அக்டோபர் 11 : `சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி'... விடாத கட்சிகள் - பின்னணி என்ன?

விடாப்பிடியாக நின்று சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியை நடத்தவேண்டிய அவசியம் தற்போது என்ன ?

Published:Updated:
 திருமா
திருமா
0Comments
Share

அக்டோபர் 2-ம் தேதி சட்டம்-ஒழுங்குப் பிரச்னையால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், நவம்பர் 6-ம் தேதி பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. அதே நாளில், தமிழகம் முழுவதும் 'சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி' நடத்த விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அனுமதி கேட்டு அது மறுக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 11-ம் தேதி அதைத் தள்ளிவைத்துள்ளனர். கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியில் கைகோத்திருக்கும் நிலையில் இது தமிழக அரசியல் களத்தில் முக்கியப் பேசுபொருளாகியிருக்கிறது.

 ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்

தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிட சில மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துப் பேரணி, நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்க முடியாது என போலீஸ் மற்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக காவல்துறை சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இது கடந்த செப்டம்பர் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் இரண்டாம் தேதி அனுமதி வழங்க முடியாது எனத் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம்பர் 6-ம் தேதி பேரணிக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனுமதி தராவிட்டால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்தது.

இது ஒருபுறமிருக்க, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அக்டோபர் 2-ம் தேதி நடத்தவிருந்த, சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ``ஆர்.எஸ்.எஸ்-ஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அறப் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா... மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸும், அரசியல் கட்சிகளான சிபிஐ (எம்), சிபிஐ மற்றும் விசிக-வும் ஒரே வகையானவையா... எனவே, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளன்று நடக்கவிருக்கும் எமது 'சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி' அறப் போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து, இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டவர்கள் டிஜிபி-யைச் சந்தித்து மனு அளித்தனர்.

திருமா அறிக்கை - சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி
திருமா அறிக்கை - சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி

அதில், ``மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்ட, மத நல்லிணக்கத்துக்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திடவும் அனுதினமும் போராடிவரும் அமைப்புகளாகும். எனவே, மதவாத அடிப்படையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளையும், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கைகொண்ட அரசியல் கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பது பொருத்தமற்றது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் மதச்சார்பற்ற, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கைகொண்ட அமைப்புகளின் சார்பில் அமைதியான முறையில் அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டிருக்கும் “சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி” இயக்கத்துக்கு அனுமதி அளித்திட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ``மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர் 2-ம் தேதி அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை தரப்பு விளக்கியது. மனிதச் சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், அக்டோபர் 11-ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் மனிதச்சங்கிலி நடைபெறும்'' என அறிவித்தார் திருமாவளவன். தேமுதிக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

வன்னி அரசு
வன்னி அரசு

இந்த நிலையில், இப்படி விடாப்பிடியாக நின்று மனிதச்சங்கிலியை நடத்தவேண்டிய அவசியம் தற்போது என்ன என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைத் தலைவர் வன்னி அரசுவிடம் பேசினோம்...

``ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார அமைப்புகள் மதவெறியைத் தூண்டுகிற வகையில், மாற்று மதத்தவருக்கு எதிராக வன்முறையைத் தொடர்ந்து தூண்டுகிறார்கள். அதனால் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தவேண்டிய தேவை இருக்கிறது. அன்பை, சமூக நல்லிணக்கத்தைத் தொடர்ந்து போதித்துவந்தவர் காந்தியடிகள். அதனால் அவருடைய பிறந்தநாளில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியை நடத்த முடிவு செய்தோம். முரண்பட்டு நிற்கிற பல கட்சிகள், அமைப்புகளும்கூட எங்களுக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாட்டுக்கு இந்த மனிதச்சங்கிலி தேவை என்பதைப் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், மக்களும் விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில், அக்டோபர் இரண்டாம் தேதி காவல்துறை அனுமதியை மறுத்ததால், 11-ம் தேதி நடத்தமுடிவு செய்திருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்காக மட்டும் நாம் மனிதச்சங்கிலி பேரணியை நடத்த முடிவுசெய்யவில்லை. அதைத் தாண்டி இந்த முன்னெடுப்பு தற்போது காலத்தின் தேவையாக இருக்கிறது. அவர்கள் நீதிமன்ற அனுமதி வழியாக பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். மக்கள் அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் இதுகுறித்துப் பேசினோம்.

``ஆர்.எஸ்.எஸ் இயக்கம் என்பது நீதியை, நேர்மையை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, தேசபக்தியை, நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிற ஓர் அமைப்பு. இந்த அமைப்புக்கு எதிராக நாங்கள் செயல்படுவோம் என்று சொல்பவர்கள் , ஒழுக்கமில்லாத, கண்ணியம், கட்டுப்பாடில்லாத. தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். தற்போது, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என, `பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா' என்கிற அமைப்பு தடைசெய்யப்பட்டிருக்கும் சூழலில், இவர்கள் சில மத அடிப்படைவாத சக்திகளையும், சாதிய சக்திகளையும் ஒருங்கிணைத்து மனிதச்சங்கிலி பேரணி செல்கிறோம் என்பது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான செயல் என்றே நாங்கள் பார்க்கிறோம்'' என்கிறார்.