`கருணாநிதியை எதிர்த்துத் தேர்தலில் போட்டி; ஸ்டாலினைப் புகழ்ந்த தருணம்'- நெல்லை கண்ணன் நினைவலைகள்

கடந்தாண்டு டிசம்பர் மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இவருக்கு காமராசர் விருதை வழங்கிய நிகழ்வில் மேடையேறினார்.

Published:Updated:
நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்
0Comments
Share
பேச்சாளரும் தமிழ் மொழி மீது தணியாக் காதல் கொண்டவருமான நெல்லை கண்ணன் உடல் நலக் குறைவால் தன்னுடைய 77 வது வயதில் இன்று காலமானார்.
நெல்லை கண்ணன் வீடு
நெல்லை கண்ணன் வீடு

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவில் அருகே தான் இவரது பூர்வீக வீடு இருக்கிறது. தமிழ் மீது தீராப் பற்றுக் கொண்டவர். பேச்சாளராகியதும் 'நெல்லை' இவரது பெயருக்கு முன் சேர்ந்து கொள்ள பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள் என தமிழில் முழங்கினார். இலக்கியப் பேச்சு என்றாலும் சரி, ஆன்மிக மேடை என்றாலும் சரி, இவரது பேச்சுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

அரசியலில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி இவரை ஈர்த்தது. 1996 ல் நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டார்.

பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து வந்த தேர்தலில் அதிமுகவை ஆதரித்து தமிழகம் முழுக்க இவரைப் பிரச்சாரம் செய்யக் கேட்டுக் கொண்டார் ஜெ.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

பிறகு சில காலம் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தவரை பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருந்தச் சட்டம் மீண்டும் அரசியல் பேச வைத்தது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியில் நடந்த ஆரப்பாட்ட மேடை ஒன்றில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்து இவர் பேசிய பேச்சுகள், கைது நடவடிக்கையில் கொண்டு போய் நிறுத்தியது. கைதாகி சில நாட்கள் சிறையிலும் இருந்தார்.

கடைசியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இவருக்கு காமராசர் விருதை வழங்கிய நிகழ்வில் மேடை ஏறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் பேசிய அந்த நிகழ்ச்சியில், அரசியலில் தான் அநாதை ஆகி விட்டதாகக் கண்ணீர் சிந்தினார். மேலும் 'இந்தத் தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை' என முதல்வரைப் பார்த்தும் நா தழுதழுக்கப் பேசியது நினைவிருக்கலாம்.

மறைந்த நெல்லை கண்ணனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சுகா திரைத்துறையில் பணி புரிய இரண்டாவது மகன் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.