Silk Smitha: `சில்க் ஸ்மிதா என்கிற விஜயலட்சுமி' தெரிந்த பெயர்... தெரியாத கதை!

சில்க் ஸ்மிதாவைப் பற்றி இந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Published:Updated:
Silk Smitha Unknown facts
Silk Smitha Unknown facts
0Comments
Share
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் டைம் மெஷின் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை இயக்குநர்  ஆதிக் ரவிச்சந்திரன் ரீ -கிரியேட் செய்திருக்கிறார். 80களில் வெளியான பல தமிழ்ப்படங்களில் நீக்கமற இடம் பிடித்திருந்தவர் சில்க் ஸ்மிதா. இவரின் வாழ்க்கையை மையப்படுத்தி வித்யா பாலன் நடிப்பில் வெளியான The Dirty Picture படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

'விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட 'சில்க் ஸ்மிதா' 1960  ஆம் ஆண்டு டிசம்பர் 02  தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில் ‘சிலுக்கு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர் பின்னாளில் 'சில்க் ஸ்மிதா' என்றழைக்கப்பட்டார். 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சில்க் ஸ்மிதா பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் இதோ!

Silk Smitha Unknown facts
Silk Smitha Unknown facts

* நாளொன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டு படங்களிலும் அதிகபட்சம் நான்கு படங்களிலும் நடித்தவர்.  நால் கணக்கில் கால்ஷீட் பேசாமல் இத்தனை மணி நேரம் மட்டும்தான் என்று கால்ஷீட் கொடுத்த ஒரே நடிகை இவர்தான். இன்றைக்கு தருகிறேன், நாளைக்குத் தருகிறேன் என்று இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்கள் நடிக்கச் சொல்லி அழைத்தால், முழுத் தொகையையும் எண்ணி வைத்த பிறகே செட்டிற்குள் நுழைவாராம்.  

*காலையில்‌ ஐந்தரை மணிக்கே எழுந்து வீட்டிலேயே மேக்‌-அப்‌ போட்டுக்‌ கொண்டு கொள்வார். நடனக்‌ காட்சிகளுக்கான உடை (கொஞ்சம்தானே!) டிஸைன்‌, கலர் இவற்றை இவரே தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறார்.படப்பிடிப்பிற்குச்‌ சென்று விட்டால்‌ இவருக்கு வரும்‌ போன்கால்களை இவரது தாயார்தான்‌ அட்டெண்ட்‌ செய்வாராம். 

எத்தனை மணிவரை எந்த படப்பிடிப்பில்‌ சில்க் இருப்பார்‌ என்பதை, தெளிவாக யார்‌ கேட்டாலும்‌ சொல்லக்கூடியவர்.  தமிழைப்‌ புரிந்து கொள்ளுமளவிற்கு சரளமாகப்‌ பேச வராது. தெலுங்கில்‌ பேசினால்‌ விஷயத்தை இன்னும்‌ சுலபமாகக்‌ கிரகித்துக்‌கொள்ள முடியும்‌. தன்னுடைய மகள்‌ பாப்பா- சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், பத்திரிகையில் வரும் செய்திகளையும் ஏக ஆர்வத்தோடு பார்ப்பாராம். நடிக்க வந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகும், வாடகை வீட்டில்தான் குடியிருந்திருக்கிறார். பெங்களூரில் படப்பிடிப்பிற்குச் சென்றபோது ஒரு ரசிகர் இரண்டு நாய்க் குட்டிகளை (பாமரேனியன், அல்சேஷன்) பிரசண்ட் செய்ய, அவற்றை ஆசையோடு வளர்ந்திருந்திருக்கிறார்.

Silk Smitha with her mother
Silk Smitha with her mother

நடிக்க வந்தபோது-மோகனப் புன்னகை-படத்தின்போது இருந்த, எடையைக் காட்டிலும் பதினைந்து கிலோவை வெற்றிகரமாகக் குறைத்திருக்கிறார். “இப்போது இடுப்பு கச்சிதமாக இருக்கிறது. அப்பல்லாம் நான் உட்காரரெண்டு நாற்காலிங்க தேவைப்படும் எல்லாரும் என் உருவத்தைப் பார்த்துக் கிண்டல் செய்வாங்க." என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.   உறவினர்களுடன் எப்போதுமே நெருங்கிய பழக்கம் இருந்ததில்லை. பிரபலமாகிவிட்ட பிறகு மூட்டை முடிச்சுடன் ஓடி வந்து சில உறவினர்கள் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வது படவுலகில் பழக்கம். சில்க் ஸ்மிதாவின் விஷயத்தில் உறவினர்களுடைய குறுக்கீடும், பிக்கல்பிடுங்கலும் இதுவரை வந்ததில்லை.

*யார் எப்படி விமர்சனம் செய்தாலும் சிரித்துக் கொண்டே கேட்பாராம்.  ஆனால், தனிமையில் தன்னைத் தானே எடை போட்டுக் கொண்டு சுதந்திரமாகச் செயல்படுவதுதான் வழக்கம். தனக்குப் பிடித்தமான விஷயத்தை ஆர்வத்தோடு அவர் சொல்லும்போது கேட்பவர் அதை மறுத்துச் சொன்னால், "உங்களுக்கெல்லாம் டேஸ்ட்டே கிடையாது" என்று சிரித்துக் கொண்டு கிண்டல் செய்வாரே தவிர, மூர்க்கத்தனமாகத் தர்க்கம் செய்து கொண்டிருக்கமாட்டார். பழகும்போது மிகவும் கண்டிப்பானவராகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் ரொம்ப் ஸாஃப்ட் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் போன்றவற்றைச் சுலபமாகப் படித்து விடுவார். தெலுங்கு மட்டும்தான் எழுத வரும். 

Silk Smitha Unknown facts
Silk Smitha Unknown facts

*ஒரு வாரம் இவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஒய்வெடுக்க நினைத்தால் போதும்-குறைந்த பட்சம் பத்து தயாரிப்பாளர்களாவது பாதிக்கப்படுவார்களாம். செட் செலவு மற்றும் சக நடிக நடிகையர் கால்ஷீட் விஷயங்களினால் இருபது அல்லது முப்பது லட்ச ரூபாய் முடக்கம் ஏற்பட்டுவிடும். இவருடைய நடனத்தை மட்டும் சேர்த்தால் படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் அளவிற்கு பிசியாக நடித்திருக்கிறார். கால்ஷீட் விஷயங்கள், பண விஷயங்களைக் கவனிக்க இதுவரை செயலாளரோ, உதவியாளரோ வைத்துக்கொண்டதில்லை. இவரே மேனேஜ்  செய்துகொண்டிருந்திருக்கிறார்.

*காலையில் ஒரு சப்பாத்தி, மதியம் விரும்பினால் கொஞ்சம் சாதம், இறால் வகையறா கொஞ்சம், இரவு பல சமயங்களில் சாப்பிடுவதே கிடையாது. இடையிடையே ஜூஸ் அல்லது இளநீர் சாப்பிடுவது வழக்கம்.  பொதுவாக, சாப்பாடு விஷயத்தில் செலவழிப்பதிலும் சிக்கனமானவர்தான்! பண விஷயத்தில் கண்டிப்பானவராக இருந்தாலும், "பணம் இன்றைக்கு வரும், நாளைக்குப் போகும். உண்மையான பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்தும் அம்மாவோ அல்லது யாரோ என்னுடன் இருந்தால் அதுவே எனக்குப் போதும். ஆனாலும் நாம் உழைப்பதற்கேற்ற ஊதியத்தைக் கறாராக வாங்கிக் கொள்வதில் தவறு கிடையாது. நமக்குச் சம்பந்தமில்லாதவர்களுக்காக ஓசியில் ஏன் உழைக்க வேண்டும்?" என்று நெருங்கியவர்களிடம் மனம் விட்டு கூறியிருக்கிறார். 

Silk Smitha Unknown facts
Silk Smitha Unknown facts

திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் ஹேமமாலினி. சில்க் கொடுத்திருந்த பேட்டிகளில் அவருடைய நிஜக் குரலை கேட்டால் யாரும் இவருக்கு ஹேமமாலினி டப்பிங் பேசியிருக்கிறார் என நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இருவரின் குரலும் ஒரே மாதிரியாக இருக்குமாம்.. சில்க் பற்றி ஹேமமாலினி விகடனுக்கு பேட்டி அளித்திருந்தப்போது ஸ்மிதா நல்ல மனசுள்ள பொண்ணு. சின்ன, சின்ன விஷயத்துக்கும் ரொம்பவே எமோஷனல் ஆகிடுவா.

அவளுக்கு நடிகை 'சாவித்திரி'யை ரொம்ப பிடிக்கும். அவங்களை மாதிரி நடிப்பில் சாதிக்கணும்னு அவ ஆசைப்பட்டா. கவர்ச்சியா நடிக்கணும் என்பது அவளோட ஆசையில்லை. என்கிட்டகூட அடிக்கடி 'சாவித்திரி' மாதிரி நடிக்கணும் அக்கான்னு சொல்லுவா. அவ வித்தியாசமான வேடங்களில் நடிக்கணும்னு ஆசைப்பட்டா. ஆனா, சினிமா உலகம் அவளை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டும்தான் பார்த்தது" என்றார்.

சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதா

"நேரம் நன்றாக இருந்தால் எந்தமொழியாக இருந்தாலும் தானாகவே சந்தர்ப்பம் கிடைக்கும். தமிழ்ப் படவுலகில் பழகி விட்டதால் மற்ற மொழிப் படங்களில் நடிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆக்ரமிப்பு செய்யவேண்டும் என்ற ரீதியில் மற்றவர்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நான் எப்போதுமே தட்டிப் பறித்ததில்லை. வாய்ப்பு கிடைத்தால் எந்த மொழியாக இருந்தாலும் நடிக்கத் தயார்" என்று வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட  நடிகை சில்க் ஸ்மிதா.