ஆளுநர் `அரசியல்’ வரையறை என்ன? - ரஜினி சர்ச்சையை ஒட்டிய ஓர் அலசல்!

அண்ணாமலையின் பதிலுக்கு, ``இந்த விஷயத்தில் ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதிலளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப்போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை'' என கே.பாலகிருஷ்ணன் எதிர்வினையாற்றியிருந்தார்.

Published:Updated:
ஆளுநர் ரவி - ரஜினி
ஆளுநர் ரவி - ரஜினி
0Comments
Share

``அரசியல் பற்றி விவாதித்தோம். அதைப் பற்றி இப்போ உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாது'' என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான சந்திப்புக்குப் பிறகு, பத்திரிகையாளர்களிடம் ரஜினி பற்றவைத்த நெருப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும், தமிழக பாஜக-வுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து மோதலாக வெடித்திருக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

`ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படவும் கூடாது. அப்படியிருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கான அரசியலைப் பேசவேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது?' என ரஜினியின் கருத்து குறித்து அறிக்கை வெளியிட்டார், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் இது குறித்துக் கேட்க, ``கம்யூனிஸ்ட் கட்சிகளும், தி.மு.க-வின் `பி’ டீமாகச் செயல்படுகிற, தி.மு.க கொடுக்கிற ஆக்ஸிஜனை வைத்துக்கொண்டு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிற சில கட்சித் தலைவர்களும் தங்களின் இருப்பைக் காட்டுவதற்காக ரஜினி அவர்களை விமர்சித்திருக்கிறார்கள்" என பதிலளிக்க விவகாரம் சூடானது.

அண்ணாமலையின் இந்த பதிலுக்கு, `` இந்த விஷயத்தில் ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதிலளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப்போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தித் தொடர்பாளரோ அல்ல; அப்படியிருக்கும்போது வரிந்துகட்டிக்கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது `எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ எனச் சொல்வதுபோல்” எனக் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார் கே.பாலகிருஷ்ணன்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இவ்வளவு விமர்சனங்களை முன்வைக்கவேண்டிய தேவை என்ன என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜிடம் பேசினோம்.

கனகராஜ்
கனகராஜ்

``ஆளுநர் ஒன்றிய அரசாங்கத்தால்தான் நியமிக்கப்படுகிறார். ஆனால், ஒன்றிய அரசாங்கம் சொல்வதையெல்லாம் அமல்படுத்துவதற்கு அவர் இல்லை. அதேசமயம், மாநில அரசு சொல்கிற அனைத்து விஷயங்களையும் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், மாநில அரசால் நிறைவேற்றப்படும் மசோதாவின் மீது முடிவெடுப்பதற்கான கால அளவுகள் அரசியலமைப்பில் சொல்லப்படாததால், அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வேண்டுமென்றே கிடப்பில் போட்டுவைக்கிறார்கள். அடுத்ததாக, பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கும் ஆளுநர் நினைத்தால் துணைவேந்தர்களை நியமிக்க முடியாது. மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களையே நியமிக்க முடியும். பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்வது மாநில அரசுதான். உயர்கல்வி பொதுப்பட்டியலில் இருந்தாலும்கூட, பாடத்திட்டத்தை தயாரிப்பது மாநில அரசுதான். துணைவேந்தர் மாநாட்டை இவரே தன்னிச்சையாக நடத்துகிறார். அதுமட்டுமில்லாமல், மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராகப் பேசுகிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சரைத் தவிர்த்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

அதேபோல, சனாதனம் குறித்து ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் ஆயிரம் கருத்து இருக்கலாம். அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நியாயப்படுத்தவும் செய்யலாம். அதற்குத் தனியாக ஒரு புத்தகம் எழுதிக்கொள்ளலாமே தவிர, இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பேச அவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் கொடுக்கவில்லை. அதேபோல, அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இது மேம்போக்காகப் பார்த்தால், சாதாரண விஷயமாகத்தான் தெரியும். ஆனால், நாம் அப்படிக் கடந்துவிட முடியாது. சமீபத்தில் ஆளுநரைச் சந்தித்த ரஜினியும், `அரசியல் பேசினோம், ஆனால் வெளியில் சொல்ல முடியாது'' என்கிறார் . அப்படி இருவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பேசும் இடமல்ல ராஜ்பவன். அது ஆளுநரின் தனிப்பட்ட தங்குமிடம் கிடையாது. அதேபோல, எதற்கெடுத்தாலும் அளுநர் மாளிகையை நோக்கிப் படையெடுக்கும் பா.ஜ.க-வினரை என்கரேஜ் பண்ணும் வேலைகளையும் ஆளுநர் செய்யக் கூடாது. ஒட்டுமொத்தமாக, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற அதிகாரத்துக்கு மீறி ஆளுநர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மாநில அரசைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருக்கிறார்'' என்றார் அவர்.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

``ஆளுநர் தன்னுடைய பொறுப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஓர் இணக்கப் போக்கை உருவாக்குவதே அவரின் அரசியல் கடமை. ஆனால், அவர் ஆர்.எஸ்.எஸ்-காரராக, முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்ல, தேசிய அளவில் ஜனநாயகத்துக்கு முரணாக, சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக இருக்கின்றன'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து, அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்.

``ஆர்.எஸ்.எஸ்., பாஜக-வின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிற ஒரு வேலையைத்தான் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாகச் செய்துவருகிறார். ஆர்.எஸ்.எஸ்-ஸின் அஜண்டாவான சனாதனம் குறித்து வெளிப்படையாகவும் கல்லூரி விழாக்களில் பிரசாரகர்போலப் பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல, ராமராஜ்ஜியம் அமைப்போம் என்கிறார். மன்னராட்சியை ஒழித்துவிட்டுதான் மக்களாட்சியைக் கொண்டுவந்திருக்கிறோம். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற ஒருவர், மீண்டும் ராமராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்வது மன்னராட்சிக்கே மீண்டும் நாட்டைக் கொண்டுசெல்வோம் என்று சொல்வதாகத்தான் அர்த்தம். `திராவிடம் என்ற ஒன்று இல்லை, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா ஒரு தீவிரவாத இயக்கம், தேசியக் கல்விக் கொள்கை அவசியம்' என பாஜக-வின் மேடைப் பேச்சாளர்களைப்போலப் பேசிவருகிறார். அதேவேளையில், ஆளுநருக்கான எந்தவொரு வேலையையும் அவர் முறையாகச் செய்யவில்லை. தவிர, மக்கள் பிரச்னைகளைப் பேசக்கூடிய எங்களைப் போன்றவர்களைச் சந்திக்க அனுமதி கொடுக்க மறுக்கிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஐடியாலஜியை ஏற்றுக்கொள்பவர்களை எளிதாகச் சந்திக்கிறார். அதனால்தான், அப்படி விமர்சிக்கவேண்டியிருக்கிறது'' என்கிறார் அவர்.

வன்னி அரசு
வன்னி அரசு

இந்த விவகாரத்தில் திமுக-வின் நிலைப்பாடு குறித்துத் தெரிந்துகொள்ள, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``ஆளுநர் அரசியலில் ஈடுபடக் கூடாது அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என திமுக தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதனால், ஆளுநர் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கவர்னர் என்பவர் இந்த ஆட்சியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கலாம், ஆலோசனை வழங்கலாம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஆனால், யார் நியமித்தார்களோ அந்தக் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்கு ஆளுநர் மாளிகையைப் பயன்படுத்தக் கூடாது. ஆளுநர் யாரை வேண்டுமானால் சந்திக்கலாம். ஆனால், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசுவது தவறு. அது ரஜினிகாந்த் அல்ல... யாராக இருந்தாலும். அதைவிட, அரசியல் பேசினோம், அதை வெளியில் சொல்ல முடியாது எனச் சொல்லும்போது ஏதோவொரு சூழ்ச்சி நடக்கிறது என்றுதான் தெரிகிறது'' என்கிறார்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளை பாஜக மாநில துணைத் தலைவர், நாராயணன் திருப்பதியின் முன் வைத்தோம்.

``அர்த்தமற்ற, ஆதாரமற்ற பேச்சுகளை கம்யூனிஸ்ட்களும், விடுதலைச் சிறுத்தைகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தூங்கும்போது கனவில்கூட பாஜக-வும் நரேந்திர மோடியும் அவர்களை பயமுறுத்திக்கொண்டே இருக்கின்றனர். எங்களின் வளர்ச்சியைக் கண்டு பயந்து எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கணக்கில் இஷ்டத்துக்கு விமர்சனம் செய்துவருகின்றனர். ஆளுநர் அவரின் இடத்தில் அமர்ந்து அவருடைய பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் யாரைச் சந்திக்க வேண்டும், எப்போது சந்திக்க வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்பதையெல்லாம் கம்யூனிஸ்ட்களும் விடுதலைச் சிறுத்தைகளும் முடிவு செய்யவேண்டிய இடத்தில் இல்லை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் அவர் எதையும் செய்வார். அதேவேளையில், புதிய கல்விக் கொள்கை சரியென்றால், அதைச் சரியென்றுதான் சொல்வார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றைப் பேசுவது, ஆளுங்கட்சியான பிறகு ஒன்றைப் பேசுவது, மாநிலத்துக்கு ஒரு அரசியல் பேசுவது கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற திமுக-வுக்கு அடிமையாக இருக்கக்கூடிய கட்சிகளுக்கு வழக்கம். அதனால், இவர்கள் ஆளுநரைப் பற்றிப் பேசுவதைப் புறந்தள்ளிவிட்டு, வளர்ச்சி குறித்த விஷயங்களைப் பேசலாம். ரஜினிகாந்துக்கு அரசியல் குறித்துப் பேசுவதற்கும் ஆளுநருக்கு அதைக் கேட்பதற்கும் உரிமையிருக்கிறது. ஆளுநரை வழிநடத்த வேண்டிய அவசியமும் தகுதியும் எவருக்குமில்லை'' என்றார் காட்டமாக.