிச்சா ஹீரோதான் சார்... நான் வெயிட் பண்றேன்” என்று மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் சொல்வார். ராமராஜனும் அது போலத்தான். ஏறத்தாழ இருபத்தியிரண்டு வருடங்கள் சினிமாவில் இடைவெளி ஏற்பட்டாலும் குணச்சித்திர பாத்திரங்களை ஏற்காமல் பிடிவாதமாக ‘நடிச்சா ஹீரோவா மட்டும்தான்’ என்று கெத்து காட்டுகிறார். ராமராஜனின் மீள் வருகையையொட்டி அவர் நடிப்பில் ‘சூப்பர் ஹிட்’ திரைப்படமாக அமைந்த ‘கரகாட்டக்காரன்’ பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
'சாமானியன்' படத்தில் ராமராஜன்
'சாமானியன்' படத்தில் ராமராஜன்

‘புஷ்பான்னா ப்ளவருன்னு நெனச்சியா... ஃபயருடா’ என்கிற பன்ச் வசனம் போல ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கே கடுமையான சவாலாக ராமராஜனின் படங்கள் அந்தக் காலத்திலிருந்தன; வசூலை வாரிக் குவித்தன. இந்த வெற்றி வரிசையின் உச்சம் என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தைச் சொல்லலாம். ஜூன் 1989-ல் வெளியான இந்தத் திரைப்படம், பல அரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. இதே காலகட்டத்தில்தான் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படமும் வெளியானது. அந்தத் திரைப்படத்தில் காலை மடித்துப் பல விதங்களில் சிரமப்பட்டு ‘அப்பு’ என்கிற பாத்திரத்தில் உயிரைக் கொடுத்து நடித்திருந்தார் கமல். ஆனால் ராமராஜனோ, கரகத்தைத் தலையில் சுமந்து ஆடுவது போலப் பாவனை செய்தார். அவ்வளவே! ஆனால் கமலின் பட வசூலையும் கரகாட்டக்காரன் அநாயசமாகத் தாண்டிச் சென்றதில் ஒரு சுவாரஸ்யமான முரணும் விதியும் இருக்கிறது.

கிராமத்து நாயகன் ராமராஜன்

பொதுவாக ராமராஜனின் பெரும்பாலான படங்கள் அனைத்துமே ஓர் எளிமையான டெம்ப்ளேட்டில் இருக்கும். கிராமத்துப் பின்னணியில் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், சோகம் என்று வழக்கமான கலவையில் இருக்கும். எம்.ஜி.ஆர் படங்களின் எளிய ஃபார்முலா இது. போதாக்குறைக்கு இளையராஜாவின் அற்புதமான பாடல்கள். போதாதா? ஜனரஞ்சக அம்சங்களைத் தாண்டி ராமராஜன் படங்களின் வெற்றிக்கு ராஜாவின் இசையும் ஒரு முக்கியமான காரணமாக இருந்ததை எவராலும் மறுக்க முடியாது.

ஆரம்பக் கட்டத்தில், சில சிறிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ராமராஜன் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். பிறகு அவரே ஹீரோவாக நடித்த சில திரைப்படங்கள் வெற்றி பெறத் துவங்கின. கங்கை அமரன் இயக்கத்தில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே... செண்பகமே’ போன்ற திரைப்படங்கள் பரவலான வெற்றியைப் பெற்றன. கிராமத்துப் பின்னணியில் இவர் நடித்த திரைப்படங்கள், பி மற்றும் சி சென்டர் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. இந்த வளர்ச்சியின் உச்சக்கட்டம் என்பது ‘கரகாட்டக்காரனில்’ நிகழ்ந்தது. இந்த ஏற்றம் பிறகு தாழ்ந்து ஒரு கட்டத்தில் காணாமல் போனது. சினிமாவில் கிடைத்த புகழின் மூலம் அரசியலில் புகுந்த ராமராஜன், மெல்ல உயர்ந்து லோக்சபா உறுப்பினரானார். இந்த வளர்ச்சியும் பிறகு தணிந்து மக்களின் பார்வைக்கே சிறிது காலம் தென்படாமல் இருந்தார். இப்போது ‘சாமானியனாக’ திரும்பியிருக்கிறார்.

கங்கை அமரன்
கங்கை அமரன்

“ஆமாங்க. தில்லானா மோகனாம்பாள்தான், கரகாட்டக்காரன்!"

‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தை இயக்கியவர் கங்கை அமரன். பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், கதாசிரியர், இயக்குநர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். பந்தா எதுவுமின்றி, பொதுவெளிகளில் எப்போதும் ஜாலியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விளையாட்டுப் பிம்பம் காரணமாகவே, இவரது திறமை சீரியசாக எடுத்துக் கொள்ளப்படவில்லையோ என்று தோன்றும். தான் பணியாற்றிய அனைத்துத் துறைகளிலும் முன்னனுபவம் இல்லாமல் குதித்து வெற்றி பெற்றவர். இந்த வெற்றிகள் வெறும் அதிர்ஷ்டத்தால் வந்தன என்று சொல்லிவிட முடியாது. அவரிடம் இந்தத் திறமைகள் தன்னியல்பாக வெளிப்பட்டதால்தான் வெற்றிகள் சாத்தியமாகின.

பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று தான் இறங்கிய களங்களில் எல்லாம் வெற்றி கண்ட கங்கை அமரனின் பயணம், டைரக்ஷன் துறையிலும் பிரகாசமாக அமைந்தது. ‘கோழி கூவுது’ முதல் பல வெற்றித் திரைப்படங்களின் இயக்குநராக இருந்தார். இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.

‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தின் அடிப்படையான கதை என்பது 1968-ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் அப்பட்டமான நகல் என்பது அனைவருக்குமே தெரியும். இது போன்ற விஷயங்களை ஒப்புக் கொள்வதில் கங்கை அமரன் அலட்டிக் கொண்டதேயில்லை. இவர் இசையமைத்த ‘மௌன கீதங்கள்’ திரைப்படத்தின் டைட்டில் கார்டை பார்த்தீர்கள் என்றால், இளையராஜா நிறைய மெட்டுக்களை உருவாக்கி வைப்பதைப் போலவும், கதவிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கங்கை அமரன், அவற்றை நைசாக எடுத்துக் கொள்வதைப் போலவும் கேலிச் சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய சுயபகடியை கங்கை அமரன் எப்போதுமே செய்வார். எனவே, “ஆமாம்... தில்லானா மோகனாம்பாள் கதையின் உல்டாதான் கரகாட்டக்காரன்" என்பதை நேர்காணல்களில் சொல்ல அவர் தயங்கியதில்லை. “இவங்களைப் பார்த்தா தில்லானா மோகனாம்பாள் படத்துல வர்ற சிவாஜி, பத்மினி மாதிரியே இருக்கு” என்கிற வசனம் கூட இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சியில் வரும். இதைப் போலவே, இதில் வரும் புகழ்பெற்ற ‘வாழைப்பழக் காமெடியும்’ ஒரு மலையாளப் படத்திலிருந்து உருவியதே!

கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்

காலத்தால் அழியாத ‘சிக்கல்’ சண்முகசுந்தரமும் மோகனாவும்

ஒரு நாதஸ்வரக் கலைஞருக்கும், ஒரு நடனக் கலைஞருக்கும் இடையில் கலைத்திறமை சார்ந்து உருவாகும் போட்டியும் அதைத் தொடரும் காதலும் சிக்கல்களும்தான் ‘தில்லானா மோகனாம்பாள்’ கதை. இதை அப்படியே மாற்றி இரு கரகாட்டக் கலைஞர்களுக்கிடையே நடைபெறுவதாக மாற்றினார் கங்கை அமரன். ஒரிஜினலில் டி.எஸ்.பாலையா செய்த பாத்திரத்தை கவுண்டமணி ஏற்றுக் கொண்டு தன்னுடைய ஸ்டைலில் அதைக் கையாண்டார். கதையின் அடிப்படை நகல்தான் என்றாலும் இதை ஒரு பிரத்யேகமான படமாக மாற்றுவதில் கங்கை அமரனின் இயல்பான திறமை பளிச்சிட்டது.

தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா படி, ஹீரோவிற்கும் ஹீரோயினுக்கும் முதலில் ஏற்படும் மோதல், போட்டி, பிறகு உருவாகும் காதல், பிரிவுத் துயரம், பண்ணையார் வில்லன், சண்டைக்காட்சிகள், அம்மா சென்டிமென்ட் என்று பலவற்றைக் கலந்து உணர்ச்சிகரமான கிளைமாக்ஸை அமைத்து பிறகு மங்களகரமாக ‘சுபம்’ போட்டதில் ‘கரகாட்டக்காரன்’ வணிகரீதியாகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.

‘கண்ணழகி’ கனகா அறிமுகமான படம்

சேந்தம்பட்டி முத்தையனாக ஹீரோ பாத்திரத்தில் நடித்திருந்தார் ராமராஜன். அவருக்கு என்ன வருமோ, அந்தப் பாணியில் நடித்திருந்தார். டூயட் காட்சிகளில் ராமராஜனைக் கவனித்தால் எம்.ஜி.ஆரின் உடல்மொழியின் சாயல் சிறிது தெரியும். இதிலும் அப்படியே. ‘இந்த மான்’ பாடலில் இதைக் கவனிக்கலாம். மற்றபடி காதல், சோகம், வீரம் என்று ராமராஜனின் வழக்கமான டெம்ப்ளேட் நடிப்பு மட்டுமே இருந்தது. நாயகியான கனகா இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். இவர் முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் என்பது நிறையப் பேருக்குத் தெரியும். ‘கண்ணழகி’ என்கிற அடைமொழியுடன் பிறகு புகழப்பட்டார். ஹீரோவைக் கண்டவுடன் நாணிக் கோணி தலையை நிலத்தில் புதைப்பது, போட்டி என்று வரும் போது கண்களை உருட்டி, தலையை வெட்டி வசனம் பேசுவது என்று ஒரு வழக்கமான நாயகியின் வேலையைச் செய்தார்.

கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்

கனகாவின் தந்தையாக நடித்தவர் சண்முகசுந்தரம். இவர் பழம்பெரும் நடிகர். தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் நடிகர்களில் ஒருவர். மேடை நாடகங்களில் இவரது நடிப்புத் திறமையைப் பார்த்து வியந்த சிவாஜி கணேசன், ‘ரத்த திலகம்’ என்னும் படத்தில் அறிமுகப்படுத்தினார். ‘கர்ணன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் சண்முகசுந்தரம் நடித்திருந்தாலும் 'கரகாட்டக்காரன்' இவருக்கு பிரத்யேகமான புகழைத் தேடித் தந்தது. குறிப்பாக இளைய தலைமுறை இவரை அறிந்து கொண்டது இந்தப் படத்தின் மூலமாகத்தான். “என்னை எப்படில்லாம் அடிச்சாங்க தெரியுமாக்கா” என்று காந்திமதியிடம் தனது பரிதாபக் கதையை உருக்கமாக விளக்குவார். “நீங்க நல்லா ஆடினீங்க தம்பி” என்று ராமராஜனைப் பாராட்டும் போது அந்த வசனத்தில் அசலான உணர்ச்சியும் பாவமும் வெளிப்பட்டிருக்கும். மீம்ஸ் உலகமும் இவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது. பிறகு வெங்கட் பிரபுவின் சில திரைப்படங்களில் வந்து போனார்.

ராமராஜனின் அம்மாவாக நடித்தவர் காந்திமதி. தனது வழக்கமான கொனஷ்டைகளை கைவிட்டு விட்டு ‘அம்மா’ பாத்திரத்திற்கே உரிய வசனங்களை உணர்ச்சிகரமாகப் பேசி நடித்திருந்தது சிறப்பு. கசாப்புக் கடை வைத்திருக்கும் வில்லனாக நடித்தவர் ராஜா பகதூர். இவர், அந்தக் கால சூப்பர் ஸ்டார் நடிகரான பி.யூ.சின்னப்பாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமராஜனின் குழுவில் தவில் கலைஞராக நடித்தவர் ‘பக்கிரிசாமி' என்கிற பெயர் கொண்ட பழைய நடிகர். ‘அடுத்த வீட்டுப் பெண்’ முதற்கொண்டு பழைய படங்களில் நிறைய நடித்திருக்கிறார். இதைப் போலவே பெரியகருப்புத் தேவரும் இசைக்குழுவில் ஒருவராக வந்திருப்பார். வில்லனாக நடித்தவர் சந்தானபாரதி. இவருக்கு டப்பிங் குரல் தந்திருப்பவர் நகைச்சுவை நடிகர் காளிதாஸ்.

‘நாதஸ் திருந்திட்டானாம்... யார் சொன்னது... நாதஸ்தான்...’

இளையராஜாவின் இசைக்கு அடுத்தபடியாக ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைதான். தனது டைமிங்கால் ஒவ்வொரு காட்சியையும் சிரிப்பு பட்டாசாக மாற்றியிருப்பார் கவுண்டமணி. ஒரு சாதாரண நகைச்சுவையைக் கூட சிறப்பாகப் பயணிக்க வைத்தால் அது மறக்க முடியாத காட்சியாக மாறிவிடும். இந்தப் படத்தில் வரும் ‘சொப்பன சுந்தரி’ மற்றும் ‘வாழைப்பழம்’ ஆகிய இரண்டு காட்சிகளை மட்டும் உதாரணத்திற்குப் பாருங்கள். ஒரு சஸ்பென்ஸ் வைத்து, மெல்ல மெல்ல வளர்த்து இறுதியில் முடிக்கும் போது நமக்கு அடக்க முடியாத சிரிப்பு வரும்.
கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்

“அது ஏண்டா என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்ட?” என்று செந்திலை அடித்துக் கொண்டே வருவார் கவுண்டமணி. மற்றவர்கள் காரணம் புரியாமல் திகைப்பார்கள். பார்வையாளர்களாகிய நாமும்தான். ஆனால் ஒரு கட்டத்தில் செந்தில் கேட்ட கேள்வி என்னவென்று வெளிப்படும் போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. “நான் என்ன அந்த வேலையா பார்த்துட்டு இருந்தேன்?” என்று கவுண்டமணி இன்னமும் இந்தக் காமெடியை நீட்டிச் செல்லும் போது தரையில் உருண்டு சிரிக்க வேண்டியிருக்கும்.

வாழைப்பழக் காமெடியும் இதே போல்தான். மலையாளப் படத்தில் சாதாரணமாகக் கடந்து போன இந்தக் காட்சியை, இந்த நகைச்சுவை ஜோடி சாகாவரம் பெற்ற காட்சியாக தமிழில் மாற்றியது. செந்தில் – கவுண்டமணி கூட்டணியில் உருவான நூறாவது திரைப்படம் என்கிற பெருமை ‘கரகாட்டக்காரனுக்கு’ உண்டு. கவுண்டமணியின் டைமிங்கிற்கு செந்தில் ஈடுகொடுத்ததால்தான் இந்த நகைச்சுவையைக் கூடுதலாக ரசிக்க முடிந்தது. “என்னை பொன்னம்பலம் பார்ட்டில கூப்ட்டாக... என் கெரகம்...” என்று கீச்சுக்குரலில் இழுத்து இழுத்துப் பேசிய கோவை சரளாவும் இந்த நகைச்சுவை மிளிர்வதற்குக் காரணமாக இருந்தார். (தில்லானா மோகனாம்பாளில் மனோரமா நடித்த ‘ஜில் ஜில்' ரமாமணியை நினைவுபடுத்துவது போல இந்தப் பாத்திரம் இருந்தது).

‘மாங்குயிலே... பூங்குயிலே...' பட்டி தொட்டியெங்கும் ஒலித்த கிராமிய இசை

இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் அடைந்த பிரமாண்டமான வெற்றி நமக்குத் தெரியும். ஆனால் இதன் பாடல்கள் உருவான பின்னணியை அறியும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது. இளையராஜா போகிற போக்கில் இடது கையால் மெட்டுக்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இடது கையால் போட்டுத் தந்த மெட்டுக்களே இத்தனை இனிமையாக இருந்தது என்றால்?!

தம்பி என்பதால் தனியான கால்ஷீட் எல்லாம் கங்கை அமரன் வாங்கவில்லை. கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் அண்ணனிடம் தொடர்ந்து நினைவுபடுத்தி, இம்சை செய்து ஒவ்வொரு மெட்டாக வாங்கினார். இத்தனைக்கும் ‘கதையின்’ அவுட்லைனைக் கூட அவர் ராஜாவிடம் சொல்லவில்லை. சூழலை மட்டும் அவ்வப்போது சொன்னதற்கே இத்தனை அருமையான பாடல்களை வழங்கியிருக்கிறார் ராஜா. இதைப் போலவே கரகாட்டக் கோஷ்டி காரைத் தள்ளிக் கொண்டு அறிமுகமாகும் காட்சியில் ஒலிக்கும் நையாண்டியான இசையும் புகழ் பெற்றதாக மாறியது. இப்படிப் பல காட்சிகளுக்கு வழக்கம் போல் தனது அற்புதமான பின்னணி இசையின் மூலம் உயிர் தந்தார் ராஜா.

கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்

இந்த ஆல்பத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கின்றன. ‘நாட்டுப்புற இசை’யை சினிமாவிற்கு ஏற்ற மாதிரி வழங்குவதில் ராஜாவிற்கு நிகரில்லை என்பதை இதில் வரும் பாடல்கள் மெய்ப்பித்தன. பட்டி, தொட்டியெங்கும் ஒலித்த ‘மாங்குயிலே... பூங்குயிலே’ பாடல் இதற்கு நல்ல உதாரணம். சோலோ, டூயட் என்று இரண்டு வொ்ஷன்களில் வரும் இந்தப் பாடல், ஒரே மெட்டாக இருந்தாலும் இசைக் கோர்வைகள், பாவம் என்று இரண்டு வடிவங்களிலும் எத்தனை வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்தால் பிரமிப்பாக இருக்கிறது. தனியாகவும், ஜானகியோடு இணைந்து பாடியும் அசத்தியிருந்தார் எஸ்.பி.பி.

இதற்கு அடுத்தபடியாக ‘இந்த மான்... உந்தன் சொந்த மான்’ என்கிற அற்புதமான மெலடியைச் சொல்ல வேண்டும். ராஜாவின் குரல் இனிமையாக ஒலிக்கும் டூயட்களில் இதுவும் ஒன்று. இணைந்து பாடி சிறப்பாக்கியிருந்தார் சித்ரா. இந்தப் பாடலை எந்தக் கோயிலின் பின்னணியில் படமாக்கியிருப்பார்கள் என்று தேடுமளவிற்கு இதன் லொகேஷன் அருமையாக அமைந்திருந்தது. ‘குடகு மலை காற்றில் வரும்’ என்கிற உருக்கமான பாடலை மனோவும் சித்ராவும் அற்புதமாகப் பாடியிருந்தார்கள். ‘நந்தவனத்தில்’ என்கிற துண்டுப் பாடலை நையாண்டியான தொனியில் பாடியிருந்தவர் கங்கை அமரன். கிராமிய இசை சிறப்பாக ஒலிக்கும் ‘முந்தி முந்தி’ பாடலை சிறப்பாகப் பாடியிருந்தார் மனோ.

இந்த ஆல்பத்தின் இரண்டு பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இரண்டிலுமே மலேசியா வாசுதேவனின் பங்களிப்பு அற்புதமாக இருந்தது. “ஊரு விட்டு ஊரு வந்து" பாடலை மேம்போக்காகக் கேட்கும் போது ஹீரோவைக் கிண்டல் செய்யும் சாதாரணப் பாடலாகத் தோன்றினாலும் இதனுள் ராஜா பொதிந்து வைத்திருக்கும் நகாசு வேலைகள் பிரமிக்க வைக்கின்றன. பின்னணியில் கோரஸாக ஒலிக்கும் ‘பபப்பா......’ என்பது பாடலின் சுவையைக் கூட்டியது. ‘மாரியம்மா... மாரியம்மா...’ என்பது க்ளைமாக்ஸில் ஆவேசமாக ஒலிக்கும் பாடல். இதன் உணர்ச்சிகரம் அழுத்தமாக வெளிப்படுமளவிற்குச் சிறப்பாகப் படமாக்கியிருந்தார்கள். படம் வந்த காலகட்டத்தில், இந்தப் பாடல் காட்சியின் போது பல திரையரங்குகளில் பெண்களுக்கு அருள் வந்து ஆடியதாக ஒரு தகவல் உண்டு. இது படத்திற்கு விளம்பரமாகவும் அமைந்தது.

டைட்டில் பாடலை ராஜா பாடினால் அந்தத் திரைப்படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்கிற ஒரு சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக இருந்தது. அதைக் கிண்டலடிக்கும் வகையில் ‘பாட்டாலே புத்தி சொன்னார்’ பாடலை ஜாலியாகப் பாடியிருந்தார் ராஜா. இந்த டைட்டில் பாடல் காட்சியில் படத்தில் பணிபுரிந்தவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார் கங்கை அமரன். இந்தப் பாடலை ராஜா எழுதியிருந்தார். இதர பாடல்களை எழுதியவர் கங்கை அமரன். ஆனால் ஒன்றை இங்குக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அது சென்டிமென்ட்டோ, இல்லையோ, ராஜாவின் குரலோடு ஒரு கிராமத்துத் திரைப்படம் துவங்கும் போது அந்த உற்சாகம் பார்வையாளனுக்கு ஆரம்பத்திலேயே கிடைத்து விடுகிறது. ‘அம்மன் கோவில் கிழக்காலே...’ என்று ராஜாவின் குரலில் ஒலிக்கும், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தின் டைட்டில் பாடலை நினைவுகூர்ந்து பாருங்கள்.

கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்

கரகாட்டக் கலையின் சிறப்பு சினிமாவில் வெளிப்பட்டதா?

கரகாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பர்யமான ஆட்டங்களில் ஒன்று. அலங்கரிக்கப்பட்ட கரகத்தைத் தலையில் வைத்தபடி, அது கீழே விழுந்து விடாமல் சுற்றிச் சுற்றி ஆடுவதற்குக் கடினமான பயிற்சியும் உழைப்பும் வேண்டும். (சினிமாக்காட்சியில் நடிகர்களின் தலையில் கிளிப் வைத்து கரகத்தைப் பொருத்தியிருந்தார்கள்). கரகத்தின் உள்ளே அதன் எடைக்கு நிகரான மண்ணும் கூடவே அரிசியும் நாணயமும் வைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். விதைகளை உள்ளே வைத்து வழிபடும் கலாசாரமும் இருக்கிறது. பக்தி கலந்து கோயில்களில் ஆடுவது, பொதுமக்களின் முன்னே ஆடுவது என்று கரகாட்டத்தில் இரண்டு வகையான ஆட்ட வகைகள் இருக்கின்றன.

இந்தப் பாரம்பர்யமான ஆட்டத்தின் சிறப்பும் பெருமையும் மெல்ல மறைந்து ஒரு கட்டத்தில் இது காபரே நடனம் போன்று பாலியல் சமிக்ஞைகள், ஆபாச வசனங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும் மலினமான விஷயமாகி விட்டது. அசலான கரகாட்டத்திற்கு ஆதரவு இல்லாததும் ஒரு காரணம். ‘கிராமியக் கலைஞர்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்’ என்று கரகாட்டக்காரன் படத்தின் டைட்டில் கார்டு சொன்னாலும், "இந்தப் படத்தில் அசலான கலையின் தன்மையோ அதன் சிறப்போ பதிவாகவில்லை" என்று கொதிக்கிறார் ஒரு கரகாட்டக் கலைஞர். 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலம் அழிந்து கொண்டிருக்கும் ஒரு கலை பிரபலமானதோ, இல்லையோ, பழைய மாடல் காரான ‘செவர்லெட் இம்பாலா’விற்கு தற்காலிக புகழ் நிறையவே கிடைத்தது. கூடவே சொப்பனசுந்தரிக்கும்.

சில திரைப்படங்கள் எதனால் வணிக ரீதியாகப் பிரமாண்ட வெற்றியைப் பெற்றன, பேய் ஓட்டம் ஓடின என்பது தொடர்பான காரணங்களை யூகிக்கவே முடியாது. அந்த அளவிற்கு சாதனையோட்டமாக ஓடி அனைவரையும் திகைக்க வைத்து விடும். இதன் சரியான உதாரணமாகக் கரகாட்டக்காரனைச் சொல்லலாம். (சமீபத்திய உதாரணம் ‘விக்ரம்').

கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிகபட்ச லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்த திரைப்படம் இது. "இந்தப் படம் ஓடுமா?” என்கிற சந்தேகத்தை விநியோகஸ்தர்களுக்கு ஆரம்பத்தில் எழுப்பி, பிறகு எவராலும் தடுத்து நிறுத்த முடியாத பிரமாண்டமான வணிக வெற்றியை அடைந்த ‘கரகாட்டக்காரன்’ அதன் ஜனரஞ்சகமான அம்சங்களுக்காக இன்று பார்த்தாலும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறது.