பெண்ணுரிமை ட்வீட்; 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை - சவுதிப் பெண்ணுக்கு வலுக்கும் ஆதரவுக் குரல்கள்!

சமூக ஆர்வலர்களைப் பின்தொடர்ந்து, ட்வீட் செய்த சவுதி பெண்ணுரிமை ஆர்வலருக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சவுதிப் பெண்ணுக்கு வலுக்கும் ஆதரவுக் குரல்கள்
சவுதிப் பெண்ணுக்கு வலுக்கும் ஆதரவுக் குரல்கள்
0Comments
Share

ட்விட்டரில் சமூக ஆர்வலர்களைப் பின்தொடர்ந்து, ட்வீட் செய்த சவுதி பெண்ணுரிமை ஆர்வலருக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

33 வயதாகும் சல்மா அல்-ஷெஹாப் சவுதி அரேபியாவிலுள்ள இளவரசி நூரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். சல்மா இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பயின்றுவருகிறார்.

சல்மா அல்-ஷெஹாப்
சல்மா அல்-ஷெஹாப்

முன்னதாக கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் ட்விட்டரில் சல்மா அல்-ஷெஹாப் செய்த ட்வீட் ஒன்றுக்கு, `பொது அமைதியின்மை மற்றும் சிவில் மற்றும் தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்க' இணைய வலைதளத்தைப் பயன்படுத்தியதாக அரசுத் தரப்பில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சல்மா, மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு கடந்த திங்களன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சல்மாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், சிறைத் தண்டனையை 34 ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டது.

சிறை
சிறை

இந்த நிலையில் சல்மாவுக்கு விதிக்கப்பட்ட இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து மனித அமைப்புகள் பலவும் அவரை விடுதலை செய்யுமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்துவருகின்றன. இது குறித்து `The Freedom Initiative' என்ற அமைப்பு, ``சல்மாவை விடுவிக்குமாறு சவுதி அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், இங்கிலாந்தில் அவரின் படிப்பைப் பாதுகாப்பாக முடிக்கவும் அவரை விடுதலை செய்ய வேண்டும். பெண்களின் உரிமை குறித்து ஆர்வலர்களுடன் ட்வீட் செய்வது குற்றமல்ல" என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.