தமிழ் நாயகிகளின் "மல்டிவெர்ஸ்" சினிமா! | My Vikatan

நாயகர்களுக்கு மட்டும்தான் மல்டிவெர்ஸ் எடுக்க முடியுமா? நாயகிகளை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்? அதற்கான கதை எப்படி அமைக்கலாம்?

Published:Updated:
தாரை தப்பட்டை
தாரை தப்பட்டை
0Comments
Share

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்

ஆனந்த விகடனில் வெளியான "ஆண்பால் பெண்பால் அன்பால்" கட்டுரை தொடரில் எழுத்தாளர் நரன் "காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் சிலர், இருவரில் யார் உயர்ந்த சாதியோ அந்த சாதியை தங்கள் மகன்/மகளுக்கு அடையாளப்படுத்துகிறார்கள்" என்று எழுதியிருந்தார். அப்படிபட்ட காதல்களை போலியான காதல் என்றே சொல்ல தோன்றுகிறது. இந்த மாதிரியான காதல்களை பற்றி பேசாமல் பெண்களின் உண்மையான காதலை திரையில் காட்டிய படங்களை அந்தக் கதாபாத்திரங்களை பற்றி பார்ப்போம்.

பூ திரைப்படம்
பூ திரைப்படம்

`பூ’ - மாரி:

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான கதாபாத்திரம் பூ மாரி. எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வன் எப்படி தான் "வெயிலோடு போயி" என்று இப்படியொரு ஆழமான கதையை மிக சில வார்த்தைகளில் எழுதினாரோ என்று இன்றும் வியப்பாக இருக்கிறது. அந்தச் சிறுகதையை மிக அழகாக படமாக்கி தேசிய விருதும் வாங்கினார் இயக்குனர் சசி. "பெருசாகி என்ன ஆக போற" என்று பள்ளி ஆசிரியர் கேட்க, "என் தங்கராசு மாமனுக்கு பொண்டாட்டி ஆகப் போறேன் சார்" என்று பதிலளிக்கும் மாரி அப்போதிலிருந்தே தன் மாமன் மீது மாறாத காதலோடு இருக்கிறாள்.

கால் மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் தன் மாமனின் மனைவியிடம் அப்பாவித்தனமாக பேசும் காட்சியிலும், மாமனுக்கு இப்படியொரு வாழ்க்கை அமைந்துவிட்டதே என்று வெட்டவெளியில் ஒரு மரக்கட்டையில் அமர்ந்து ஓவென அழும் காட்சியிலும் மாரி நம்மை கலங்கடிக்கிறாள்.

பருத்திவீரன் முத்தழகு:

"எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்டா" என்று அழுதுகொண்டே முத்தழகு சொல்லும் காட்சி தான் பருத்திவீரன் படத்தின் மிகச்சிறந்த காட்சியாக நினைக்கிறேன். சிறுவயது முதலே வீரன் மீது காதலோடு இருக்கும் முத்தழகு "ஐய்யய்யோ..." பாடல் காட்சியில் கருப்பு தாவணியில் அவ்வளவு அழகு. வீரன் தவறான பாதையில் செல்லும்போது அவனை காதலி என்கிற முறையில் உரிமையோடு கண்டிக்கும் இடம் அவ்வளவு ரசிக்கும்படி எடுக்கப்பட்டிருக்கும். முத்தழகு கதாபாத்திரம் பிரியாமணிக்கு தேசிய விருது வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது.

பருத்திவீரன்
பருத்திவீரன்

விருமாண்டி அன்னலட்சுமி:

கமல் படத்தில் காதல் இல்லாமலா? அதுவும் அவர் இயக்கிய ஹேராம், விருமாண்டி இரண்டு படத்திலும் காதல் காட்சிகள் மிக அழுத்தமானதாக இருக்கும்.

"கொம்புள பூவை சுத்தி நெத்தியில பொட்டு வச்சு கன்னிப்பொண்ணு கை வளத்த காளை மாடு" என்ற பாடலில் கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு இருக்கும் அன்னலட்சுமியிடம் வம்பு இழுக்க தொடங்கி, "உன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல" பாடலில் விருமாண்டியோடு இரவோடு உறவாடும் காட்சி வரை நம் மனதை கொள்ளையடிக்கும் அன்னலட்சுமி, தான் வளர்த்த காளை மாட்டின் முதுகிலேறி தூக்கில் தொங்கும் காட்சியில் மனதை துடித்துடிக்க வைக்கிறாள். கமல் படங்களில் வந்த பெண் கதாபாத்திரங்களில் அன்னலட்சுமிக்குத் தான் எப்போதும் முதலிடம்!

தர்மதுரை அன்புச்செல்வி:

இயக்குனர் பாலா "தர்மதுரை" பட இசை வெளியீட்டு விழாவில் "சீனு தன் படங்களில் பெண்களை காட்டும் விதம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது" என்று பாராட்டி பேசியிருப்பார். அந்த வார்த்தைகளுக்கு சரியான உதாரணமாக தர்மதுரை அன்புச்செல்வியை சொல்லலாம். தினமும் நூலகத்திற்கு செல்லும் பழக்கமுள்ள பத்திரிக்கைகளுக்கு சமையல் குறிப்புகள் எழுதி அனுப்பும் கிராமத்து பெண்ணாக ஆண்டிப்பட்டி கணவாய் காத்து பாடலில் அன்புச்செல்வி மிக அழகாக தெரிந்தாள். பூ மாரி, பருத்திவீரன் முத்தழகு, விருமாண்டி அன்னலட்சுமி வரிசையில் கண்டிப்பாக இந்த அன்புச்செல்விக்கும் இடம் கொடுக்கலாம்!

தர்மதுரை
தர்மதுரை

தாரை தப்பட்டை சூறாவளி:

"என் மாமன் வாசிக்கும்போது என் காலு ஆடாம இருக்குமா?" என்று சாராய பாட்டிலோடு அறிமுகமாகும் சூறாவளி, படத்தின் பின்வரும் காட்சியொன்றில் மாமன் பசியை போக்க காலில் ஆணி குத்தி ரத்தம் வருவதை கூட பொருட்படுத்தாமல் கரகாட்டம் ஆடுகிறாள். அவ்வளவு அப்பழுக்கற்ற காதலோடு இருக்கும் சூறாவளி மாமனோடு சேர முடியாமல் அரக்கன் ஒருவனிடம் சிக்கி சீரழிய நேர்கிறது. "பாருருவாய பிறப்புற வேண்டும்" என்ற திருவாகச பாடல் காட்சியில் சூறாவளியின் முகத்தில் இருக்கும் சோகம் மாமன் மீதான அவளது காதல் எப்படிபட்டது என்பதை காட்டுகிறது. இயக்குனர் பாலா இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக எடுத்திருந்தால் சூறாவளியை இன்னுமே அதிகம் ரசித்திருக்கலாமோ என்று தோன்றியது.

சுப்ரமணியபுரம் துளசி:

மேற்கண்ட நாயகிகளை விட இவர் கொஞ்சம் வேறுபட்டு சிவப்பாக இருக்கிறார் என்றாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகி இவர். சுப்ரமணியபுரம் படத்தில் நாயகனை தனியாக வரவைத்து தன் உறவினர்களிடம் காட்டிக்கொடுக்க வில்லன்கள் நாயகனை வெட்டி கொல்வார்கள். அவன் ரத்தம் சிந்திய இடத்தில் அமர்ந்துகொண்டு தலைதலையாக அடித்துக்கொண்டு அழுவாள் நாயகி. நாயகி மீது ஒருவித பரிதாபம் வரும். குற்ற உணர்ச்சியுடன் அவள் எப்படி வாழப் போகிறாள் என்ற பரிதவிப்பு வரும்.

சுப்ரமணியபுரம்
சுப்ரமணியபுரம்

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், கார்த்தி ஆகியோரின் பங்களிப்பு இருந்தது. அப்போதிலிருந்தே "மல்டிவெர்ஸ்" என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாயகர்களுக்கு மட்டும்தான் மல்டிவெர்ஸ் எடுக்க முடியுமா? நாயகிகளை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்? அதற்கான கதை எப்படி அமைக்கலாம்?

ஒரு கிராமத்து இளம்பெண் சாதிபாகுபாடு, குடும்ப எதிர்ப்பு காரணமாக தன் காதலனோடு சேர முடியாமல் தவிக்க... காதலில் தோற்றுப்போன, காதலனோடு வாழ முடியாமல் போன பருத்திவீரன் முத்தழகு, சுப்ரமணியபுரம் துளசி, விருமாண்டி அன்னலட்சுமி, பூ மாரி, நான் பெத்த மகனே ராதிகா (வழக்கறிஞர்), தாரை தப்பட்டை சூறாவளி, பிரபுசாலமனின் மைனா, பாலாஜி சக்திவேலின் காதல் ஐஸ்வர்யா, கல்லூரி கயல்விழி (தமன்னாவின் தோழி - நாயகன் மீது இவருக்கும் காதல் வரும், பிறகு அதை மறைத்துக்கொள்வார்), சீனு ராமசாமியின் தர்மதுரை அன்புச்செல்வி இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடி அந்த ஜோடியை எப்படி காப்பாற்றி வாழ வைக்கிறார்கள் என்பதை கதைக்கருவாக வைத்துக்கொள்ளலாம்.

ஒரு வேளை கதை நகரம் நோக்கி நகர்கிறது என்றால் 96 ஜானு, விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி, ராஜாராணி ரெஜினா - கீர்த்தனா, 7ஜி ரெயின்போ காலனி அனிதா ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். ("பார்கவ்" தான் செத்துட்டானே என்று நடிகர் சாந்தனுக்கு பதிலளித்த லோகியை போல செத்துப் போனவங்க எப்படி உயிரோட வர முடியும் என்ற லாஜிக்கை பாக்காதிங்க ஃப்ளீஸ்!)

சமீபத்தில் யுவன் இசையில் அவரது ஈர குரலில் வெளியான "விருமன்" படத்தில் வரும் "கஞ்ச பூ கண்ணால" பாடல் அவ்வளவு இனிமையாக இருந்தது. கார்த்தியின் கிராமத்து கெட்டப்பும் யுவனுடைய இனிமையான குரலும் இசையும் "பருத்திவீரன்" படத்தை நினைவூட்டியது. "கஞ்ச பூ கண்ணால" பாடல் காட்சியில் வரும் அதிதி சங்கர் அவ்வளவு க்யூட்டாக இருந்தார். படத்தில் அவர் இறந்துவிடாமல் இருக்க வேண்டும்! மேலே சொன்னது போல் தமிழ் நாயகிகளுக்கு ஒரு மல்டிவெர்ஸ் சினிமா உருவானால் ரொம்பவே நன்றாக இருக்கும்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.