நிதிஷ் குமாரின் `மிஷன் ஆப்போசிஷன்' திட்டம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடுமா?!

`மிஷன் ஆப்போசிஷன்' என்ற திட்டத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் நிதிஷ் குமார். தேசிய அரசியலில் அவரின் கணக்குகள் பலிக்குமா?

Published:Updated:
 நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
0Comments
Share

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான நிதிஷ் குமார், தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். செப்டம்பர் 5-ம் தேதி அன்று, மூன்று நாள் பயணமாக டெல்லிக்குச் சென்ற நிதிஷ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசினார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக வேறு சில தலைவர்களையும் சந்திக்கவிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இடதுசாரித் தலைவர்கள் உள்ளிட்டோரை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அரசியலில் நிதிஷ் குமாரின் கணக்குகள் பலிக்குமா?

டெல்லி பயணம்!

கடந்த மாதம் வரை பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்திருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணிவைத்து ஆட்சியமைத்தது. அப்போதிலிருந்தே பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவருகிறார் நிதிஷ். இந்த நிலையில், செப்டம்பர் 2-ம் தேதி அன்று ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய அரசியலில் களமிறங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய நிதிஷ், ``பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச டெல்லிக்குச் செல்கிறேன். 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால், பா.ஜ.க 50 தொகுதிகளுக்குள் சுருங்கிவிடும். நான் அதற்காகப் பாடுபடப்போகிறேன்" என்று கூறியிருந்தார். அதன்படி, டெல்லிக்குச் சென்று தனது தேசிய அரசியல் நகர்வுகளைத் தொடங்கியிருக்கிறார் நிதிஷ்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், ``பா.ஜ.க., மாநிலக் கட்சிகளை அழிக்க நினைக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதுதான் என்னுடைய வேலை. எனக்குப் பிரதமராகும் விருப்பமில்லை'' என்றார். அதேநேரம், பீகார் முழுவதும் `2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷுக்கும் மோடிக்கும்தான் போட்டி' என பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள், ``தேசிய அரசியலில் கால்பதித்து பிரதமராகிவிடலாம் என்பது நிதிஷ் குமாரின் கனவு. ஐக்கிய ஜனதா தளத்தில் 5 முதல் 10 எம்.பி-க்களை மட்டுமே வைத்துக்கொண்டு பிரதமர் கனவெல்லாம் எப்படிக் காண்கிறார்கள் என்பது புரியவில்லை'' என்கின்றனர்.

மிஷன் ஆப்போசிஷன்!

`மிஷன் ஆப்போசிஷன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒரு குடையின்கீழ் கொண்டுவரும் வேலைகளைச் செய்துவருகிறார் நிதிஷ். ஏற்கெனவே இதே முயற்சியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், அவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைக்கவில்லை. ``மம்தா, சந்திரசேகர் ராவ் ஆகிய இருவரும் செய்ததைத்தான் நிதிஷும் செய்கிறார். அவர்களிடமிருந்து நிதிஷ் தன்னை எப்படி வேறுபடுத்திக் காட்டப்போகிறார் என்பது முக்கியம். அவர்கள் இருவரை விடவும் தேர்தல் அரசியலில் அதிக அனுபவமுடையவர் நிதிஷ். தேசிய அரசியலும் அவருக்குப் புதிதல்ல.

தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ்
தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ்

தான் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்க மாட்டேன் என்று நிதிஷ் சொல்லிவருகிறார். ஆனால், அவர் அதற்கான வேலைகளைத்தான் செய்துவருகிறார் என்று தோன்றுகிறது. சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தபோது, `அடுத்த தேர்தலில் தேஜஸ்வி யாதவை எங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம்' என உறுதியளித்திருக்கிறார் நிதிஷ். மேலும், பீகார் அரசியலில் நிதிஷ் குமாருக்கான செல்வாக்கும் குறைந்துவிட்டதாகவே தெரிகிறது. எனவேதான், அவர் தேசிய அரசியலில் கால்பதித்திருக்கிறார். மேலும், எதிர்க்கட்சிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. எனவே, அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டுவதே நிதிஷுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்'' என்கின்றனர் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

நிதிஷ் குமார்மீது, `பதவிக்காக அடிக்கடி கூட்டணி மாறும் அரசியல் பச்சோந்தி' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதுவே அவருக்கு மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்தியில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் நிதிஷ் திரட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!