சமூக ஊடகக் குற்றங்களைத் தடுப்பதில் தமிழ்நாடு போலீஸ் தீவிரம் - அரசியல் காரணமும் உண்டா?!

சமூக ஊடகக் குற்றங்களைத் தடுக்க சமூக ஊடகக் குழுவைத் தமிழ்நாடு போலீஸ் ஏற்படுத்தியிருப்பதில் அரசியல் காரணம் இருக்கிறதா?!

Published:Updated:
சமூக ஊடகக் குழு - தமிழ்நாடு போலீஸ்
சமூக ஊடகக் குழு - தமிழ்நாடு போலீஸ்
0Comments
Share

சமூக ஊடக குழு:

சமீபத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களைப் பதிவுசெய்து, வதந்திகளைப் பரப்பி, அதன் வாயிலாக, குழப்பங்கள் மற்றும் கலவரங்களை ஏற்படுத்தி, காவல்துறைக்குச் சிலர் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். இவர்களைக் கண்காணிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், இணையவழியாகக் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, எளிதில் கண்டுபிடிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

அதற்காக, சென்னை உட்பட ஒன்பது மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும், 203 போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் `சமூக ஊடக குழுக்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. கணினிசார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இயங்கும். பொய்யான பதிவுகளைச் சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து, அந்த வதந்திப் பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கவும், வழக்குகள் பதிவுசெய்ய இந்தக் குழு துரிதமாகச் செயல்படும். இந்த நடவடிக்கையால், சாதி, மத, அரசியல் மோதல்களைத் தடுக்க இக்குழு உதவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சர்ச்சை:

பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்த சமயத்தில், அவருக்கு எதிராகக் கருத்து பதிவுசெய்பவர்களின் பதிவுகள் கண்காணிக்கப்படும் என்று சென்னைக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது டி.ஜி.பி வெளியிட்டுள்ள அறிக்கை இந்த அரசுக்கு எதிராக யாரும் பேசக் கூடாது என்பதற்காகவே புதிதாக ஒரு குழு போடப்பட்டிருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்துவருகிறார்கள்.

இது குறித்து, தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``கருத்துச் சுதந்திரம் என்பது வேறு, வதந்தி பரப்புவது என்பது முற்றிலும் வேறு. கருத்து சொல்வதை யாரும் தடுக்க முடியாது. அதேசமயத்தில் தொடர்ந்து சமூகத்துக்கு எதிராக வதந்தி பரப்புபவர்களை விட்டுவிடுவது மிகவும் ஆபத்து. யார் வதந்தி பரப்புகிறார்களோ அவர்களுக்கு முதலில் ஒரு வார்னிங்தான் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து வதந்தியைப் பரப்பினால் சட்டப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மேலும், ``எனக்குத் தெரிந்து இன்றைய காலகட்டத்தில் 40 லட்சம் பேர் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் மீதுமா வழக்கு பதிவு செய்யப்படுகிறது... யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் மீதுதானே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு பிரச்னையை வேறுவிதமாகத் திரித்து, தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக இந்த மாதிரியான விவகாரம் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்படி வெறுப்பு அரசியல், செருப்பு அரசியல் செய்து மேலே வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எல்லாச் சூழல்களிலும், அனைத்து நிலையிலும், சமூக ஒற்றுமையை விரும்பும் சமூகம். அந்த மக்களின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமை. அதைத்தான் அந்தக் குழு செய்யப்போகிறது" என்று பேசினார்.

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``சமூக ஊடகங்களைக் கண்காணிக்க காவல்துறை அமைத்துள்ள இந்தக் குழு பெரும்பாலும் கருத்துரிமையைத்தான் பறிக்கும். ஆளும் அரசின் அழுத்தம் காரணமாக, எதிர்க்கட்சிகளை ஒடுக்கவே இந்தக் குழுவை ஆளும் கட்சியினர் பயன்படுத்துவார்கள். திமுக குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்தும் யாராவது விமர்சனம் செய்தால், அவதூறு பரப்புவதாகச் சொல்லி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவே இது வழிவகை செய்யும்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தங்களைக் குறித்து யாரும் எதுவும் பேசக் கூடாது, எழுதக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இப்படி ஒரு குழுவை ஆரம்பித்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க இந்தக் குழு செயல்பட்டால் வரவேற்கலாம். ஆனால், இந்த திமுக அரசு கண்டிப்பாக அப்படி நடந்துகொள்ளாது என்பதுதான் உண்மை நிலவரம். இந்தக் குழு எதைச் செயல்படுத்துகிறது என்பதைவிட, எப்படிச் செயல்படுகிறது என்பதுதான் முக்கியம்" என்றார்.