``கன்னியாகுமரிக்கு தூக்கியடிங்க..!" - துரைமுருகன் பேச்சு... கொதிக்கும் அரசு மருத்துவர்கள் சங்கம்

``மருத்துவமனைக் கட்டடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது." - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
துரைமுருகன், மா.சுப்பிரமணியன்
துரைமுருகன், மா.சுப்பிரமணியன்
0Comments
Share

முதல்வர் என்னதான் அதட்டிவைத்தாலும், அறிவுரை சொன்னாலும் அவரது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் மூத்த அமைச்சரும், தி.மு.க பொதுச்செயலாளருமான துரைமுருகன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் சொந்தத் தொகுதியான காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்னையில் செயல்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துரைமுருகன் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டு ஆய்வுசெய்தனர்.

ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் இருவரும் மருத்துவர்களையும், மருத்துவ அதிகாரிகளையும் கடிந்துகொண்டனர். இதில், அமைச்சர் துரைமுருகன் ஒருபடி மேலே சென்று சுகாதாரப் பணிகள் இயக்குநரைப் பார்த்து, ``ஆமா நீ யாரு... உங்களை நான் பார்த்ததே இல்லையே... இப்போதுதான் பார்க்கிறேன்" என்று கேள்வி கேட்க, ``நான்தான் சுகாதாரப் பணிகள் இயக்குநர்" என்று அவர் பதிலளிக்க, ``உங்களையெல்லாம் நான் பார்த்ததே இல்லையே... இவ்வளவு நாளா நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க?" என்று கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து பணியில் கவனம் செலுத்தாத வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்களைக் கடிந்துகொண்ட துரைமுருகன், ``நீங்க எல்லாம் எந்த ஊரு, முதல்ல இவங்களைப் பணியிடை நீக்கம் செய்யுங்க. அப்படி இல்லைன்னா கன்னியாகுமரிக்கு தூக்கியடிங்க" என்று ஆவேசமாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முறையிட்டார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

அதன் பின்னர் பணி மாறுதல் செய்யப் பரிந்துரைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், ``மருத்துவர்கள் உள்ளூரிலேயே இருப்பதால் சரியாகச் செயல்படவில்லை. அதனால், பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 38 மாவட்டங்களிலும் அரசு மருந்துக் கிடங்குகளில் மருந்துகள் உள்ளன. ஆனால், மருத்துவர்கள் முறையாக மருந்துகளைப் பெறாமல் இருப்பதால் தட்டுப்பாடு இருப்பதுபோல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இவ்வாறாக அமைச்சர்கள் இருவர் மருத்துவர்களிடம் நடந்துகொண்ட விவகாரம் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வேலூர் மாவட்டம், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டடம் பாழடைந்திருக்கிறது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இது ஏற்க முடியாதது. தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் உள்ளன.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தேவையான பாம்புக்கடி மருந்து அரசிடமிருந்து வரவில்லை என்று மருத்துவர்கள் அமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனர். இதில் மருத்துவர்களின் தவறு எதுவும் இல்லை. அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளைக் கோருவதைத் தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக அவர்களை தண்டிப்பது அநீதி! மருத்துவமனைக் கட்டடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையும் பொறுப்புணர்வும் பலமுறை நிரூபிக்கப்பட்டவை. எனவே, அரசு மருத்துவர்கள் செய்யாத தவற்றுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அரசு மருத்துவர்கள் போராட்டம்
அரசு மருத்துவர்கள் போராட்டம்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``வேலூர் சுகாதார மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலரையும், மருத்துவ அலுவலரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தனது வருத்தத்தையும் எதிர்ப்பையும் பதிவுசெய்கிறது. எந்தவித விசாரணையும் இன்றி மருத்துவர்களை இடமாற்றம் செய்திருப்பது ஒரு தவறான நடவடிக்கை. அண்மைக்காலமாக சுகாதாரத்துறையில் நடந்துவரும் நிர்வாகக் குளறுபடிகள், எந்தவித வரைமுறையுமின்றி துக்ளக் தர்பார்போல நடைபெற்றுவருகின்றன. இந்த இடமாற்ற சம்பவத்தில் முக்கிய உண்மைகளைத் தெரியப்படுத்துகிறோம்.

மேம்படுத்தப்பட்ட பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து மருத்துவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இருப்பினும் மூன்று மருத்துவர்களுடன் சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது. அங்குள்ள கட்டடங்கள் 50 வருடங்களுக்கு மேலான கட்டடங்கள். அந்தக் கட்டடங்களை புனரமைப்பதற்காகவும் புதுக் கட்டடங்கள் வேண்டியும் பலமுறை வட்டார மருத்துவ அலுவலரால் துணை இயக்குநருக்கும், பொதுப்பணித்துறைக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. தற்போதுகூட அங்கு பொதுப்பணித்துறை மூலமாக புனரமைப்பு பணி நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கட்டடங்கள் பழுதடைந்திருப்பதற்காக மருத்துவ அலுவலர்களை இடமாற்றம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

அங்கு எக்ஸ்ரே உபகரணம் இருந்தாலும், அதை நிறுவுவதற்கு ஏதுவான கட்டடம் இல்லாததால் அதை உபயோகத்துக்குக் கொண்டு வர முடியவில்லை. மேலும் எக்ஸ்ரே உபகரணம் நிறுவுவதற்கு முறையான கட்டடம் வேண்டி வட்டார மருத்துவ அலுவலரால் துணை இயக்குநருக்கும், பொதுப்பணித்துறைக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

பாம்புக்கடிக்கான மருந்து அங்கு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் ஸ்டாக் இல்லை என்பதுதான் உண்மை. பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருக்கும் கிராமத்திலேயே தங்கி 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரிந்துவருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய அரசு நிர்வாகமே கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை மக்கள் முன் பலிகடாவாக ஆக்கி தங்கள் தவறுகளை மறைக்க முயல்கிறது. மேற்கூறிய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பணிப் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

மாறாக, அரசுப் பணியாளர்களை காட்டிக்கொடுப்பது என்ற நிலை தொடருமாயின் அது அரசுக்கே விபரீதமாக முடியும். இந்த உண்மைகளை மருத்துவத்துறை அமைச்சர் உடனடியாக விசாரித்தறிந்து பணியிடமாற்ற உத்தரவுகளை உடனடியாகக் கைவிட வேண்டும். அரசு மருத்துவ அலுவலர் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்தின் ஒரு முக்கிய அங்கம். அவர்களை மூத்த அமைச்சர் கண்ணியக்குறைவாக நடத்துவது மொத்த அரசுப் பணியாளர்களையுமே நிலைகுலையச் செய்து ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் பாதிக்கச் செய்துவிடும்" என்று குறிப்பிட்டுள்ளது.

துரைமுருகன், மா.சுப்பிரமணியன்
துரைமுருகன், மா.சுப்பிரமணியன்

மேலும், “ஆய்வில் மூத்த அமைச்சரான துரைமுருகன் ஒரு பெண் மருத்துவரை பொதுவெளியில், ஊடகங்கள் முன்னிலையில் ஒருமையில் பேசி, கன்னியாகுமரிக்கு மாற்றக் கூறுவது கண்டனத்துக்குரியது. பழுத்த அரசியல்வாதியான அவருக்கு அரசு ஊழியர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்தும், ஜனநாயக முறையிலான நிர்வாகம் குறித்தும் வகுப்பெடுக்க நேர்வது வருத்தத்துக்குரியது” என்று தெரிவித்திருக்கிறார்கள் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர்.

மேலும், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ASV, X ray machines, அதற்கான உபகரணங்களை வழங்கவேண்டியது TNMSC-ன் பணி. அதன் இருப்பை உறுதி செய்வது துணை இயக்குநரின் பணி. TNMSC முழுமையாகச் செயலிழந்திருப்பதற்குக் காரணமானவர்களை அமைச்சர் பணிமாற்றம் செய்து நடவடிக்கை எடுப்பதுதான் உரிய நடவடிக்கை. PHC கட்டடங்களின் தரத்தை பரிசோதித்து, புதிய கட்டடங்களை எழுப்புவது பொதுப்பணித்துறை மற்றும் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளான MP, MLA-க்களின் பணி. அந்தப் பொறுப்புக்கு உரியவர்களைக் கேட்காமல்,  BMO-வை மாற்றினால் BMO மட்டுமே மாறுவார். வேறு எதுவும் மாறாது என்பதுதான் உண்மை நிலவரம். ஆகவே, இவ்வாறு ஊடக கேமராக்களுடன் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை கைவிட்டு TNMSC மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரி உரிய மருந்துகள், உபகரணங்களைப் பெற்று PHC, GH மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்குவது மட்டும்தான் வாக்களித்த மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்பாடாக இருக்கும்.

ஏற்கெனவே தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாகவே ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இல்லை என்பதால், மருத்துவர்கள் மிகுந்த சிரமத்துடன் பணிபுரிந்துவருகிறார்கள். அரசுக்கு இதனால் நாம் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மருந்து இல்லாததற்கு, மருத்துவர்களை பலிகடா ஆக்கி தண்டிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சரியான  நிதி ஒதுக்கீடு இல்லை.

ஊசி, சிரிஞ்சுகள், மருந்துகள் வாங்குவதற்கு TNMSC-ல் போதுமான அளவு இருப்பு மருந்துகள் இல்லை. TNMSC-ல் அமைச்சர்கள், உயரதிகாரிகள் கமிஷன் வாங்கிவிட்டு தரமற்ற மருந்துகளை டெண்டர் கொள்முதல் செய்து வாங்கி வைப்பீர்கள் அல்லது கமிஷன் கிடைக்கவில்லை என்று டெண்டர் கொடுக்காமல்  மருந்துகள்  பற்றாக்குறை நிலையை உருவாக்கி வைத்திருப்பீர்கள். அமைச்சர்கள், உயரதிகாரிகள் கமிஷன் அடித்து வாங்கி வைத்திருக்கும் தரமற்ற சரிஞ்சுகள், ஊசிகள், உபகரணங்கள், மருந்துகளால் நோயாளிகளுக்குப் பல நேரங்களில்  சிகிச்சை பலனில்லாமல் போகிறது. உயிர்காக்கும் மருத்துவத்துறையில் முதலில் இந்த கமிஷன் வாங்கி கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு. தரமான ஊசி சரிஞ்சுகள், ஐ.வி செட்கள், உபகரணங்கள், சிகிச்சைக்கான  மருந்துகளைப் போதுமான அளவு கொள்முதல் செய்யுங்கள். மேலும், போதுமான அளவுக்கு மருந்துகள், உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு

அரசு மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. இதனால் அவசரத்துக்கு விடுமுறை எடுக்கக்கூட சிரமப்படும் மருத்துவர்களுக்கு இது போன்று நெருக்கடி தருவதும், பழி வாங்குவதும், எதற்குத்தான் டாக்டரானோம் என ஒவ்வொரு நாளும் வேதனைப்படவைக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்கிறது. ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தொடர்ந்து இங்கு எத்தனையோ சிரமங்களையும், சவால்களையும் மீறி அர்ப்பணிப்போடு பணி செய்துவருகிறார்கள். மேலும் உரிய ஊதியத்துக்காக பத்து வருடங்களுக்கும் மேலாகப் போராடிவரும் நிலையில், வெறும் MBBS மருத்துவர்களுக்கு இதற்கு மேலும் ஊதியம் தேவையா என்று அரசு கொச்சைப்படுத்திவருகிறது. அதுவும் நீண்டகாலப் படிப்பு, அரசுப் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், குடும்பத்தைப் பிரிந்து நெடுந்தொலைவில் பணிபுரிதல் என மனஉளைச்சலுடன் இருக்கும் மருத்துவர்களை, எந்தக் காரணமும் இன்றி `கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க’ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

கலந்தாய்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி வேண்டும். அதேபோல, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசை வேண்டுகிறோம். இல்லையெனில் நிச்சயம் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்று சொல்வதைப்போல், ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை மிகுந்த வேதனையுடன் அரசுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கப்பட்டிருக்கிறது.