`சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் லிஸ்ட்டில் உள்ளனர்...’ - ஸ்கோர் செய்வாரா செந்தில் பாலாஜி?!

அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க கட்சி நிர்வாகிகளை, முன்னாள் எம்.எல்.ஏ-க்களை வளைத்த செந்தில் பாலாஜியின் லிஸ்ட்டில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்களாம்.

Published:Updated:
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
0Comments
Share

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி திடலில் நடைபெற்ற பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 55,000 பேர் தி.மு.க-வில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.

திமுக-வில் இணைந்தவர்கள்
திமுக-வில் இணைந்தவர்கள்

அதில் குறிப்பிடும்படியாக, அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, பா.ஜ.க மகளிரணிச் செயலாளராக இருந்த மைதிலி வினோ, தே.மு.தி.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தினகரன் ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தனர். இதன் பின்னணி குறித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்தடுத்த அசைவுகள் குறித்தும் அவரின் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம்.

``முதலில் தலைவர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மாவட்டப் பொறுப்பைக் கொடுத்தபோது, சீனியர் அமைச்சர்களே ஏளனமாகப் பேசினார்கள். ஆனால், சில மாதங்களிலேயே கொங்கு தி.மு.க-வை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பிவிட்டார் செந்தில் பாலாஜி. எனினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் ஒரு தொகுதிகூட ஜெயிக்காதது அவர்மீது சிறு அதிருப்தியை ஏற்படுத்தியது உண்மைதான். அதை உடைக்க உள்ளுக்குள் சில நகர்வுகளை மேற்கொண்டுவந்தார். அதன்படிதான் இந்தக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றிருக்கிறது.

கோவை பொதுக்கூட்டம்
கோவை பொதுக்கூட்டம்

முதல்வர் முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 55,000 பேர் இணைந்தனர். அவர்கள் அனைவருமே கோவை மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர்கள். 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அவர்கள் திடலுக்கு அழைத்துவரப்பட்டனர். ஆச்சிப்பட்டி திடலில் இருந்தவர்கள் மொத்தமுமே கட்சியில் சேர வந்தவர்கள்தான். அவர்களைத் தவிர லோக்கல் கட்சியினர்கூட அனுமதிக்கப்படவில்லை. சிலர் ‘55,000 பேர் என்று வாய்மொழியாகச் சொல்லிவிடலாம், யார் எண்ணிப் பார்க்கப்போவது?’ என்று சொல்கின்றனர்.

கட்சியில் இணைந்த 55,000 பேரின் அடையாள அட்டைகளும், வாக்காளர் அட்டைகளும் எங்களிடம் இருக்கின்றன. ஒவ்வொருவரையும் வெரிஃபை செய்த பின்னர்தான் திடலுக்குள் அனுப்பினோம். லோக்கல் தி.மு.க-வினர் திடலுக்கு வெளியிலும், திடலிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்துக்கு முதல்வருக்கு வரவேற்பும் அளித்தனர்.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்கள்
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்கள்

இதுவரை முன்னாள் எம்.எல்.ஏ-க்களை கட்சிக்குள் இழுத்துக் கொண்டுவந்தாகிவிட்டது. அதனால், செந்தில் பாலாஜியின் அடுத்த டார்கெட் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்தான். எந்தவொரு சிட்டிங் எம்.எல்.ஏ-வும் தி.மு.க-வில் இணைய மாட்டார்கள். ஏனெனில், இணைந்த அடுத்த கணமே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவரின் எம்.எல்.ஏ பதவி காலியாகிவிடும். தெரிந்தே எவரும் எம்.எல்.ஏ பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதனால், கட்சியில் இணைய வாருங்கள் என்று சொல்லாமல், உங்கள் கட்சியிலிருந்து தனி அணியாகப் பிரிந்து செயல்படுங்கள் என்றுதான் செந்தில் பாலாஜி பேசிவருகிறாராம்.

2011 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்து, அதில் 29 எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றனர். அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக சில மாதங்களுக்குள்ளேயே அ.தி.மு.க-தே.மு.தி.க இடையே விரிசல் உண்டானது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

சட்டமன்றத்தில் இரு கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டபோது, விஜயகாந்த் நாக்கைத் துருத்தி எச்சரிக்கை செய்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம். அந்த மோதலுக்குப் பின்னர், தே.மு.தி.க-வை நிர்மூலமாக்க நினைத்த ஜெயலலிதா, அந்தக் கட்சியிலிருந்து விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பராக இருந்த சுந்தரராஜன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ-க்களைத் தனி அணியாகப் பிரித்தார் எனச் சொல்வதுண்டு.

தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் ஜெ.வுடன்
தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் ஜெ.வுடன்

அது போன்றே, அ.தி.மு.க-வுக்குள் நடைபெற்றுவரும் பிரச்னையில் கட்சியே இரண்டாகக் கிடக்கிறது. நீதிமன்றத்தில் எந்த அணி ஜெயிக்கும், தேர்தல் ஆணையம் எந்த அணிக்கு ஆதரவளிக்கும் என்பதே தெரியாமல் பலர் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

65 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் முன்னாள் அமைச்சர்கள், பன்னீர் ஆதரவாளர்கள் தவிர்த்து, மீதமிருக்கும் 25-க்கும் மேற்பட்டோர் இரு அணிகளில் எந்த அணியையும் சாராதவர்கள். அவர்கள்தான் செந்தில் பாலாஜியின் டார்கெட். அவர்களிடம்தான் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. அநேகமாக, முதற்கட்டமாக குறைந்தது ஐந்து எம்.எல்.ஏ-க்களாவது தனி அணியாகப் பிரிய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே ஸ்கோர் செய்துவரும் செந்தில் பாலாஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை இழுத்துவிட்டால் பெரிய அளவில் ஸ்கோர் செய்வார்” என்றனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜிக்கு முட்டுக்கொடுத்தாலும், எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை. பாரம்பர்ய தி.மு.க-வினர் சிலர் நம்மிடம், ``இதற்கு முன்பாக லட்சக்கணக்கிலெல்லாம் மாற்றுக்கட்சியினர் தி.மு.க-வில் ஒரே நேரத்தில் இணைந்திருக்கிறார்கள். அதனால், இது ஒன்றும் புதிதல்ல. முக்கியமானவர்கள் என்று பார்த்தால் வெறும் மூவர் மட்டுமே. அந்த 55,000 பேரை யாரும் எண்ணிப்பார்க்கப் போவதில்லை, அதனால் தோன்றிய கணக்கைக்கூடச் சொல்லலாம். ஆனால், முக்கியமானவர்களைப் பொறுத்தவரை அவர்கள்தான் ஊடகங்களிலும், மக்கள் மனதிலும் நிற்கப்போகிறவர்கள் என்பதால், அவர்களது எண்ணிக்கைதான் அதிகமிருக்க வேண்டும். அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ-க்களிடம் செந்தில் பாலாஜி பேசிக்கொண்டிருக்கிறார் என்கிற தகவல் பல காலமாகவே வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை கோவையில் அல்லது கொங்குப் பகுதியில் அப்படி ஒருவரை தி.மு.க-வில் இணைத்துவிட்டாலும் செந்தில் பாலாஜி ஸ்கோர் செய்ததை ஒப்புக்கொள்கிறோம்” என்கிறார்கள்.