தூக்கமில்லையா? இதயநோய் வரலாம்... எச்சரிக்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்!

இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் ஏழு விஷயங்களாக உடற்பயிற்சியின்மை, நிகோடின் பயன்பாடு, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன், ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் எட்டாவதாக இணைக்கப்பட்டிருக்கிறது தூக்கமின்மை...

Published:Updated:
இதய நோய்!
இதய நோய்!
0Comments
Share

உலகம் முழுவதும் பல நாடுகளிலும் இறப்புகளுக்கான முக்கிய காரணியாக இருப்பது இதயநோய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட `தி குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்' என்ற ஆய்வில், இந்தியாவில் ஒவ்வொரு லட்சம் மனிதர்களிலும் 272 பேர் இதயநோய்களால் உயிரிழந்ததும், உலக அளவில் இந்த விகிதம், லட்சம் மனிதர்களில் 235 பேராக இருப்பதையும் தெரிவித்திருக்கிறது.

தினமும் 6 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு உடல்பருமன், ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு போன்றவற்றுடன் மனநலம் தொடர்பான பாதிப்புகளும் வர வாய்ப்புகள் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.

heart disease
heart disease

இந்நிலையில்தான் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் தலைவர் டொனால்டு எம்.லாயட் ஜேம்ஸ், இதயநலனை பாதிக்கும் விஷயமாக தூக்கமின்மையையும் லிஸ்ட்டில் சேர்த்து அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஒலி மாசும் இந்தப் பட்டியலில் விரைவில் இடம் பெறலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தூக்கமின்மைக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் அப்படி என்ன தொடர்பு? சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் விளக்குகிறார்.

``இது மிகமிக முக்கியமான அப்டேட் என்றே சொல்லலாம். தூக்கமின்மை பிரச்னையை நம்மில் பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதய நோய்களுக்கும் தூக்கமின்மைக்கும் தொடர்பிருக்கிறது என்பதையே பலரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இதய ஆரோக்கியத்துக்கு அடிப்படை நல்ல தூக்கம். எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அந்தத் தூக்கம் எப்படியிருக்கிறது என்பதும். 7 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம். மிகக் குறைந்த நேரம் தூங்குவது, தேவைக்கு அதிகமாகத் தூங்குவது என இரண்டுக்குமே இதய ஆரோக்கியத்துடன் தொடர்புண்டு. தூக்கத்தின் தன்மை சரியாக இல்லாவிட்டாலும் அது இதய நலனை பாதிக்கும்.

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

தூக்கம் என்பது ஒரே ஒரு பிரச்னையாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. சரியான தூக்கமில்லாதவர்களுக்கு மற்ற ரிஸ்க்குகளும் அதிகம். அதாவது, அவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். உடல் எடை கூடலாம். நீரிழிவு வரும் வாய்ப்புகளும் அவர்களுக்கு அதிகரிக்கும்.

எனவே, தூக்கமின்மை இதயநலனை பாதிக்கும் என்ற இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு இனியாவது மக்களை அலர்ட் செய்யட்டும்'' என்கிறார் டாக்டர் அருண் கல்யாணசுந்தரம்.