``2, 3 மாதங்களில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் முடிவாகிவிடும், ஆனால்..!" - நிதிஷ் சொல்வதென்ன?

``இப்போதிருக்கும் பா.ஜ.க., வாஜ்பாய் காலத்திலிருந்த பா.ஜ.க அல்ல." - நிதிஷ் குமார்

Published:Updated:
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
0Comments
Share

பீகாரில் பா.ஜ.க-வுடனான கூட்டணி அரசை முறித்துக்கொண்டு ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் `மகாபந்தன்' கூட்டணியுடன் சேர்ந்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரான பிறகு, 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இவரே இருப்பார் எனச் செய்திகள் உலவின. இருப்பினும் ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையாகவே, `எனக்கு அத்தகைய எண்ணமில்லை, அதில் விருப்பமுமில்லை' என நிதிஷ் குமார் தெரிவித்துவந்தார்.

நிதிஷ் குமார் - மோடி
நிதிஷ் குமார் - மோடி

இருந்தும், இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய டெல்லி பயணத்தின்போது, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்ச்சியாக நேரில் சந்தித்துவந்தார். இதற்கும், பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே இந்தச் சந்திப்பு என நிதிஷ் குமார் கூறினார்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

இந்த நிலையில் நேற்று பாட்னா திரும்பிய நிதிஷ் குமார், ``எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைக்கும் பணியைத்தான் நான் செய்துவருகிறேன். அது தொடர்பான என்னுடைய முயற்சிகள் அனைத்தும் தொடரும். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைவார்கள் என்றும், பா.ஜ.க-வுக்கு எதிராகப் போராட அவர்கள் பங்களிப்பார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதும் முடிவாகிவிடும். ஆனால், தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நான் இல்லை" என்று தெரிவித்தார்.

மேலும் பா.ஜ.க குறித்துப் பேசிய நிதிஷ் குமார், ``பா.ஜ.க-வின் கொள்கைகள் அனைத்தும் மாறிவிட்டன. மேலும், இப்போதிருக்கும் பா.ஜ.க., வாஜ்பாய் காலத்திலிருந்த பா.ஜ.க-வும் அல்ல" என்று சாடினார்.