``மிட்டாய் கொடுக்க மாட்டாங்கடா.. ஊர்ல கட்டுப்பாடு வந்திருக்கு” - பள்ளி சிறுவர்களிடம் சாதிய பாகுபாடு

``ஊர்க் கட்டுப்பாடு இருப்பதால் உள்ளூர் கடையில் யாரும் தின்பண்டங்கள் வாங்கக் கூடாது. வீட்லயும் போய் எல்லாரிடமும் சொல்லுங்க” என்று குழந்தைகளிடம் கடைக்காரர் பேசுகிறார்.

Published:Updated:
சாதிய பாகுபாடு காட்டப்பட்ட சிறுவர்கள்
சாதிய பாகுபாடு காட்டப்பட்ட சிறுவர்கள்
0Comments
Share

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவுக்கு உள்பட்ட கிராமம், பாஞ்சாகுளம். அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்துவரும் அந்த கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் உள்ளூரைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் படித்து வருகிறார்கள்.

அந்த பள்ளிக்கு அருகில் உள்ள கடையில் சாதிய பாகுபாடு காரணமாக பட்டியலின சிறுவர், சிறுமியருக்கு தின்பண்டங்கள் கொடுக்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருவதால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வீடியோவில், வழக்கம்போல பள்ளிக்கு அருகில் இருக்கும் கடையில் மிட்டாய் வாங்குவதற்காகச் சிறுவர்கள் செல்கிறார்கள். அப்போது கடைக்காரர், “நீங்க யாரும் உள்ளூர் கடையில் தின்பண்டம் வாங்கக் கூடாது. ஸ்கூலுக்குப் போங்க... உங்க வீட்ல எல்லோரிடமும், ‘தின்பண்டம் கொடுக்க மாட்டேங்குறாங்க’னு சொல்லுங்க.. போங்க” என்கிறார்.

கடையின் முன்பாக ஏமாற்றத்துடன் சிறுவர்கள்
கடையின் முன்பாக ஏமாற்றத்துடன் சிறுவர்கள்

வழக்கமாக காசு கொடுத்தால் தின்பண்டம் கொடுக்கும் கடைக்காரர் இன்று ஏதோ சொல்கிறாரே என்கிற குழப்பத்தில் கையில் காசுடன் சிறுவர்கள் கடை முன்பாக நிற்கிறார்கள். அதைப் பார்த்த கடைக்காரர், “கொடுக்க மாட்டாங்கடா.. ஊர்ல கட்டுப்பாடு வந்திருக்கு” என்று விளக்கம் கொடுக்கிறார். அதைப் புரிந்துகொள்ளக் கூட பக்குவம் இல்லாத சிறிய வயது சிறுவர்கள், அப்பாவியாக, ‘கட்டுப்பாடா..?’ என்று சந்தேகமாகக் கேட்கிறார்கள்

சிறுவர்களிடம் விளக்கம் அளிக்கும் கடைக்காரர், ‘கட்டுப்பாடுன்னா.. ஊர்ல ஒரு கூட்டம் போட்டுப் பேசிருக்கு..உங்க தெருவுல யாருக்கு எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு பேசிருக்கு, சரியா? போங்க..” என்கிறார். எதுவும் புரியாத சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

உங்க தெருவில் யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு கூட்டம் போட்டு முடிவு செஞ்சிருக்காங்க.
கடைக்காரர்

இது குறித்து உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது, “இந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் பிற்பட்ட சமூகத்தினருக்கும் பட்டியலின சமூகத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். சில வருடங்களுக்கு முன்பு கூட கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக இரு சமூகத்தினர் மோதிக் கொண்டனர். கடந்த ஒரு வருடங்களாக எந்த சச்சரவும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் சம்பவம் இரு தரப்பினரிடமும் மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கியிருக்கிறது.

சம்பவம் பற்றிய வீடியோ வைரலானதால் பாஞ்சாகுளம் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்காசி எஸ்.பி-யான கிருஷ்ணராஜ் உத்தரவுப்படி வீடியோவில் பேசும் கடைக்காரரான ராமச்சந்திர மூர்த்தி என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஊரில் சாதிய பாகுபாடு ஏற்படும் வகையில் கட்டுப்பாடு விதித்தது யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது” என்றார்கள்.

ஏமாற்றத்துடன் சிறுவர்கள்
ஏமாற்றத்துடன் சிறுவர்கள்

தன் வாழ்நாள் முழுவதும் சாதிய பாகுபாடு மறைவதற்காக மேடைதோறும் பேசிவந்த பெரியாரின் 144 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதே நாளில் மழலை மாறாத பள்ளிச் சிறுவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க கூடாது என கட்டுப்பாடும் போடும் அளவுக்கு சாதியம் புரையோடிப் போயிருப்பது சமூக ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்திருக்கிறது.