ஸ்டாலினையும் குருமூர்த்தியையும் ஒரே நேரத்தில் சீண்டிய சு.சுவாமி... இரு தரப்பு ரியாக்சன் என்ன?

பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னதாகவும், அந்த கருத்தை தி.மு.க-வின் ராஜீவ் காந்தி வழிமொழிந்ததாகவும் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி
0Comments
Share

தி.மு.க-வின் தலைமைக் கழக செய்தித்தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான இராஜீவ் காந்திக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி தருமாறு பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருக்கும் விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்
ராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதிய கடிதத்தின் நகலுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டிருக்கிறார். அதில், ‘ஸ்டாலின் அவர்களே... பிராமணர்களில் கடுமையானவர்களும் இருக்கிறார்கள். குருமூர்த்தி போல எல்லோரும் கோழைகள் அல்ல என்பதை இராஜீவ் காந்தியிடம் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிராமணர் சமூகம் குறித்து பெரியார் சொன்னதாக டாக்டர் சுமந்த் ராமன் ட்விட்டரில் வெளியிட்ட கருத்துக்கு, இராஜீவ் காந்தி பதில் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். ’பிராமணர்’, ‘இனப்படுகொலை’ போன்ற சொல்லாடல்கள் அந்தப் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாகத்தான், இராஜீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்வதற்கு ஆளுநரிடம் சுப்பிரமணியன் சுவாமி அனுமதி கேட்டிருக்கிறார்.

ராஜீவ்காந்தி ட்வீட்
ராஜீவ்காந்தி ட்வீட்

பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னதாகவும், அந்த கருத்தை இராஜீவ் காந்தி வழிமொழிந்திருக்கிறார் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் நாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தி.மு.க-வைச் சேர்ந்த சில நிர்வாகிகள் பிராமண சமூகத்தைத் தாக்கிப் பேசுவதும், சம்பந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்துவருகிறது. தி.மு.க-வின் பேச்சாளர் இராஜீவ் காந்தி சமீபத்தில் பிராமணர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் என்று பேசியிருப்பதைக் கண்டிக்கிறோம். தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதுபோன்ற செயல்களில் தி.மு.க-வினர் ஈடுபடக் கூடாது என்று கண்டிக்க வேண்டும்” என்று நாராயணன் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தனிடம் பேசினோம்.

“பிராமண சமூகத்தை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்தை தி.மு.க-வைச் சேர்ந்த இராஜீவ்காந்தி தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. எந்த தைரியத்தில் இத்தகைய கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வேறொரு சமூகத்தைப் பற்றி அவரால் இப்படி பேச முடியுமா? பிராமணர் போல இருக்க முடியவில்லையே என்கிற வயிற்றெரிச்சலில் இப்படியான கருத்துகளை அவர் கூறியிருக்கிறார்.

உமா ஆனந்தன்
உமா ஆனந்தன்

எங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமியைப் பார்த்துதான் தைரியம். இந்தப் பிரச்னையை எப்படி கையாளுவது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆளுநர் என்பது அரசியல் சாசனப் பதவி. எனவே, முதல்வரை அழைத்து ஆளுநரால் கேட்க முடியும். ஆகவேதான், ஆளுநரிடம் சுவாமி புகார் கொடுத்துள்ளார். போலீஸிடம் புகார் கொடுத்தால், அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது நமக்குத் தெரியும். நடராஜர் பற்றி அநாகரிகமாக யூட்யூப் சேனலில் சிலர் பேசியது தொடர்பாக போராட்டம் நடத்தியும், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையே. இதுபோன்று தங்கள் கட்சியினர் பேசுவதையும் எழுதுவதையும் முதல்வர் ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?” என்றார் உமா ஆனந்தன்.

இந்த விவகாரம் குறித்து இராஜீவ் காந்தியிடம் பேசினோம். “பெரியாரை சமூகநீதியின் தந்தை என்று தமிழ்நாடு கொண்டாடுகிறது. அவரின் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று முதல்வர் அறிவிக்கிறார். இந்த நேரத்தில், பெரியாரின் ஒரு பேச்சை எடுத்து ‘பிராமணர்களை இனப்படுகொலை செய்யுங்கள்’ என்று பெரியார் சொன்னதாக பொய்யான ஒரு செய்தியை டாக்டர் சுமந்த் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்தார்.

பெரியார் ஈ.வே.ரா
பெரியார் ஈ.வே.ரா

அதற்கு, ‘பெரியார் சொன்னதுபோல அப்போது சூத்திரர்கள் நடந்திருந்தால் இன்றைக்கு இந்த இடஒதுக்கீடுக்காக, கல்விக்காக, உரிமைக்காக கையேந்தும் நிலை வந்திருக்காது’ என்று கருத்தைப் பதிவுசெய்தேன். அதைத்தான், ‘பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென்று பெரியார் சொன்னார். அதை இராஜீவ் காந்தி வழிமொழிகிறார்’ என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார். பெரியார் எங்கேயும் யாரையும் கொலை செய்ய வேண்டுமென்று சொல்லவே இல்லை. இனப்படுகொலை என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தவே இல்லை.

இதை இன்னும் புரியும்படியாக நான் சொல்ல விரும்புகிறேன். சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் பெரியார் போராடினார். பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பது கூடாது என்றார். ஒருவேளை பெரியார் சொன்னதைச் செய்திருந்தால், அதாவது மூன்று விழுக்காடு இருக்கக்கூடிய மக்களுடன் சண்டையிட்டிருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்ற வாதத்தை வைத்தேன். உடனே, ‘பெரியார் இனப்படுகொலை செய்யச் சொன்னார். இராஜீவ்காந்தி அதை ஆதரிக்கிறார்’ என்று சொல்கிறார்கள். பெரியாரும் சரி, நானும் சரி, இருவருமே இனப்படுகொலைக்கு எதிரானவர்கள்.

சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை, ஓர் உரிமைக்கான போராட்டமாக நடத்துகிறோம். சமூக நலத் திட்டங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்தை, இனப்படுகொலை என்கிற வார்த்தைக்குள் அவர்கள் அடைக்கப்பார்க்கிறார்கள்.

எனக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகாரை சுவாமி கொடுத்திருக்கிறார். அதை, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவதற்கு பதிலாக, டெல்லி உள்ளாட்சித் தேர்தல் ஆணைய முகவரிக்கு மாற்றி அவர் அனுப்பிவிட்டார். இரண்டாவது புகாரை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி கொடுத்திருக்கிறார். ஆனால், அதுபோன்ற புகார், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குத்தான் பொருந்தும். எனக்குப் பொருந்தாது. இப்போது ஆளுநரிடம் போயிருக்கிறார். ஆளுநரிடம் அனுமதி கேட்பதற்கு நான் முதல்வரோ, அமைச்சரோ இல்லை. ஆளுநரிடம் அவர் போயிருக்க வேண்டியதில்லை. தேவைப்பட்டால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். முகாந்திரம் இருந்தால், சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

சுமந்த் ராமன், ராஜீவ்காந்தி ட்விட்டர் பதிவுகள்
சுமந்த் ராமன், ராஜீவ்காந்தி ட்விட்டர் பதிவுகள்

ஆனால், சுயவிளம்பரத்துக்காக ஆளுரிடம் அவர் போயிருக்கிறார். அது தேவையற்றது. மேலும், தனது ட்வீட்டில், குரூமூர்த்தியை இழுத்துவந்து சுவாமி சாடியிருக்கிறார். அவர்களுக்கு இடையிலான உள்அரசியலை இங்குவந்து அவர் காட்டியிருக்கிறார். எந்த ஒரு சமூகத்தையும் எதிர்த்துப் பேசும் வழக்கம் தி.மு.க-வுக்கோ, பெரியாரியவாதிகளுக்கோ கிடையாது என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்” என்கிறார் இராஜீவ் காந்தி.