பாஜக-வுக்கே `பாயசம்' வைக்கும் வித்தையில் நிதிஷ் கெத்து காட்டியது எப்படி? - பீகார் முதல்வர் பயோடேட்டா

பா.ஜ.க-வுக்கே `பாயசம்' வைத்த நிதிஷ் குமார்... `ஆபரேஷன் லோட்டஸ்' பீகாரில் தோல்வியடைந்தது ஏன்?!

Published:Updated:
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா
0Comments
Share

பீகாரில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி, எதிர்க்கட்சிகளுடன் கூட்டணியமைத்து மீண்டும் முதல்வர் ஆகியிருக்கிறார் நிதிஷ் குமார். பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சிகளைக் கலைத்து, லாவகமாக ஆட்சியைக் கைப்பற்றும் பா.ஜ.க-வுக்கே `பாயசம்' கொடுத்திருக்கிறார் நிதிஷ். பீகாரில், `ஆபரேஷன் லோட்டஸ்' ஏன் தோல்வியடைந்தது... அதற்குக் காரணமான நிதிஷ் குமார் கடந்துவந்த பாதை எப்படியானது? - விரிவாக அலசுவோம்!

தோல்வியுற்ற `ஆபரேஷன் லோட்டஸ்'

பீகாரில் 2020-ம் ஆண்டு, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போதிலிருந்தே இரு கட்சிகளும் பல்வேறு விஷயங்களில் முட்டி மோதிக்கொண்டன. சமீபத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ஆர்.சி.பி.சிங், சட்டவிரோதமாகச் சொத்துகள் வாங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சிங்-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், கட்சியிலிருந்து விலகினார் அவர். ஆர்.சி.பி.சிங், பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டியதுதான், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. ``மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை உடைத்ததுபோல, பீகாரில் ஆர்.சி.பி.சிங்கை வைத்து நிதிஷ் கட்சியை உடைக்க நினைத்தது பா.ஜ.க. ஆனால், சுதாரித்துக் கொண்ட நிதிஷ் பா.ஜ.க-வின் உத்திகளை முறியடித்துவிட்டார்'' என்கின்றனர் பீகார் அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

நிதிஷ் குமார் - மோடி
நிதிஷ் குமார் - மோடி

ஒரு மாநிலக் கட்சியோடு கூட்டணி வைத்து, அந்தக் கட்சியின் நிழலில் தங்களை வளர்த்துக் கொண்டு, பின்னர் அந்த மாநிலக் கட்சியை உடைத்து, ஆட்சியைப் பிடிக்கும் உத்தியைப் பல மாநிலங்களில் பா.ஜ.க நிறைவேற்றியிருக்கிறது. இந்த உத்திக்கு அரசியல் வட்டாரத்தில் `ஆபரேஷன் லோட்டஸ்' எனப் பெயரிட்டிருக்கின்றனர். ஆனால், பா.ஜ.க-வின் `ஆபரேஷன் லோட்டஸ்' நகர்வுகள் பீகாரில் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. சரியான நேரத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்று, மீண்டும் பீகாரின் முதல்வராகி, பா.ஜ.க-வுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் நிதிஷ். அதிவேகமாக அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டதால், அவரது இந்த முடிவை பா.ஜ.க-வால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார் பேசியதாகச் செய்திகள் வெளியாகின. அதேபோல, நிதிஷை தொலைபேசியில் அழைத்துப் பேசிய அமித் ஷாவிடம், அவர் பிடிகொடுத்துப் பேசவில்லை என்றும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

நிதிஷ், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரண்டு முறை பா.ஜ.க கூட்டணியிலிருந்தும், இரண்டு முறை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியிலிருந்தும் வெளியேறியிருக்கிறார். அதனால், `நிதிஷ் ஓர் அரசியல் பச்சோந்தி' என்ற குற்றச்சாட்டு அவர்மீது முன்வைக்கப்படுகிறது. அதே நேரம், `எத்தனை கூட்டணிகள் மாறினாலும், முதல்வர் பதவியை மட்டும் யாருக்கும் விட்டுக் கொடுக்காத சாமர்த்தியசாலி' என்ற பெயரும் அரசியல் அரங்கில் அவருக்கு இருக்கிறது. அந்த வகையில், `கிங் மேக்கர்'களை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட `கிங்' ஆக இருக்கிறார் நிதிஷ்!

நிதிஷின் அரசியல் பயணம் எப்படியிருந்தது?

பீகார் அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் சுவாரஸ்யமானது. 1951-ம் ஆண்டு பீகாரிலுள்ள சிறு கிராமமான பக்தியார்பூரில் பிறந்தவர் நிதிஷ். அப்பா கவிராஜ் ராம் சிங் ஆயுர்வேத மருத்துவர் என்பதால், நிதிஷ் குமாருக்கு நல்ல கல்வி கிடைத்தது. எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த நிதிஷ், பீகார் மின்சார வாரியத்தில் மனமின்றி பணிக்குச் சேர்ந்தார். பொது வாழ்வின்மீதான ஆர்வம், அவரை அரசியலை நோக்கி நகர்த்திச் சென்றது.

லாலுவுடன் நிதிஷ் குமார்
லாலுவுடன் நிதிஷ் குமார்

ஜெய்பிரகாஷ் நாராயணின் சோஷியலிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நிதிஷ், `பீகார் புரட்சி' இயக்கத்தில் பங்குகொண்டார். பின்னர், சத்யேந்திர நாராயண் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1985 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994-ல் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் இணைந்து `சமதா கட்சி'யைத் தொடங்கினார்.

ஆரம்பக்காலத்தில், பீகார் அரசியலில் லாலு பிரசாத் யாதவுடன் கைகோத்து நின்ற நிதிஷ், 1996-ல் பா.ஜ.க பக்கம் சாய்ந்தார். விளைவு, அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில், விவசாயம், ரயில்வே உள்ளிட்ட துறைகள் நிதிஷுக்கு ஒதுக்கப்பட்டன. அடுத்தடுத்த வாஜ்பாய் ஆட்சியிலும் மத்திய அமைச்சராக பணியாற்றினார். இவர் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோதுதான் இணைய வழி டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் எண்ணற்ற டிக்கெட் கவுன்ட்டர்களை திறந்துவைத்தது, தக்கல் முறையை அறிமுகப்படுத்தியது உள்ளிட்டவை மூலம் தேசிய அளவில் நற்பெயர் பெற்றார் நிதிஷ் குமார்.

கார் முதல்வராக நிதிஷ் குமார்!

2000-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 151 இடங்களையும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 159 இடங்களையும் பிடித்தன. 163 என்ற பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ், எழு நாள்கள் மட்டும் முதல்வராக இருந்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார். 2003-ம் ஆண்டு சமதா, லோக் சக்தி உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து ஐக்கிய ஜனதா தளம் உருவாக்கப்பட்டது. நிதிஷ் குமார் அந்தக் கட்சியின் தலைவரானார்.

2005 முதல் 2014 வரை தொடர்ச்சியாக இரண்டு முறை பீகாரின் முதல்வராக இருந்தார் நிதிஷ். இந்தக் காலகட்டத்தில் சமூகநீதியை உறுதிப்படுத்தும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தைகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியதன் மூலம், ஏராளமான மாணவிகள் பள்ளியில் சேரத் தொடங்கினர். பீகார் கல்வித்துறையை மேம்படுத்த மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். மீண்டும் 2015, 2020 தேர்தல்களில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற, நிதிஷ் குமார் முதல்வரானார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இந்த நிலையில்தான், தற்போது பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சிகளுடன் கூட்டுவைத்து தன்னுடைய முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் நிதிஷ். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய கட்சிகளுடன் நிதிஷ் கூட்டணி வைத்திருப்பதால், 2024-ல் எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளராக நிதிஷ் முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கியிருக்கின்றன.

`பீகார் அரசியலில் பலித்த நிதிஷின் உத்திகள், தேசிய அரசியலிலும் பலிக்குமா?' என்ற கேள்விக்கான விடையைக் காலம்தான் சொல்ல வேண்டும்!