`ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி’- சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை; பாஜக திட்டம் என்ன?

``அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே
0Comments
Share

மகாராஷ்டிரா சிவசேனாவில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி கோஷ்டியில் சேர்ந்துவிட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்துவந்தாலும் அதற்கு போதிய பலன் இல்லாமல் இருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் தங்கியிருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டே ஓரிரு நாளில் மும்பைக்கு வந்து, ஆளுநரைச் சந்தித்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டேயுடன் சென்ற எம்.எல்.ஏ-க்கள்
ஏக்நாத் ஷிண்டேயுடன் சென்ற எம்.எல்.ஏ-க்கள்

சுப்ரீம் கோர்ட்டில் 13 எம்.எல்.ஏ-க்களின் பதவிப் பறிப்புக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான முடிவுக்குப் பிறகு ஷிண்டே மும்பைக்கு வரவிருக்கிறார். இந்த நிலையில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்திருக்கும் பேட்டியில், ``அஸ்ஸாமில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் உடல் மட்டும்தான் திரும்ப வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``அஸ்ஸாமில் தங்கி இருக்கும் 40 எம்.எல்.ஏ-க்களின் ஆத்மா இறந்துவிட்டது. அவர்களின் உடல் மட்டும்தான் மும்பைக்கு வரும். கவுஹாத்தியைவிட்டு வெளியில் வரும் போது அவர்கள் இதயத்தில் உயிருடன் இருக்க மாட்டார்கள். கொளுத்தப்பட்ட நெருப்பில் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆத்மா இல்லாத உடல் மட்டும்தான் அஸ்ஸாமிலிருந்து மும்பைக்கு வரும். அங்கிருந்து நேராக பிரேத பரிசோதனைக்கு, சட்டமன்றத்துக்குச் செல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது எழுந்திருக்கும் அரசியல் நெருக்கடி குறித்து மும்பை பாஜக தலைவர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் 16 எம்.எல்.ஏ-க்கள், ஐந்து சட்டமேலவை உறுப்பினர்கள், எம்.பி-க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தற்போது எழுந்திருக்கும் சூழ்நிலையைச் சமாளிக்க, தொண்டர்களைத் திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு சிவசேனா தொண்டர்களிடையே நடக்கும் சண்டையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கலவரம் ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் 3-ம் தேதி விமான நிலையத்தைச் சுற்றி அதிகப்படியான தொண்டர்கள் இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வீட்டில் பாஜ கட்சியின் முக்கியத் தலைவர்கள் சந்திரகாந்த் பாட்டீல், ஆசிஷ் ஷெலார் உட்பட பலர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

மகாராஷ்டிரா சட்டமன்றம்
மகாராஷ்டிரா சட்டமன்றம்

இதில் தங்களை ஆட்சியமைக்க அழைக்கும்படி உரிமை கோரி ஆளுநரைச் சந்திப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் அதற்கு பாஜக இன்னும் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறது. `இந்த விவகாரத்தில் பாஜக விட்டுக்கொடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. தேவேந்திர பட்னாவிஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தன்னை எப்போதும் முதல்வராகவே நினைத்துக்கொண்டு வாழ்ந்துவருகிறார். எனவே, அவர் ஒருபோதும் ஷிண்டேயை முதல்வராக்கச் சம்மதிக்க மாட்டார்’ என்று பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

துணை முதல்வர் பதவி வேண்டுமானால் ஷிண்டேவுக்குக் கொடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தனர். அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் எப்போது மும்பைக்கு வருவார்கள் என்பது குறித்து அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த தீபக் கேசர்கர் அளித்த பேட்டியில், ``அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்னும் மூன்று நாள்களில் முடிவு செய்த பிறகு மகாராஷ்டிராவுக்கு வருவோம்” என்று தெரிவித்தார். இதற்கிடையே தற்போதிருக்கும் சிவசேனா கூட்டணி அரசு இன்னும் 2-3 நாள்கள் மட்டுமே இருக்கும் என்று மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே தெரிவித்திருக்கிறார்.