அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு... வாகனங்கள் உடைப்பு! - பதற்றத்தில் கோவை

கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, கல் வீச்சு போன்ற சம்பவங்களால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Published:Updated:
பதற்றத்தில் கோவை
பதற்றத்தில் கோவை
0Comments
Share

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி, அவரைக் கைதுசெய்தனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம்மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடைமீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மேலும், இரண்டு அரசுப் பேருந்துகள்மீது கல் வீசி சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை பொள்ளாச்சி பா.ஜ.க பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசியிருக்கின்றனர்.

அவரது காரையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். மேலும், இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ஆட்டோவையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து குமரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்ற பா.ஜ.க பிரமுகர் காரையும் உடைத்து சேதப்படுத்தினர்.

இதையடுத்து 100 சாலையில் அமைந்திருக்கும் பா.ஜ.க ரத்தினபுரி மண்டலத் தலைவர் மோகன்குமார் அலுவலகத்திலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர். நேற்று நள்ளிரவு மேட்டுப்பாளையம் பகுதியில் மதன்குமார், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான பிளைவுட் கடைகளின் ஜன்னல்களை உடைத்து, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால், கோவை மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கோவை மாநகரில் மட்டும் நான்கு கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் (ஒரு படைக்கு 100 பேர்)  பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

வாகனத் தணிக்கை
வாகனத் தணிக்கை

முக்கிய இடங்களில் தொடர்ந்து வாகனத் தணிக்கை நடந்து வருகிறது. அரசியல் கட்சி அலுவலகங்கள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.