எடப்பாடிக்கு எதிராக இறுகும் டெண்டர் வழக்கு... அடுத்தகட்டம் என்ன?!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பானப் புகாரின்மீது, லஞ்சஒழிப்புத்துறை கமிஷனர் மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான விவகாரத்தில், தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு!
0Comments
Share

2017 முதல் 2021 வரை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்நாடு முதல்வராகவும் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அச்சமயம், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையும் அவரின் கட்டுப்பாடில்தான் இருந்தது. அதனைப் பயன்படுத்தி, நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கே கொடுத்ததாகவும், டெண்டர்களில் 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திப்பதாகவும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இப்புகாரை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அந்த உத்தரவினை எதிர்த்து எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடுப் புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தது. மேலும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு செப்டம்பர் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியிருப்பதால், அவர்களே விசாரணையைத் தொடரட்டும்’ என்றபடி மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிபதியிடம் அனுமதி கோரினார். அதேநேரம், எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கவுதம், இதுகுறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், ``ஏற்கனவே இந்தப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியிருக்கிறது. அதன் அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை, மேல் நடவடிக்கையைத் தொடர்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனர் முடிவெடுப்பார்’ என்று தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், `லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்காத வகையில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கைவிடுத்தார். அதற்கு அரசுத் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரயன், ‘ஸ்டேட்டஸ்-கோ’ தொடர வேண்டும் என்ற எடப்பாடி தரப்பின் கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

வழக்கின் நிலைகுறித்து அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, வெளிப்படையாகப் பேசுவதற்கு மறுத்துவிட்டனர். பெயர் வெளியிட வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் பேசியவர்கள், ``அது ஒரு வழக்கே கிடையாது, அப்படியொரு டெண்டரே நடக்கவில்லை. அதிக தொகை கொடுத்ததாக ஒரு புகார் சொல்கிறார்கள், அந்தத் தொகையையே தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்னர், இவர்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். எடப்பாடிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவே தி.மு.க இவ்வழக்கைத் தாக்கல் செய்தது. அவ்வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதல்கட்ட விசாரணை தான் நடத்த உத்தரவிட்டார்.

அதிமுக
அதிமுக

முதல்கட்ட விசாரணையின் அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி, ஓப்பன் கோர்ட்டில் அறிக்கையைப் பற்றிக் கேட்டார். அதற்கு அப்போதைய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எடப்பாடி குற்றமற்றவர் என்றனர். ‘அ.தி.மு.க ஆட்சி நடப்பதால் நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள்’ என்று கூறி, வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டார் நீதிபதி.

இயற்கை நீதியின்படி, சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்புவது குறித்து எடப்பாடி தரப்பின் வாதத்தையும் கேட்டிருக்க வேண்டும். அதன்பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, ‘முதல்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை முடித்திருக்கும்போது ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது?’ என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்துவிட்டது உச்ச நீதிமன்றம். அங்கேயே வழக்கை முடித்திருக்கலாம், ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல்கட்ட விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருப்பதால், வழக்கு இங்கேயே விசாரிக்கப் பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செப்டம்பர் 14-ம் தேதி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முதலில் ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கை வாபஸ் வாங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள். அரசுத் தரப்பில் விஜிலன்ஸ் கமிஷனர் பார்வையில் இருப்பதாகச் சொல்லி மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரினர். விஜிலன்ஸ் கமிஷனரிடம் புகார் சென்று, அவர் ஒப்புதல் கொடுத்த பின்னர்தான் வழக்கே பதிவுசெய்ய முடியும். இங்கு தலைகீழாக நடந்திருக்கிறது. ஜூனியர் வக்கீல் சென்றதால், அதுவரை ஸ்டேட்டஸ்-கோ தொடர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். மற்றபடி, வழக்குக்கு எடப்பாடி தரப்பு தடை கோரவே இல்லை. விஜிலன்ஸ் வழக்குகளில் தடை கேட்கவும் முடியாது. இதுதான் இவ்வழக்கில் நடந்தது!” என்று முடித்தனர்.

திமுக- அண்ணா அறிவாலயம்
திமுக- அண்ணா அறிவாலயம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், எடப்பாடி மீதான வழக்கு இறுகிவருகிறது. இதன் அடுத்தக்கட்டம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க வழக்கறிஞர் ஒருவர், ``எடப்பாடிக்கு எதிரான 4,800 கோடி ரூபாய் அளவுக்கான நெடுஞ்சாலை டெண்டர் புகாரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்கிற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்துசெய்ததுமே எடப்பாடி தரப்பில் கொண்டாட்டம் மலர்ந்தது. ஆனால், தற்போதும் வழக்கு விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கிறது, நீதிமன்றம்தான் மாறியிருக்கிறதே தவிர, வழக்கு நீர்த்துப்போகவில்லை. சி.பி.ஐ விசாரித்தால்கூட ஓரளவுக்கு எடப்பாடிக்கு ஃப்ரீ ஹேண்ட் கிடைத்திருக்கும். டெல்லி சென்று தப்பித்துக்கொள்ள முகாந்திரம் இருந்திருக்கும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்கட்டும் என்று சொல்லியிருப்பதுதான் அவருக்கு மேலும் சிக்கலாக மாறப்போகிறது. ஏற்கெனவே, எடப்பாடியைக் கார்னர் செய்ய கொடநாடு வழக்கு இருக்கிறது. தற்போது இந்த வழக்கும் சிக்கியிருப்பதால் முழுமையாக தீர விசாரிக்கப்பட்டு, முறைகேடுகள் செய்தது உண்மையென்று வெளிக்கொண்டுவரப்படும்!” என்றார்.