இதயத்துக்கு இதம், நரைக்குத் திரை- செக்கச் சிவந்த மருத்துவர் செம்பரத்தை!| மூலிகை ரகசியம் - 16

ஆரோக்கியத்தை வாரி வழங்கக்கூடியது இந்த செம்பரத்தைக் குடிநீர். இதனால் தினமும் மலம் முறையாக வெளியேறுவதுடன், வியர்வை நாற்றமும் மறையும். உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி தரக்கூடிய உற்சாக பானமாகவும் செம்பருத்திக் குடிநீர் பயன்படும்.

Published:Updated:
மூலிகை ரகசியம்
மூலிகை ரகசியம்
0Comments
Share

மலர்களைப் பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா? அதுவும் வண்ணமயமான மலர்களுக்கு மருத்துவ குணங்களும் அதிகம் இருந்தால், அம்மலர்கள் தனிச்சிறப்பைப் பெறுகின்றன. அப்படிப்பட்ட மலர்களில் ஒன்றுதான், நாம் பார்க்கப்போகும் செம்பரத்தை!

`அட, செம்பருத்திதானே, செம்பரத்தைனு சொல்கிறீர்களே’ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பருத்தி இனத்தில் ஒரு வகையைத் தான் செம்பருத்தி என்று கூறுவோம். இன்று நமக்குத் தெரிந்த, வீடுகளில் காணப்படும் தாவரத்தின் பெயர் செம்பரத்தை என்பது தான்.

செம்பரத்தை
செம்பரத்தை

கண்களைக் கவரும் செம்பரத்தை மலர்கள், மருத்துவ குணத்திலும் அழகுதான்! செம்பரத்தையின் மலர்கள் மட்டுமன்றி அதன் இலைகளுக்கும் நிறைய பலன்கள் உண்டு. பல்வேறு நிறங்களில் செம்பரத்தை மலர்கள் தற்போது காணப்படுகின்றன. ஹைபிரீடு ரகங்களைவிட நாட்டுரக செம்பரத்தைக்கே மருத்துவ குணங்கள் அதிகம்!

மரபணு மாற்றப்பட்ட உணவுகளும் தாவரங்களும், நமது மரபணுவுக்கு அந்நியமானவை! நாட்டுரக காய்களையும் பழங்களையும் உபயோகப்படுத்துவதே நமது ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

தலைமுடி வலிமைக்கு:

தலைமுடியைப் பராமரிப்பது என்பது தனிக்கலை! அக்காலத்தில் தலைமுடியின் வளர்ச்சிக்காகவும் பொலிவுக்காகவும் பிரத்யேக மூலிகை எண்ணெய்கள் தயாரிக்கப்பட்டன. தலைமுடிக்கான மூலிகை எண்ணெய் ரகங்களின் உதவியால் அக்கால மக்களின் தலைமுடி ஆரோக்கியமாக இருந்தது.

ஆனால், இன்றோ தலைக்கு எண்ணெய் தேய்க்கும் வழக்கம் ஏறக்குறைய மறைந்துவிட்டது. எண்ணெய்க் குளியலையும் மறந்துவிட்டோம்… எண்ணெய் தேய்ப்பதையும் மறந்துவிட்டோம். தலைமுடியைப் பராமரிக்கத் தயாரிக்கப்படும் எண்ணெய்களில் செம்பரத்தையின் இலை மற்றும் பூவின் சாறு தவறாமல் சேர்க்கப்படுகிறது.

செம்பரத்தை
செம்பரத்தை

செம்பரத்தை எண்ணெய்:

தலைமுடியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் கருகருவென இருக்க, பல அடி நீளத்துக்கு உங்கள் கேசம் வளர, எளிமையான மூலிகை ரகசியம் இதோ, உங்களுக்காக! செம்பரத்தைப் பூவிலிருந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் சம அளவு மேற்சொன்ன செம்பரத்தைப் பூச்சாறு சேர்த்து, அடுப்பில் வைத்து சிறு தீயில் காய்ச்சி, தலைமுடிக்கான ஊட்ட எண்ணெயாகப் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் தேய்ப்பதைப் போல இந்த எண்ணெயை அன்றாடம் உபயோகிக்கலாம். தலைமுடி கருகருவென இருப்பதோடு, வலிமையாகவும் இருக்கும். கேசத்துக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமன்றி இந்த செம்பரத்தை எண்ணெய், உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் கொடுக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! வெண்டைக்காயோடு, செம்பரத்தை மலர்களைச் சேர்த்து எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர, பொடுகுத் தொல்லை மறையும்.

செம்பரத்தைப் பூக்களையும் இலைகளையும் உலர வைத்து பொடித்து மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அதிக ரத்தப்போக்கு பிரச்னை குறைவதை உணரலாம். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் இது நல்ல மருந்து. நெடுநாள்களாக இருக்கும் இருமலைக் குறைக்க செம்பரத்தைப் பொடியோடு சிறிது மிளகு சேர்த்து தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.

அடிக்கடி டென்ஷன் ஆகக்கூடிய நபர்களுக்கு, செம்பரத்தை மலர் இதழ்களைத் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, மண்பானையில் ஊறச் செய்து பருகச் சொல்லுங்கள்! செம்பரத்தை பூ இதழ், லவங்கப் பட்டை மற்றும் மருதம் பட்டை பொடி சேர்த்து, மிதமான வெந்நீரில் கலந்து பருகிவர, பதற்றம் காரணமாக உண்டாகும் இதய படபடப்பும் நன்றாகக் குறையும். சில வாரங்களிலேயே பதற்றமும் கோபமும் கட்டுக்குள் வரும்.

செம்பரத்தை
செம்பரத்தை

இதய தசைகளின் வலிமைக்கு:

இதயம்… அதிக அளவில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஓய்வில்லா உறுப்பு. நாட்டு செம்பரத்தை மலர்களின் இதழ்களை, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து லேசாகக் கொதிக்க வைத்து தினமும் பருகிவர இதய தசைகளுக்கு வலிமை கிடைக்கும்! மேலும் மன அழுத்தம், உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, சரிவிகித உணவுடன் தேவைப்படும் உடற்பயிற்சியும் இருந்தால் இதயம் பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டிருக்கும்.

மலர் தோசை சாப்பிடலாமே

மூலிகை தோசையின் பிரிவில், மலர் தோசை எனும் வித்தியாசமான ரெசிப்பியை நீங்கள் முயலலாம். தோசை மாவில் சிறிது சிறிதாக நறுக்கிய செம்பரத்தைப் பூ இதழ்களைக் கலந்து தயாரிக்கப்படும் `மலர்-தோசை’, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய ஸ்பெஷல் ரெசிப்பி.

செம்பரத்தைக் குடிநீர்:

தினமும் நீங்கள் பருகும் தேநீர், காபிக்குப் பதிலாக செம்பரத்தைப் பொடியைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம். இதனால் தினமும் மலம் முறையாக வெளியேறுவதுடன், வியர்வை நாற்றமும் மறையும். உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தரக்கூடிய உற்சாக பானமாகவும் செம்பரத்தைக் குடிநீர் பயன்படும். தேகத்துக்குப் பளபளப்பைக் கொடுத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதால் வேனிற்கால பானமாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

செம்பரத்தை மணப்பாகு…

மலர்களின் உதவியுடன் செய்யப்படும் இனிப்பான `செம்பரத்தை மணப்பாகு’, உடல் வெப்பத்தைக் குறைத்து பலத்தையும் கொடுக்கும் ஸ்வீட் டானிக்! கோடைக்காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சலுக்கான எளிமையான, வீட்டு மருந்தும்கூட.

மூலிகை ரகசியம்
மூலிகை ரகசியம்

செம்பரத்தை மலர்களோடு அதிமதுரம், ஆடாதோடை, சுக்கு, ஏலம் போன்ற மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் செம்பரத்தை – `டீ’, சுவையைக் கொடுப்பதோடு சளி, இருமலுக்குமான மருந்தாகவும் அமையும். செம்பரத்தை மலர்களை வாயிலிட்டு மென்று சுவைக்க, நாப்புண் மறையும். செம்பரத்தை இதழ்களோடு அத்திப் பழம், பால் சேர்த்து அடித்து சாறு போல பருக, உடல்சோர்வு உடனடியாக விலகும்.

பற்ப மருந்துகள்…

இதன் மலர் சாரங்கள், ரத்த சர்க்கரை மற்றும் ரத்தத்தில் அதிகரித்திருக்கும் கொழுப்புச்சத்தின் அளவைக் குறைப்பதாக, எலிகளில் நடைபெற்ற ஆய்வு முடிவு கூறுகிறது. செம்பரத்தையின் இதழ்கள் மனஅழுத்த நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சித்த மருத்துவத்தில் சில வகையான `பற்ப’ மருந்துகளைத் தயாரிப்பதற்கு செம்பரத்தம் பூச்சாறு பயன்படுகிறது. மூலிகைகளைக் கொண்டு சில வகையான மருந்துப் பொருள்களைப் பல நாள்கள் அரைத்து, புடம் போட்டு மருத்துவ நுணுக்கத்துடன் தயாரிக்கப்படுவதே பற்ப மருந்துகள்! மற்ற மருந்துகளைவிட பற்ப மருந்துகளின் ஆயுள்காலமும் நோய் நீக்கும் தன்மையும் மிக அதிகம். அதாவது `எக்ஸ்பைரி டேட்’ அதிகம் என்பது சிறப்பு.

செம்பரத்தை
செம்பரத்தை

தாவரவியல் பெயர்:

Hibiscus rosa-sinensis

குடும்பம்:

Malvaceae

கண்டறிதல்:

பசுமை குன்றாத புதர்ச்செடி அல்லது சிறுமர வகையைச் சேர்ந்தது. இதய வடிவத்தில் நீண்டிருக்கும் இலைகளின் விளிம்பில் வெட்டுப்பற்கள் காணப்படும். சைம் வகை மஞ்சரி.

தாவரவேதிப் பொருள்கள்:

Quercetin, Flavonoids, Kaemperol – 3 – xylosylglucosides, Sterculic acid.

செம்பரத்தை… செக்கச் சிவந்த மருத்துவர்..!